தப்பு நம்ம பிளேயர்ஸ் மேல இல்ல.. எல்லாத்துக்கும் அது தான் காரணம்.. தோல்வி பற்றி ஹர்பஜன் விமர்சனம்

Harbhajan Singh
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா வென்று உலகின் புதிய சாம்பியனாக சாதனை படைத்தது. அதனால் சொந்த மண்ணில் 2011 போல கோப்பையை வெல்லும் பொன்னான வாய்ப்பை இந்தியா தவற விட்டது. குறிப்பாக லீக் சுற்றில் அனைத்து போட்டிகளிலும் வென்று புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த இந்தியா செமி ஃபைனலில் வலுவான நியூசிலாந்தை தோற்கடித்து அசத்தியது.

மேலும் அனைத்து வீரர்களும் அற்புதமான ஃபார்மில் இருந்ததால் கண்டிப்பாக இம்முறை கோப்பையை வெல்வோம் என்ற நம்பிக்கையுடன் ரசிகர்கள் காத்திருந்தனர். இருப்பினும் அகமதாபாத் நகரில் நடைபெற்ற மாபெரும் இறுதிப்போட்டியில் பேட்டிங் துறையில் சொதப்பிய இந்தியா 240 ரன்கள் மட்டுமே எடுத்து ஆரம்பத்திலேயே வெற்றியை கோட்டை விட்டது ரசிகர்களின் நெஞ்சங்களை உடைத்தது.

- Advertisement -

ஹர்பஜன் விளாசல்:
இந்நிலையில் ஃபைனல் போட்டி நடைபெற்ற அகமதாபாத் மைதானத்தின் பிட்ச் மெதுவாக இருந்ததே இந்த தோல்விக்கு காரணம் என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் விமர்சித்துள்ளார். குறிப்பாக அனைத்து பேட்ஸ்மேன்களும் உச்சகட்ட ஃபார்மில் இருந்ததால் இதே போட்டியை வேறு ஏதேனும் மைதானத்தில் நடத்தியிருந்தால் கண்டிப்பாக இந்தியா வென்றிருக்கும் என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

“அந்த பிட்ச் மிகவும் மெதுவாக இருந்தது என்று நினைக்கிறேன். சாதாரணமாக இருப்பதை விட அது காய்ந்து போயிருந்தது. இந்த ஃபைனல் 300 ரன்கள் அடிக்கக்கூடிய பிட்ச்சில் நடக்க வேண்டும் என்பதையே நான் விரும்பினேன். அது போன்ற பிட்ச் தான் தற்போதைய இந்திய அணிக்கு பொருத்தமாகவும் இருக்கும். ஏனெனில் தற்போதைய இந்திய அணியில் இருக்கும் அனைத்து பேட்ஸ்மேன்களும் நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள்”

- Advertisement -

“இந்த தொடர் முழுவதும் அவர்கள் அபாரமாக விளையாடினார்கள். அதற்காக அவர்கள் மீது நான் பெருமையும் படுகிறேன். இருப்பினும் அவர்கள் விளையாடிய விதத்திற்கு ஃபைனலில் இருந்ததை விட சிறந்த பிட்ச் இருந்திருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். எனவே கண்டிப்பாக போட்டி வேறு மைதானத்தில் நடந்திருந்தால் இந்தியா வென்றிருக்கும் என்று நான் நம்புகிறேன்”

இதையும் படிங்க: நான் சொல்றது இந்தியர்களுக்கு கசக்கும்.. ஆனா இதான் உண்மை.. 2023 உ.கோ தோல்வி பற்றி கம்பீர் கருத்து

“நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் கேளுங்கள். சொல்லப்போனால் என்னுடைய காலத்தில் விளையாடிய சில ஆஸ்திரேலிய வீரர்களிடம் இதைப் பற்றி நான் கேட்டேன். அதற்கு இந்தியா அபாரமான அணியாக இருப்பதால் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்று அவர்கள் என்னிடம் சொன்னார்கள். ஆனாலும் ஆஸ்திரேலிய அணியினர் நல்ல திட்டங்களுடன் வந்து அதை வெற்றிகரமாக செயல்படுத்தி சிறப்பாக விளையாடி வெற்றி கண்டனர். எனவே வேறு மைதானத்தில் ஃபைனல் நடந்திருந்தால் நாம் இந்நேரம் மகிழ்ச்சியாக இருந்திருப்போம் என்று நினைக்கிறேன்” என கூறினார்.

Advertisement