
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நேற்று கட்டாக் நகரில் நடைபெற்ற முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 101 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தியது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற மிக முக்கியமான காரணமாக ஆல்ரவுண்டான ஹார்டிக் பாண்டியா திகழ்ந்தார். இதன் காரணமாக இந்த முதலாவது டி20 போட்டிக்கான ஆட்டநாயகன் விருதும் அவருக்கே வழங்கப்பட்டது.
ஏனெனில் இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி ஒரு கட்டத்தில் 78 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தவித்திருந்த வேளையில் ஆறாவது வீரராக களமிறங்கிய ஹார்டிக் பாண்டியா 28 பந்துகளை சந்தித்து 6 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர் என 59 ரன்கள் குவித்து அசத்தினார்.
அவரது அதிரடியான ஆட்டம் காரணமாக இந்திய அணி 175 ரன்கள் வரை சென்றது. மேலும் பந்துவீச்சில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய அவர் 2 ஓவர்கள் பந்துவீசி 16 ரன்களை விட்டுக் கொடுத்து டேவிட் மில்லரின் விக்கெட்டை டி20 போட்டிகளில் எட்டாவது முறையாக வீழ்த்தி அசத்தியிருந்தார்.
இந்நிலையில் இந்த போட்டியின் போது விளையாடிய ஹார்டிக் பாண்டியா இந்திய அணிக்காக நான்காவது வீரராக ஒரு மாபெரும் சாதனை ஒன்றினையும் நிகழ்த்தியுள்ளார். அது குறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தயிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் :
நேற்றைய போட்டியில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக அவர் அடித்த 4 சிக்ஸர்களின் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் 100 சிக்ஸர்களை பூர்த்தி செய்தார். இதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக 100 சிக்ஸர்களை அடித்த நான்காவது இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இதையும் படிங்க : எனக்கு அப்றம் சாதனை படைத்த பும்ரா பாயை வெல்கம் பண்ணேன்.. இதெல்லாம் அரிதாகவே கிடைக்கும்.. அர்ஷ்தீப் சிங்
இதற்கு முன்னதாக ரோகித் சர்மா 205 சிக்ஸர்களுடன் முதலிடத்திலும், சூரியகுமார் யாதவ் 155 சிக்ஸர்களுடன் இரண்டாவது இடத்திலும், விராட் கோலி 124 சிக்சர்களுடன் மூன்றாவது இடத்தில் இருக்கும் வேளையில் நான்காவது வீரராக ஹார்டிக் பாண்டியா இந்த பட்டியலில் 100 சிக்ஸர்களுடன் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.