
எதிர்வரும் 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை நேற்று இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அந்த அணியில் சில முக்கிய வீரர்களுக்கு இடம் கிடைக்காதது பெரியளவில் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது. ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதில் இருந்தே அணித்தேர்வின் மீது பல்வேறு விமர்சனங்களும், விவாதங்களும் எழுந்த வண்ணம் உள்ளன.
ஏனெனில் சூரியகுமார் யாதவ் தலைமையில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டாலும் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்படும் ஒரு சில வீரர்களுக்கு இந்த தொடரில் வாய்ப்பு கிடைக்காதது கேள்வியை எழுப்பி உள்ளது. அந்த வகையில் பேட்ஸ்மேன்கள் பட்டியலில் ஜெய்ஸ்வால், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்கு இடம் கிடைக்காதது பெரியளவில் பேசப்படும் விடயமாக மாறியது.
அதே வேளையில் பந்துவீச்சாளர்களை பொறுத்தவரை முன்னணி இளம் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் இடம்பெறாதது அனைவரது மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஏனெனில் நடைபெற்று முடிந்த ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் தொடரின் 5 போட்டிகளில் விளையாடிய அவர் 23 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளராக திகழ்ந்த அவர் சமீபகாலமாகவே மிகச்சிறப்பான ஃபார்மில் இருந்து வருகிறார். எனவே அவர் இந்த ஆசிய கோப்பை தொடரில் விளையாடிருக்க வேண்டும் என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்திருந்தனர். ஆனால் அவருக்கு இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் வழங்கப்படவில்லை.
இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சிராஜ் தேர்வு செய்யப்படாதது குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் கூறுகையில் : இந்திய அணியில் முகமது சிராஜை சேர்க்காததன் மூலம் ஒரு எக்ஸ்பேக்டர் வீரரை நமது அணி இழந்துள்ளது. சமீபகாலமாகவே முகமது சிராஜ் மிகச் சிறப்பாக பந்துவீசி வருகிறார். இங்கிலாந்து மண்ணில் அவர் செயல்பட்ட விதத்தை நீங்கள் பார்க்கையில் அவர் எப்பேர்பட்ட பார்மில் இருக்கிறார் என்பது புரியும்.
இதையும் படிங்க : ஆசிய கோப்பையிலும் சில கண்டிஷனுடன் தான் பும்ரா விளையாட இருக்கிறார் போல – அஜித் அகார்கர் சூசகம்
இந்த ஆசிய கோப்பை தொடரில் நிச்சயம் அவர் விளையாடி இருக்க வேண்டும். தொடர்ச்சியாக அவர் விளையாடினால் தான் அவரும் நல்ல டச்சில் இருப்பார் என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். கடந்த 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரின் போது இந்திய அணியில் இணைந்திருந்த சிராஜ் அதன்பின்னர் எந்த ஒரு சர்வதேச டி20 போட்டியிலும் விளையாட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.