IND vs ENG : யுவியின் 12 வருட சாதனையை சமன்செய்த பாண்டியா. வெளியான புள்ளிவிவரம் – பாராட்டும் ரசிகர்கள்

Pandya
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்கும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி ஜூலை 7-ஆம் தேதியான நேற்று இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு துவங்கியது. சௌதாம்ப்டனில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அதிரடியாக 198/8 ரன்கள் சேர்த்தது. இந்தியாவுக்கு தொடக்க வீரர் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா ஆரம்பத்திலேயே 5 பவுண்டரி பறக்கவிட்டு 24 (14) ரன்களில் ஆட்டமிழக்க அவருடன் களமிறங்கிய இஷான் கிசான் தடுமாறி 8 (10) ரன்களில் அவுட்டானார்.

இருப்பினும் 3-வது இடத்தில் அட்டகாசமாக பேட்டிங் செய்த தீபக் ஹூடா 3 பவுண்டரி 2 சிக்சருடன் 33 (17) ரன்களும் நம்பிக்கை நட்சத்திரம் சூர்யகுமார் யாதவ் 4-வது இடத்தில் 4 பவுண்டரி 2 சிக்சருடன் 39 (19) ரன்கள் விளாசி ஆட்டமிழந்தனர். அவர்களைவிட மிடில் ஆர்டரில் அதிரடி காட்டிய ஹர்திக் பாண்டியா 6 பவுண்டரி 1 சிக்சருடன் அரைசதம் அடித்து 51 (33) ரன்களைக் குவித்து முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தார். கடைசியில் அக்ஷர் பட்டேல் 17 (12) ரன்களும் தினேஷ் கார்த்திக் 11 (7) ரன்களும் எடுக்க இங்கிலாந்து சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக மொய்ன் அலி மற்றும் கிறிஸ் ஜோர்டான் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

- Advertisement -

மிரட்டல் பவுலிங்:
அதை தொடர்ந்து 199 என்ற இலக்கை துரத்திய இங்கிலாந்துக்கு முதல் ஓவரிலிருந்தே இந்தியா மிரட்டலாக பந்து வீசியது. ஏனெனில் சமீபத்திய ஐபிஎல் தொடரில் 863 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்று வெறித்தனமான பார்மில் இருக்கும் புதிய கேப்டன் பட்லர் புவனேஷ்வர் குமாரின் முதல் ஓவரிலேயே கோல்டன் டக் அவுட்டானார். அதைவிட டேவிட் மாலன் 21 (14) லியாம் லிவிங்ஸ்டன் 0 (3) என என அதிரடி பேட்ஸ்மேன்களை ஒரே ஓவரில் அனலாக பந்துவீசி காலி செய்த ஹர்திக் பாண்டியா அதோடு நிற்காமல் ஜேசன் ராயை 4 (16) ரன்களில் பெவிலியன் திருப்பி வைத்தார்.

அதனால் 33/4 என திணறிய இங்கிலாந்தை காப்பாற்ற 5-வது விக்கெட்டுக்கு 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து போராடிய ஹரி ப்ரூக் 28 (23) ரன்களிலும் மொய்ன் அலி 36 (20) ரன்களிலும் சஹாலின் மாயாஜால சுழலில் அடுத்தடுத்த ஓவர்களில் அவுட்டானார்கள். இறுதியில் கிறிஸ் ஜோர்டான் 26* (17) ரன்கள் எடுத்து போராடினாலும் எதிர்ப்புறம் வந்த சாம் கரண் 4 (4) போன்ற வீரர்கள் இந்தியாவின் தரமான பந்துவீச்சில் அடுத்தடுத்து அவுட்டானதால் 19.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து 148 ரன்களுக்குச் சுருண்டது.

