
ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடர் மார்ச் 22ஆம் தேதி துவங்குகிறது. அந்தத் தொடரில் மும்பை அணிக்காக கோப்பையை வெல்ல புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியா தயாராகி வருகிறார். 5 கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மாவை வருங்காலத்தை கருத்தில் கொண்டு கழற்றி விட்ட மும்பை நிர்வாகம் பாண்டியாவை குஜராத் அணியிலிருந்து வலுக்கட்டாயமாக வாங்கி தங்களது புதிய கேப்டனாக அறிவித்தது.
அதற்கு மும்பை ரசிகர்களே வான்கடே மைதானம் மட்டுமின்றி செல்லும் இடங்களில் எல்லாம் பாண்டியாவுக்கு எதிராக கூச்சலிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த எதிர்ப்புக்கு மத்தியில் மோசமாக விளையாடிய மும்பை புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்து வெளியேறியது. இந்நிலையில் மும்பை ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்த போது ஓடி ஒளியவில்லை என்று ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
மேலும் 2024 டி20 உலகக் கோப்பை, 2025 சாம்பியன்ஸ் கோப்பை வென்றதால் தற்போது அனைத்தும் 360 டிகிரியில் மாறியுள்ளதாகவும் பாண்டியா கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இவை அனைத்தும் நீங்கள் போர்க்களத்தை விட்டு வெளியேறாததைப் பற்றியது. என்னைப் பொறுத்த வரை வெற்றி கிடைக்காவிட்டாலும் அங்கே இருக்க வேண்டும்”
“கடந்த வருடத்தில் நீண்ட காலமாக மைதானத்தில் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. மைதானம் எனும் போர்க்களத்தை விட்டு வெளியேறவில்லை. எது நடந்தாலும் கிரிக்கெட் என்பது என்னுடைய நல்ல நண்பன். அது எனது சிறந்த செயல்பாடுகளை வெளிக்கொண்டு வரும். அதற்காக நீங்கள் தொடர்ந்து கடினமான பயிற்சிகளை எடுத்து உங்களை தள்ள வேண்டும்”
“எனது வாழ்க்கையை மாற்றக்கூடிய ஸ்கிரிப்ட் என்னால் எழுத முடியாது என்று நான் நினைக்கவில்லை. கடந்த 6 மாதங்களில் உலகக் கோப்பையை வென்று மீண்டும் கம்பேக் கொடுத்ததால் நிறைய அன்பு கிடைக்கிறது. அது எனக்கு 360 டிகிரியில் நடந்த மாற்றம் போல் இருக்கிறது. என்னால் நிலைத்து நின்று கடினமாக உழைத்து போராடினால் கிரிக்கெட்டில் மீண்டும் வர முடியும் என்பது தெரியும்”
இதையும் படிங்க: இந்தியாவை விட ஆர்சிபி கஷ்டம்.. 5 இருக்கட்டும் ரஜத் படிதார் ஒரு வருஷம் தாங்குறாரா பாப்போம்.. ஹர்பஜன் பேட்டி
“ஆனால் எனக்கு என்ன நடக்கும் என்று தெரியாத போது என்னுடைய வாழ்க்கையை கடவுள் வெறும் இரண்டரை மாதங்களில் ஸ்கிரிப்ட் எழுதி மாற்றினார். இந்த வருடம் அனுபவத்தைப் பெறுவதே இலக்காக இருக்கிறது. வான்கடே மைதானத்தில் ஐபிஎல் போட்டியில் விளையாடுவது அச்சுறுத்தலாக இருக்கும். எனவே அதில் அசத்துவதற்கு நல்ல பவுலிங் துறை வேண்டும். அங்கே அதிக ரன்கள் அடிக்கப்படும் என்பதால் அதற்குத் தகுந்த வீரர்களை தேர்ந்தெடுத்துள்ளோம். எனவே இம்முறை அனைத்தையும் நாங்கள் திருப்ப வேண்டும்” என்று கூறினார்.