ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வகையான கிரிக்கெட் தொடரிலும் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்திற்கான ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகள் தற்போது பிசிசிஐ-யின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரோகித் சர்மா கேப்டனாகவும், அஜின்க்யா ரஹானே துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ரோகித் தலைமையின் கீழ் 16 பேர் கொண்ட இந்திய அணியும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் அனுபவ வீரரான சத்தீஸ்வர் புஜாராவை இந்திய அணி அதிரடியாக நீக்கி உள்ளது. அவருக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகிய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
என்னதான் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தாலும் அனுபவ வீரரான புஜாராவை இப்படி அதிரடியாக அணியிலிருந்து நீக்கியது தவறு என்று அவருக்கு ஆதரவாக சில முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியில் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் புஜாராவிற்கு ஆதரவாக சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :
புஜாராவின் நிலைமையை நினைத்தால் எனக்கு வருத்தமாக இருக்கிறது. அவர் ஒரு மிகப்பெரிய பிளேயர், இந்திய அணிக்காக அவர் வழங்கிய பங்களிப்பை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விட முடியாது. தற்போதைக்கு அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதா? அல்லது அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளாரா? என்ற விவரமே தெரியாமல் இருக்கும். ஒருவேளை அவர் நீக்கப்பட்டால் அது இந்திய அணி நிர்வாகம் செய்துள்ள மிகப்பெரிய தவறு என்று கூறுவேன்.
ஏனெனில் அவரைப் போன்ற ஒரு பெரிய வீரரை அதுவும் 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ள வீரரை சரியான கம்யூனிகேஷன் இல்லாமல் அணியிலிருந்து வெளியேற்றுவது தவறு. இத்தனை ஆண்டு காலமாக இந்திய அணிக்காக விளையாடியுள்ள அவருக்கு சரியான புரிதலை நீங்கள் வழங்கி இருக்க வேண்டும்.
இதையும் படிங்க : விராட் கோலியை தக்க வைத்து புஜாராவை மட்டும் நீக்கியது ஏன்? ரசிகர்களுக்கு பிசிசிஐ கொடுத்த விளக்கம் இதோ
ஒருவேளை அவரை அணியிலிருந்து நீக்க வேண்டும் என்றால் அவருக்கு சில தொடர்களில் ஓய்வு வழங்கி பின்னர் மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்து அவரை சரியான முறையில் படிப்படியாக வெளியேற்ற வேண்டும். அதனை தவிர்த்து இப்படி ஒரேடியாக அணியிலிருந்து நீக்கியுள்ளது தவறு என ஹர்பஜன் சிங் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.