
இந்தியாவின் முன்னாள் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் கடந்த சில மாதங்களுக்கு முன் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 400க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்துள்ள இவர் டெஸ்ட் போட்டிகளில் ஹாட்ரிக் எடுத்த முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார். கடைசியாக இந்தியாவுக்காக கடந்த 2016ஆம் ஆண்டு ஒரு போட்டியில் விளையாடியிருந்த அவர் அதன்பின் ஐபிஎல் தொடரில் மும்பை, சென்னை போன்ற அணிகளுக்காக விளையாடி சாம்பியன் பட்டங்களை வென்றவர். தற்போது ஐபிஎல் உட்பட அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் விடைபெற்றுள்ள அவர் விரைவில் ஒரு ஐபிஎல் அணியின் பயிற்சியாளராக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தோனி மீது குற்றசாட்டு :
ஓய்வுக்கு பின் கடந்த மாதம் அவர் அளித்த ஒரு பேட்டியில் தனது 31 வயதிலேயே 400 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்த போதிலும் காரணமே இல்லாமல் கழட்டி விடப்பட்டதாக பிசிசிஐ மீது குற்றம் சாட்டி இருந்தார். அத்துடன் அந்த சமயத்தில் கேப்டனாக இருந்த எம்எஸ் தோனி தமக்கு போதிய ஆதரவு அளிக்கவில்லை எனவும் புகார் தெரிவித்திருந்தார்.
அத்துடன் கடந்த 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்று சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியில் தன்னுடன் விளையாடிய விரேந்திர சேவாக், யுவராஜ் சிங், கௌதம் கம்பீர் போன்றவர்களுக்கு 2015 உலக கோப்பையில் விளையாட வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவும் தோனி மீது குற்றம் சாட்டியிருந்தார். அந்த சமயத்தில் தங்களை போன்ற மூத்த வீரர்கள் 30 முதல் 35 வரையிலான வயதில் இருந்தபோதிலும் 2011 உலக கோப்பையின் வெற்றி அணியில் விளையாடிய தங்களுக்கு மீண்டும் ஒன்றாக விளையாட வாய்ப்பு கிடைக்கவே இல்லை என ஹர்பஜன் சிங் தெரிவித்திருந்தார்.
இது பற்றி தோனி உட்பட பிசிசிஐ தலைமை நிர்வாகத்தில் கேள்வி எழுப்பிய போதும் அதற்கான சரியான பதில் கடைசி வரை கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்திருந்தார். தோனி மீது உள்ள கோபத்தின் காரணமாகவே இவ்வளவு நாட்கள் கழித்து ஓய்வு பெற்றபின் ஹர்பஜன்சிங் இவ்வாறு கருத்துகளை தெரிவிக்கிறார் என அது பற்றி இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேசினார்கள்.
எந்த கோபமும் இல்லை:
இந்நிலையில் தோனி மீது தமக்கு எந்த கோபமும் புகாரும் இல்லை என ஹர்பஜன் சிங் தற்போது கூறியுள்ளார். இது பற்றி ஒரு செய்தி தொலைக்காட்சியில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர், “முதலில் நான் கூறிய கருத்துக்கள் பல்வேறு வகைகளில் எடுத்து கொண்டுவிட்டார்கள். 2012க்கு பின் நடந்த பல விஷயங்கள் சரியான வழியில் நடத்தப்பட்டிருக்கலாம் என புரிய வைக்கவே நான் முயற்சித்தேன். நான், சேவாக், யுவராஜ் சிங், கம்பீர் போன்றவர்கள் இந்தியாவுக்காக விளையாடும்போதே ஓய்வு பெற்றிருக்க முடியும்.
ஏனெனில் அந்த சமயத்தில் நாங்கள் அனைவரும் ஐபிஎல் தொடரில் விளையாடி வந்தோம். ஆனால் 2011 உலககோப்பையில் விளையாடிய நாங்கள் 2015 உலகக்கோப்பையில் முரண்பாடாக விளையாட முடியாமல் போனது ஏன்? 2015 உலக கோப்பையில் ஒரு சிலர் மட்டும் விளையாடியது ஏன்?” என கேட்க மட்டுமே முயன்றதாக தெரிவித்துள்ள ஹர்பஜன் சிங் தோனி மீது எந்தவித புகாரும் இல்லை கோபமும் இல்லை என கூறியுள்ளார்.
தோனி என் மனைவி இல்லை :
“தோனி உடனான உறவு நல்லபடியாக உள்ளது. நான் ஒன்றும் அவருடன் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவருக்கு எதிராக எந்த புகாரும் இல்லை. சொல்லப்போனால் இந்த அனைத்து வருடங்களிலும் நாங்கள் மிகச்சிறந்த நண்பர்களாக இருந்தோம். இருப்பினும் அப்போதைய பிசிசிஐ சர்க்காரிடம் தான் என்னிடம் புகார் இருந்தது. நான் பிசிசிஐயை சர்க்கார் என அழைப்பேன். அந்த சமயத்தில் இருந்த தேர்வு குழுவினர் நேர்மையாக நடந்துகொள்ளவில்லை. அவர்கள் இந்திய அணியை ஒற்றுமையாக இருக்க விடவில்லை.
மூத்த வீரர்கள் அணியில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் போது இளம் வீரர்களை கொண்டு வர என்ன தேவை இருந்தது? என இதுபற்றி தேர்வு குழுவினரிடம் நான் கேட்டபோது அவர்கள் “அது எங்கள் கையில் இல்லை” என கூறி கை விரித்தார்கள். அப்படியானால் தேர்வுக்குழுவினரான உங்களுக்கு என்ன வேலை?” என கூறியுள்ள ஹர்பஜன் சிங் தோனி மீது எந்த கோபமும் இல்லை என்றும் அவர் தமது நண்பர் எனவும் தெரிவித்து இதற்கு முன்பு கூறிய கருத்துகளுக்கு அப்படியே நேர் மாறான பதிலை தெரிவித்து பல்டி அடித்துள்ளார்.
இதையும் படிங்க : பாகிஸ்தானை போல இந்தியாவால் ஏன் பாஸ்ட் பவுலர்களை உருவாக்க முடியவில்லை – சோயப் அக்தர் விளக்கம்
2011 உலகக்கோப்பைக்கு பின் ஹர்பஜன்சிங் கூறும் அத்தனை மூத்த வீரர்களுக்கும் இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது என்றாலும் அவர்கள் முன்பு போல் மிக சிறப்பாக செயல்பட தவறியதால் இளம் வீரர்களுக்கு அப்போதைய கேப்டன் தோனி அதிகப்படியாக வாய்ப்பளித்தார். ஒருவேளை அவர் அப்போது வாய்ப்பளிக்காமல் இருந்திருந்தால் இப்போது உள்ள விராட் கோலி, ரோகித் சர்மா, ரவிச்சந்திரன் அஸ்வின் போன்றவர்கள் எப்படி உருவாகி இருக்க முடியும் என ஹர்பஜன்சிங் இன்னும் உணரவில்லை என்பது இதிலிருந்து தெரிகிறது.