IND vs PAK : இந்தியாவை அவமானத்திலிருந்து காப்பாற்றிய இஷான் – பாண்டியா ஜோடி, டிராவிட் – யுவியின் 19 வருட சாதனையை உடைத்து அபாரம்

- Advertisement -

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய 2023 ஆசிய கோப்பையின் முக்கியமான லீக் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. செப்டம்பர் 2ஆம் தேதி இலங்கையின் கண்டி நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா தடுமாற்றமான பேட்டிங்கை வெளிப்படுத்தி கடுமையான போராடி 48.5 ஓவரில் 266 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிலும் கேப்டன் ரோஹித் சர்மா 11, சுப்மன் கில் 10, விராட் கோலி 4, ஸ்ரேயாஸ் ஐயர் 14 என டாப் 4 வீரர்கள் எதிர்பார்த்ததை போலவே பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்காமல் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

இருப்பினும் மிடில் ஆர்டரில் மிகச் சிறப்பாக விளையாடிய இஷான் கிசான் பாகிஸ்தான் பவுலர்களுக்கு வளைந்து கொடுக்காமல் மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி 82 (81) ரன்களும் அவருடன் மறுபுறம் அசத்திய ஹர்டிக் பாண்டியா 87 (90) ரன்களும் எடுத்து இந்தியாவை ஓரளவு காப்பாற்றினர். பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஷாஹீன் அப்ரிடி 4 விக்கெட்களையும் ஹரிஷ் ரவூப், நசீம் ஷா தலா 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 266 ரன்களை பாகிஸ்தான் துரத்தும் போது வந்த மழை மொத்தமாக போட்டியை ரத்து செய்தது.

- Advertisement -

காப்பாற்றிய ஜோடி:
முன்னதாக இப்போட்டியில் சாகின் அப்ரிடி, ஹரிஷ் ரவூப் போன்றவர்கள் புதிய பந்தை ஸ்விங் செய்து மிரட்டுவார்கள் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு ரோகித் சர்மா போன்ற இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை முன்னாள் வீரர்கள் எச்சரித்திருந்தனர். ஆனாலும் இப்போட்டியில் பாகிஸ்தான் பவுலர்களுக்கு சொல்ல முடியாத டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் விராட் கோலி கூட சொற்ப ரன்னில் அவுட்டாகி ஏமாற்றியதால் 66/4 என ஆரம்பத்திலேயே சரிந்த இந்தியா 150 ரன்கள் தாண்டுமா என்ற கவலை இந்திய ரசிகர்களுக்கு ஏற்பட்டது.

இருப்பினும் அப்போது மிடில் ஆர்டரில் இடது மற்றும் வலது கை பேட்ஸ்மேன்களாக ஜோடி இஷான் கிசான் – ஹர்திக் பாண்டியா ஆகியோர் ஆரம்பத்தில் நிதானமாகவும் நேரம் செல்ல செல்ல அதிரடியாகவும் விளையாடி இந்தியாவை சரிவிலிருந்து காப்பாற்றினர். குறிப்பாக 14வது ஓவரில் சேர்ந்து 38 ஓவர்கள் வரை நங்கூரமாக நின்று மிடில் ஓவர்களில் பாகிஸ்தான் பவுலர்களுக்கு மிகப்பெரிய சவாலை கொடுத்த இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 138 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை காப்பாற்றியது.

- Advertisement -

ஒருவேளை அவர்களும் சொற்ப ரன்களில் அவுட்டாகியிருந்தால் நிச்சயமாக இந்தியா 200 ரன்களை கூட தாண்டாமல் பாகிஸ்தானுக்கு எதிராக குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்து அவமானத்தை சந்தித்திருக்கும் என்றே சொல்லலாம். இருப்பினும் அதிலிருந்து காப்பாற்றிய இந்த ஜோடி ஆசிய கோப்பை வரலாற்றில் 5வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்திய ஜோடி என்ற யுவ்ராஜ் சிங் – ராகுல் டிராவிட் ஆகியோரின் 19 வருட சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்தது. அந்த பட்டியல்:

1. இஷான் கிசான் – ஹர்டிக் பாண்டியா : 138, பாகிஸ்தானுக்கு எதிராக, 2023*
2. ராகுல் டிராவிட் – யுவராஜ் சிங் : 133, இலங்கைக்கு எதிராக, 2004
3. எம்எஸ் தோனி – ரோஹித் சர்மா : 112, பாகிஸ்தானுக்கு எதிராக, 2008
4. எம்எஸ் தோனி – ரோஹித் சர்மா : 79, இலங்கைக்கு எதிராக, 2010

இதையும் படிங்க: என்னாது அன்லக்கியா? அவருக்கு பேட்டிங் செய்ய தெரிலன்னு சொல்லுங்க – விராட் மீது கரிசனம் காட்டிய வகார் யூனிஸ் – தாக்கிய கம்பீர்

அதில் இசான் கிசான் 9 பவுண்டரி 2 சிக்ஸருடன் 82 (81) ரன்களும் ஹர்டிக் பாண்டியா 7 பவுண்டரி 1 சிக்ஸருடன் 87 (99) ரன்களும் எடுத்து அவுட்டாகி சதங்களை தவறவிட்டாலும் இந்தியாவை காப்பாற்றிய பெருமையுடன் பெவிலியன் திரும்பியது குறிப்பிடத்தக்கது.

Advertisement