கடந்த சில ஆண்டுகளாகவே காயம் காரணமாக தொடர்ந்து இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்து வந்த ஹார்டிக் பாண்டியா அறுவை சிகிச்சைக்கு பிறகு நீண்ட நாட்களாக இந்திய அணியில் பங்கேற்காமல் இருந்தார். அதே வேலையில் தான் முழுவதுமாக சிறப்பாக விளையாடும் வேளையில் தன்னை இந்திய அணிக்கு தேர்வு செய்யுமாறும் கூறிவிட்டு ஓய்வெடுத்துக் கொண்ட பாண்டியா தனது பிட்னஸ் மற்றும் பயிற்சியில் அதிக கவனத்தை எடுத்துக் கொண்டார். அதன்படி முறையான பயிற்சி மற்றும் பிட்னஸ் முறைகளை கடைபிடித்த பாண்டியா அண்மையில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு கேப்டனாக செயல்பட்டது மட்டுமின்றி பேட்டிங், பவுலிங் என அசத்தலாக செயல்பட்டு அந்த அணிக்கு முதன்முறையாக ஐபிஎல் கோப்பையை பெற்று தந்தார்.

அதன் பிறகு மீண்டும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இடம் பிடித்த பாண்டியா அந்த தொடரிலும் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தவே அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் முறையாக இந்திய அணியை கேப்டனாகவும் வழிநடத்தினார். இப்படி தொடர்ச்சியாக ஐபிஎல் தொடருக்கு பிறகு அசத்தி வரும் பாண்டியா உலகக் கோப்பை அணியிலும் முக்கிய வீரராக இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டி20 தொடரிலும் இடம் பிடித்து விளையாடி வருகிறார். அதன்படி நேற்று நடைபெற்று முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்த அவர் ஒரு முக்கிய காரணமாக திகழ்ந்து ஆட்டநாயகன் விருதினை பெற்றார். பேட்டிங்கில் 33 பந்துகளை சந்தித்த அவர் 6 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 51 ரன்களை குவித்தார்.

அதோடு பந்துவீச்சிலும் இங்கிலாந்து அணியின் நான்கு முக்கிய வீரர்களை வீழ்த்தி அசத்தலான பவுலிங்கை வெளிப்படுத்தினார். இப்படி பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே அசத்திய அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் போட்டி முடிந்து இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த ஆட்டம் குறித்து அவர் கூறுகையில் : நான் கடைசியாக இங்கிலாந்தில் விளையாடிய போது டி20 கிரிக்கெட்டில் நான்கு விக்கெட் மற்றும் 30 ரன்கள் எடுத்தேன்.
ஆனால் இம்முறை நான்கு விக்கெட் மற்றும் 50 ரன்கள் குவித்துள்ளேன். எனக்கு தெரியும் டி20 கிரிக்கெட்டில் இங்கிலாந்து மண்ணில் அரைசதம் மற்றும் நான்கு விக்கெட்டுகளை ஒரே போட்டியில் வீழ்த்தும் முதல் இந்திய வீரர் நான் தான். தற்போதைக்கு என்னுடைய கிரிக்கெட்டை மிகவும் ரசித்து விளையாடி வருகிறேன். இதற்கு முந்தைய ஓய்வு என்னை உடல் ரீதியாக தயார் படுத்திக் கொள்ள உதவியது.
இதையும் படிங்க : IND vs ENG : ஒரே ஓவரில் போட்டியை மாற்றிய புவி, மீண்டும் தனது தரத்தை நிரூபித்து படைத்த சூப்பரான சாதனை இதோ
மேலும் நான் எடுத்துக் கொண்ட கடந்த கால ஓய்வு தற்போது எனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள உதவுகிறது. நான் இந்திய அணிக்காக என்னுடைய 100 சதவீதத்தை வழங்க நினைக்கிறேன். அதற்காகவே ஓய்வு எடுத்துக்கொண்டு மீண்டும் நல்ல பிட்னஸ் உடன் அணிக்கு திரும்பியுள்ளேன். நிச்சயம் என்னுடைய இடத்தை சரியான முறையில் பயன்படுத்தி இந்திய அணிக்கு வெற்றிகளை குவிக்க விரும்புவதாக பாண்டியா கூறியது குறிப்பிடத்தக்கது.