- Advertisement -

நாட்டுக்காக அசத்தல்:
இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார் மற்றும் அர்ஷிதீப் சிங் தலா 2 விக்கெட்களை எடுத்தனர். அவர்களை விட அனலாக பந்துவீசி 4 விக்கெட்டுகளையும் மிரட்டலாக பேட்டிங் செய்து 55 ரன்கள் எடுத்து ஆல் ரவுண்டராக அசத்திய ஹர்திக் பாண்டியா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். கடந்த 2016இல் அறிமுகமாகி 2018 முதல் 3 வகையான கிரிக்கெட்டிலும் முதன்மை ஆல்-ரவுண்டராக உருவெடுத்த இவர் 2019 உலக கோப்பைக்கு பின்பாக காயத்தால் பந்துவீச முடியாமல் பேட்டிங்கிலும் சுமாராகவே செயல்பட்டார்.

இருப்பினும் 2021 டி20 உலக கோப்பையில் தேர்வு செய்யப்பட்ட நிலைமையில் பந்து வீசாமல் சுமாராக பேட்டிங் செய்ததால் கடுப்பான தேர்வுகுழு இந்திய அணியில் இருந்து அதிரடியாக நீக்கியது. அதற்காக மனம் தளராத அவர் கடுமையாக உழைத்து சமீபத்திய ஐபிஎல் 2022 தொடரில் மிகச்சிறந்த ஆல்-ரவுண்டராக செயல்பட்டு அனுபவமில்லாத கேப்டன்ஷிப் பதவியில் முதல் வருடத்திலேயே கோப்பையை வென்று அதே தேர்வுகுழுவினர் தாமாக முன்வந்து தேர்வு செய்யும் அளவுக்கு மாஸ் கம்பேக் கொடுத்தார்.

- Advertisement -

இருப்பினும் ஐபிஎல் தொடரில் மட்டும் சிறப்பாக செயல்படுவார் நாட்டுக்காக என்றால் சுமாராக செயல்படுவார் என்ற பரவலான விமர்சனம் இவர் மீது நிலவுகிறது. ஆனால் தென் ஆப்ரிக்க தொடரில் அற்புதமாக பேட்டிங் செய்து இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய அவர் சமீபத்தில் அயர்லாந்து தொடரில் 2 – 0 என்ற கணக்கில் கேப்டனாக கோப்பையை வென்று நாட்டுக்காகவும் சிறப்பாக செயல்படுவேன் என்று நிரூபித்துக் காட்டினார்.

யுவியை முந்தி:
அந்த வரிசையில் இப்போட்டியில் பந்துவீச்சில் மாலன், ராய், லிவிங்ஸ்டன், சாம் கரண் என்ற 4 முக்கிய பேட்ஸ்மேன்களை சாய்த்து பேட்டிங்கில் அற்புதமாக செயல்பட்டு கபில் தேவை போல இந்தியாவுக்கு மகத்தான வெற்றியைப் பெற்றுக் கொடுத்துள்ளார். இதனால் நாட்டுக்காக இந்த ஆட்டம் போதுமா என்ற வகையில் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ள அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் 50+ ரன்கள் மற்றும் 3+ விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் என்ற யுவராஜ் சிங்கின் சாதனையை சமன் செய்துள்ளார்.

இதையும் படிங்க : இங்கிலாந்து மண்ணில் இந்த சாதனையை செய்யும் முதல் இந்திய வீரர் நான்தான் – ஆட்டநாயகன் பாண்டியா மகிழ்ச்சி

ஆம் கடந்த 2009இல் இலங்கைக்கு எதிராக நடந்த டி20 போட்டியில் 3 விக்கெட்டுகள் எடுத்த யுவராஜ் சிங் அந்த அணி நிர்ணயித்த 207 ரன்கள் இலக்கைத் துரத்தும் போது 60* (25) ரன்களைக் குவித்து இந்தியாவுக்கு 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று கொடுத்தார். அவருக்குப்பின் 12 வருடங்கள் கழித்து இப்போதுதான் அது போன்ற ஒரு அற்புதமான ஆல்-ரவுண்டர் செயல்பாட்டை ஹர்திக் பாண்டியா வெளிப்படுத்தி சாதனை படைத்துள்ளார்.

Advertisement