விதிமுறை மீறி கேப்டன்ஷிப் செய்த ஹர்டிக் பாண்டியாவுக்கு.. ஐபிஎல் நிர்வாகம் தண்டனை அறிவிப்பு

- Advertisement -

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 18ஆம் தேதி நடந்த 33வது லீக் போட்டியில் பஞ்சாப்பை 9 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வீழ்த்தியது. முல்லான்பூரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை ரோகித் சர்மா 36, சூரியகுமார் யாதவ் 78, திலக் வர்மா 34* ரன்கள் எடுத்த உதவியுடன் 193 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அதைத் துரத்திய பஞ்சாப்புக்கு கேப்டன் சாம் கரண், ஜித்தேஷ் சர்மா, லியாம் லிவிங்ஸ்டன், ரிலீ ரோசவ் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்க தவறினர். அதனால் கடைசி நேரத்தில் சசாங் சிங் 41, அசுடோஸ் சர்மா 61 ரன்கள் எடுத்துப் போராடியும் பஞ்சாப்பை 183 ரன்களுக்கு கட்டுப்படுத்தி வெற்றி பெற்ற மும்பை சார்பில் அதிகபட்சமாக ஜெரால்டு கோட்சி, பும்ரா தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

- Advertisement -

பாண்டியாவுக்கு தண்டனை:
இந்த வெற்றிக்கு 5.2 என்ற எக்கனாமியில் துல்லியமாக பந்து வீசி 3 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய பும்ரா ஆட்டநாயகன் விருதை வென்றார். இதனால் 7 போட்டிகளில் 3வது வெற்றியை பதிவு செய்த மும்பை புள்ளிப்பட்டியலில் 7வது இடத்திற்கு முன்னேறியது. அதனால் ஹர்திக் பாண்டியாவுக்கு பெரிய நிம்மதி பெருமூச்சு விட்டிருப்பார் என்றே சொல்லலாம்.

ஏனெனில் இந்த வருடம் 5 கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மாவை கழற்றி விட்ட மும்பை நிர்வாகம் வருங்காலத்தை கருத்தில் கொண்டு அவரை புதிய கேப்டனாக நியமித்தது. அதற்கு ஆரம்பம் முதலே மும்பை ரசிகர்களே கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த எதிர்ப்புக்கு மத்தியில் இதுவரை விளையாடிய 7 போட்டியிலும் ஹர்டிக் பாண்டியா பேட்டிங், பவுலிங் ஆகிய எதிலுமே சிறப்பாக விளையாடி தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

- Advertisement -

மேலும் பும்ராவை சரியாக பயன்படுத்தாதது, 20வது ஓவரில் தோனிக்கு எதிராக தாமாக சென்று பந்து வீசியது போன்ற அவருடைய சுமாரான கேப்டன்ஷிப் முடிவுகள் இதுவரை சந்தித்த 4 தோல்விகளுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அந்த சூழ்நிலையில் பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் 20 ஒவர்களை வீசி முடிக்காத மும்பை 18 ஓவர்கள் மட்டுமே வீசியிருந்தது.

இதையும் படிங்க: ஸ்டீவ் ஸ்மித் செய்த அதே மட்டமான வேலை.. மீண்டும் மும்பைக்கு ஆதாரவாக அம்பயர்கள் வழங்கிய 2 தீர்ப்புகள்?

அதனால் களத்திலேயே நடுவுர்கள் உள்வட்டத்திற்கு வெளியே கடைசி 2 ஓவரில் ஒரு ஃபீல்டரை குறைத்து மும்பைக்கு தண்டனை கொடுத்தனர். அதைத் தொடர்ந்து பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்க தவறியதால் மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு 12 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது மும்பையின் முதல் தவறு என்பதால் கேப்டன் பாண்டியாவுக்கு மட்டும் அபராதம் விதிக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement