
அனல் தெறித்து வரும் ஐபிஎல் 2022 தொடர் பல பரபரப்பான திருப்பங்களுடன் வெற்றிகரமான 4-வது வார்த்தை கடந்து ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறது. இதில் புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்காக தற்போது நடைபெற்று வரும் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்றில் அனைத்து அணிகளும் பலப்பரிட்சை நடத்தி வருகின்றன. அதில் இதர அணிகளும் ரசிகர்களும் வாய் மேல் கை வைக்கும் வகையில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி இதுவரை பங்கேற்ற 7 போட்டிகளில் 6 வெற்றியும் 1 தோல்வியும் பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்து ராஜநடை போடுகிறது.
இந்த வருடம் முதல் முறையாக உருவாக்கப்பட்ட அந்த அணி இந்த அளவுக்கு மிகச் சிறப்பாக செயல்படும் என பலரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஏனெனில் அந்த அணியை வழிநடத்தும் ஹர்டிக் பாண்டியா இதற்கு முன் உள்ளூர் போட்டிகளில் கூட கேப்டன்ஷிப் செய்த அனுபவம் இல்லாதவர்.
மிரட்டும் குஜராத்:
அதனால் இந்த அணி எங்கே வெல்லப் போகிறது என்று பெரும்பாலானவர்கள் கணித்தனர். ஆனால் அடுத்தடுத்த வெற்றிகளால் முதல் வாரத்திலிருந்தே புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்து வரும் அந்த அணி அனைவரின் கணிப்பை பொய்யாக்கி வருகிறது. அந்த அணிக்கு பந்துவீச்சில் முகம்மது ஷமி, லாக்கி பெர்குசன், ரஷித் கான் ஆகியோர் மிகப்பெரிய பலமாக இருந்து வருகின்றனர். இருப்பினும் பேட்டிங்கில் சுப்மன் கில், டேவிட் மில்லர் ஆகியோரைத் தவிர இதர வீரர்கள் சிறப்பாக செயல்படவில்லை என்றாலும் அதை மூடிமறைக்கும் வகையில் அதன் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஒவ்வொரு போட்டியிலும் பட்டைய கிளப்பும் பேட்டிங்கை வெளிப்படுத்துகிறார்.
அந்த வகையில் இதுவரை பங்கேற்ற 6 போட்டிகளில் 295 ரன்களை 73.75 என்ற அபாரமான சராசரியில் எடுத்துள்ள அவர் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன்களுக்கு வழங்கப்படும் ஆரஞ்சு தொப்பி பட்டியலில் 2-வது இடத்தைப் பிடித்து அசத்தி வருகிறார். மேலும் இதற்கு முன்பு 5, 6 என லோயர் மிடில் ஆர்டரில் விளையாடி வந்த அவர் இந்த வருடம் கேப்டனானதும் தைரியமாக நேரடியாக 3-வது இடத்தில் களமிறங்கி தனது அணியை தாங்கிப் பிடித்து வருகிறார். அதேப்போல் பந்துவீச்சிலும் சமீப காலங்களாக காயத்தால் தடுமாறி வந்த அவர் இந்த ஐபிஎல் தொடரில் தேவைப்படும் போதெல்லாம் பந்துவீசி விக்கெட்டுகளையும் எடுக்கிறார்.
தில்லுக்கு துட்டு பாண்டியா:
இப்படி ஒரு ஆல்-ரவுண்டராக தனது வேலையை கச்சிதமாக செய்து வரும் அவர் சரியான நேரத்தில் சரியான பந்துவீச்சாளர்களை பந்துவீச தேர்வு செய்வது போன்ற அம்சங்களில் சிறப்பான முடிவுகளை எடுத்து அனுபவமில்லாத கேப்டன்ஷிப் பதவியிலும் பாராட்டும் வகையில் நடந்து கொண்டு வருகிறார். அதிலும் கொல்கத்தாவுக்கு எதிராக நடந்த போட்டியில் அவர் எடுத்த தைரியமான தில்லுக்குதுட்டு முடிவு அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்து ஆச்சரியப்படுத்தியது என்றே கூற வேண்டும்.
1. ஏனெனில் இந்த வருட ஐபிஎல் தொடரில் டாஸ் வென்றால் உடனடியாக எவ்வித யோசனையுமின்றி அனைத்து கேப்டன்களும் முதலில் பந்து வீச தீர்மானிப்பதை பார்த்து வருகிறோம்.
2. அது பகல் அல்லது இரவு என எந்த போட்டியாக இருந்தாலும் சரி டாஸ் வென்று முதலில் பந்துவீசி பின்னர் சேசிங் செய்வதே பாதுகாப்பான வெற்றிக்கு முதல்படி என அனைத்து கேப்டன்ங்களும் முடிவெடுக்கின்றனர்.
3. அந்த வகையில் இந்த வருடம் ஐபிஎல் தொடரில் நடந்த முதல் 34 போட்டிகளில் பாண்டியா உட்பட டாஸ் வென்ற கேப்டன்கள் அனைவரும் எந்தவித ஆச்சரியமும் என்று முதலில் பந்து வீச தீர்மானித்தார்கள்.
4. ஆனால் ஏப்ரல் 24-ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு நடைபெற்ற 35-ஆவது லீக் போட்டியில் கொல்கத்தாவுக்கு எதிராக டாஸ் வென்ற ஹர்திக் பாண்டியா தைரியமாக முதல் முறையாக பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
அதை தொடர்ந்து நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவர்களில் 156/9 ரன்களை எடுத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் ஹர்திக் பாண்டியா மீண்டும் பொறுப்புடன் அதிரடியாக பேட்டிங் செய்து 67 (49) ரன்கள் குவித்தார். அதைத் தொடர்ந்து 157 ரன்களை சேசிங் செய்த கொல்கத்தா ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும் கடைசியில் ஆண்ட்ரே ரசல் அதிரடியாக 6 சிக்சர்களை பறக்கவிட்டு 48 (25) ரன்கள் குவித்து போராடினார்.
இதையும் படிங்க : ஐ.பி.எல் வரலாற்றின் ஜாம்பவான் அணியான ஆர்.சி.பி.யின் டாப் 8 குறைந்தபட்ச ஸ்கோர்கள் – லிஸ்ட் இதோ
இருப்பினும் கடைசியில் துல்லியமாக பந்துவீசிய குஜராத் வெறும் 8 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை சுவைத்தது. மொத்தத்தில் தரமாக விளையாடினால் டாஸ் என்பது ஒரு மிகப்பெரிய பொருட்டல்ல என்று இந்த வருட ஐபிஎல் தொடரில் முதல் முறையாக முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து அதில் வெற்றியும் பெற்று காட்டியுள்ள கேப்டன் பாண்டியா இந்த விஷயத்தில் இதர அணிகளுக்கு முன்னோடியாக திகழ்வது பாராட்டுக்குரியதாகும்.