
ஆஸ்திரேலியாவிடம் 10 வருடங்கள் கழித்து பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வெல்ல முடியாமல் இந்திய கிரிக்கெட் அணி கோட்டை விட்டுள்ளது. அந்தத் தோல்விக்கு விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட சீனியர் வீரர்கள் முக்கிய காரணமாக அமைந்தார்கள். அதன் காரணமாக ஐந்து போட்டிகளில் 32 விக்கெட்டுகள் எடுத்து போராடிய ஜஸ்ப்ரித் பும்ராவின் போராட்டம் வீணானது என்றே சொல்லலாம்.
இந்நிலையில் ராகுல் டிராவிட் இருந்த வரை இந்திய அணி சீராக பயணித்துக் கொண்டிருந்ததாக ஹர்பஜன் கூறியுள்ளார். ஆனால் கௌதம் கம்பீர் வந்ததும் இலங்கையிடம் 27 வருடங்கள் கழித்து ஒருநாள் தொடரில் இந்தியா அவமானத் தோல்வியை சந்தித்தது. நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் வரலாறு காணாத ஒயிட் வாஸ் தோல்வியை இந்தியா பதிவு செய்தது.
தற்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முதல் முறையாக தகுதி பெறாமல் வெளியேறி இந்தியா மற்றொரு அவமானத்தை சந்தித்துள்ளதாக ஹர்பஜன் ஆதங்கத்தை தெரிவித்துள்ளார். எனவே இனிமேல் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற நட்சத்திர வீரர்களை பார்க்காமல் தற்சமயத்தில் நல்ல ஃபார்மில் இருக்கும் வீரர்களுக்கு மட்டும் வாய்ப்பளிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி ஹர்பஜன் பேசியது பின்வருமாறு.
“ராகுல் டிராவிட் இந்திய அணியில் இருந்த வரை அனைத்தும் நன்றாக இருந்தது. இந்தியா டி20 உலகக் கோப்பையும் வென்றது. ஆனால் திடீரென என்னவாயிற்று? கடந்த 6 மாதங்களில் நாம் இலங்கையிடம் தோற்றோம், நியூசிலாந்திடம் ஒயிட் வாஸ் தோல்வியை சந்தித்தோம், தற்போது ஆஸ்திரேலியாவிடம் தோற்றுள்ளோம்”
“அப்படி அனைத்தும் வெளியே விழுவதாக தெரிகிறது. ஒவ்வொரு வீரரும் பெயரைக் கொண்டுள்ளார்கள். ஒருவேளை அது தான் முக்கியம் என்றால் பேசாமல் கபில் தேவ், அனில் கும்ப்ளே மற்றும் இந்தியாவின் கடந்த கால மேட்ச் வின்னர்களை தற்போது தேர்ந்தெடுத்து விளையாட வையுங்கள். பிசிசிஐ இந்த சூப்பர்ஸ்டார் நட்சத்திர கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்”
இதையும் படிங்க: சுப்மன் கில் இடத்தில் நம்ம தமிழக பசங்க இருந்திருந்தா இதுதான் நடந்திருக்கும் – சுப்ரமணியம் பத்ரிநாத்
“அபிமன்யு ஈஸ்வரன் ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் வாய்ப்பு கொடுக்கவில்லை. வாய்ப்பு கொடுக்கவில்லையெனில் அவரும் சர்பராஸ் கான் போன்றவரும் எப்படி நல்ல வீரர்களாக வருவார்கள். எனவே அடுத்ததாக நடைபெறும் தொடரில் ஃபார்மில் உள்ள வீரர்கள் மட்டுமே இங்கிலாந்துக்கு செல்ல வேண்டும். நட்சத்திர வீரர்களை தேர்ந்தெடுக்கக் கூடாது. தற்போது முடிவு தேர்வாளர்களின் கையில் இருக்கிறது. அதை அவர்கள் எடுக்கிறார்களா என்பதை பார்ப்போம்” என்று கூறினார்.