ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தாவில் துவங்குகிறது. இந்த வருடம் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் கொல்கத்தாவை பெங்களூரு அணி எதிர்கொள்கிறது. இம்முறை பெங்களூரு அணி புதிய கேப்டன் ரஜத் படிதார் தலைமையில் களமிறங்குகிறது. 2008 முதல் ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே, விராட் கோலி, ஃபப் டு பிளேஸிஸ் போன்ற தரமான வீரர்கள் வழி நடத்தியும் பெங்களூரு அணியால் இதுவரை கோப்பையை வெல்ல முடியவில்லை.
அப்படிப்பட்ட நிலையில் பெரியளவில் கேப்டன்ஷிப் அனுபவமில்லாத ரஜத் படிதார் அடுத்த 5 வருடங்கள் செயல்படும் தொலைநோக்குடன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையில் பெங்களூரு கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ஆர்சிபி ரசிகர்களிடம் இருந்துள்ளது. 2024 – 25 சயீத் முஷ்டாக் அலி டி20 கோப்பையில் அபாரமாக விளையாடிய அவர் கேப்டனாக மத்தியப்பிரதேச அணியை ஃபைனல் வரை அழைத்துச் சென்றார்.
புதிய பெங்களூரு கேப்டன்:
இந்நிலையில் பெங்களூரு போன்ற ஐபிஎல் அணியை கேப்டனாக வழி நடத்துவது இந்தியாவை தலைமைத் தாங்குவதை விட கடினமானது என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ஒருவேளை இந்த வருடம் பெங்களூரு பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் போனால் ரஜத் படிதார் அடுத்த வருடம் கேப்டனாக நீடிப்பாரா? என்பதே கேள்வியாகும் என்று ஹர்பஜன் கூறியுள்ளார்.
இது பற்றி ஹர்பஜன் பேசியது பின்வருமாறு. “படிதார் போன்றவருக்கு இது மிகப்பெரிய சவால். பெங்களூரு போன்ற பெரிய அணியில் முக்கிய முடிவுகளை எடுப்பது எளிதாக இருக்காது. இதற்கு முன் பெரிய அணியை வழி நடத்திய அனுபவத்தைக் கொண்டிடாத அவருக்கு யார் விளையாட வேண்டும்? எப்போது பவுலிங் செய்ய வேண்டும்? என்ற முடிவுகளை எடுப்பதில் சவால் இருக்கும்”
ஒரு வருடம் தாங்குவாரா:
“இந்திய அணியை வழி நடத்துவது மிகவும் கடினமான செயல் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் ஒரு ஐபிஎல் அணியை வழி நடத்துவது அதை விட கடினமானது. அதை நானும் செய்த அனுபவத்தைக் கொண்டுள்ளேன். பெங்களூரு அணி ஒரு கோப்பையை கூட வெல்லாத காரணத்தால் படிதார் மீது அதிகப்படியான எதிர்பார்ப்புகளும் அழுத்தமும் இருக்கும்”
இதையும் படிங்க: வேறவழியே இல்லாமல் சி.எஸ்.கே அணிக்கெதிராக அர்ஜுன் டெண்டுல்கரை களமிறக்கும் மும்பை இந்தியன்ஸ் – விவரம் இதோ
“அந்த எதிர்பார்ப்புக்கு நிகராக நீங்கள் அசத்த வேண்டும். உங்களுடைய ஆட்டத்தையும் நன்றாக வெளிப்படுத்த வேண்டும். பெங்களூரு அணியில் அனைத்தும் விராட் கோலியை சுற்றியே இருக்கும். ரஜத்தை ஆர்சிபி அணி 5 வருடங்கள் கேப்டனாக நியமித்துள்ளது. ஆனால் இந்த வருடம் சரியாக செல்லவில்லையெனில் அவர் எங்கே நிற்கிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்” எனக் கூறினார்.



