எதிர்வரும் 2026 டி20 உலக கோப்பையை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு நடைபெறவுள்ள 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது 20 ஓவர் போட்டிகளாக நடத்தப்பட இருக்கின்றன. மொத்தம் 8 அணிகள் பங்கேற்று விளையாடயிருக்கும் இந்த தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் செப்டம்பர் 28-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடரின் இறுதிவரை சென்று கோப்பையை வெல்லப்போவது யார்? என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
முக்கிய போட்டிகளில் மட்டுமே பும்ரா விளையாடுவார் : அஜித் அகார்கர்
இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியானது நேற்று பி.சி.சி.ஐ-யின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் சூரியகுமார் யாதவ் கேப்டனாகவும், சுப்மன் கில் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டு அவர்களின் கீழ் இளம் வீரர்களை கொண்ட அணியாக இந்திய அணி அறிவிக்கப்பட்டது.
அப்படி அறிவிக்கப்பட்ட இந்திய டி20 அணியில் சீனியர் வீரரான ஜஸ்ப்ரீத் பும்ரா மீண்டும் டி20 போட்டிகளுக்கு திரும்பியுள்ளார். ஏற்கனவே இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 5 போட்டிகளில் பணிச்சுமை காரணமாக மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடிய அவர் இந்த ஆசிய கோப்பை தொடரில் முழுவதுமாக விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏனெனில் அவ்வப்போது பணிச்சுமை காரணமாக ஓய்வெடுத்து வரும் அவர் இந்த தொடர் முழுவதும் விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நேற்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது பதிலளித்த தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் கூறுகையில் : தற்போதைக்கு ஜஸ்ப்ரீத் பும்ரா தொடர்ச்சியாக விளையாடுவது குறித்து எதுவும் சொல்ல முடியாது.
ஆனால் இங்கிலாந்து தொடர் முடிந்து பும்ராவிற்கு நல்ல ஓய்வு கிடைத்தது. பிசியோதெரபிகளுடன் தொடர்ச்சியாக டச்சில் தான் இருந்து வருகிறோம். தற்போது பும்ரா நல்ல உடற்தகுதியுடன் இருக்கிறார். அவர் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த வீரர் என்று நமக்கு தெரியும். எனவே அவரை முக்கிய போட்டிகளில் மட்டுமே பயன்படுத்திக் கொள்ள இருக்கிறோம்.
சர்வதேச போட்டிகளை பொருத்தவரை அனைத்து போட்டிகளுமே முக்கியமாக போட்டி தான். இருந்தாலும் உலகக் கோப்பை, ஆசிய கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி போன்ற பெரிய தொடர்களில் நாம் அவரை சரியாக பயன்படுத்தியாக வேண்டும். அதனால் முக்கிய போட்டிகளில் மட்டுமே அவர் விளையாடுவார் என அஜித் அகார்கர் கூறினார்.
இதையும் படிங்க : அக்சர் படேலுக்கு அவங்க விளக்கம் கொடுத்தே ஆகனும்.. என்னங்க இதெல்லாம் – முகமது கைப் பதிவு
அவர் பேசிய இந்த வார்த்தைகளை வைத்து பார்க்கும் போது நிச்சயம் குரூப் பிரிவு போட்டிகளில் பும்ரா அதிகளவில் போட்டிகளில் விளையாட மாட்டார் என்றும் சூப்பர் ஃபோர் சுற்றுக்கு பிறகு இறுதிப்போட்டி வரை இந்திய அணி செல்லும் பட்சத்தில் அந்த முக்கியமான போட்டிகளில் மட்டுமே அவர் விளையாடுவார் என்று தெரிகிறது.



