தரமான மேட்ச் வின்னர 2023 உ.கோ அணியில் விட்டு தப்பு பண்ணீட்டிங்க – தேர்வுக்குழு மீது ஹர்பஜன் சிங் அதிருப்தி

Harbhajan Singh
- Advertisement -

ஐசிசி 2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை இந்தியாவில் கோலாகலமாக நடைபெற உள்ளது. அதில் சொந்த மண்ணில் வலுவான அணியாக கருதப்படும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா 2011 போல கோப்பையை வென்று சரித்திரம் படைப்பதற்காக 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா அறிவிக்கப்பட்டுள்ள அந்த அணியில் விராட் கோலி, கில், காயத்திலிருந்து குணமடைந்த ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் ஒருநாள் கிரிக்கெட்டில் சுமாராகவே செயல்பட்டு வரும் சூரியகுமார் யாதவ் மீண்டும் நம்பிக்கையுடன் தேர்வு செய்யப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக அமைந்துள்ளது.

மேலும் ஷமி, சிராஜ், பும்ரா ஆகியோர் வேகப்பந்து வீச்சார்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்த அணியில் சுழல் பந்து வீச்சு துறையில் ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அந்த வகையில் இந்த அணி சிறப்பாகவே இருந்தாலும் ஷிகர் தவான், புவனேஸ்வர் குமார், அஸ்வின் போன்ற சீனியர்களும் வாஷிங்டன் சுந்தர், சஞ்சு சாம்சன் போன்ற இளம் வீரர்களும் இடம் பெறாதது சிலருக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.

- Advertisement -

ஹர்பஜன் விமர்சனம்:
இந்நிலையில் இந்த அணியில் யுஸ்வேந்திர சஹால் இடம் பிடிக்காததற்கு முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அரியானாவைச் சேர்ந்த சஹால் கடந்த 2017ஆம் ஆண்டு அறிமுகமாகி நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் 2017 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2019 உலகக்கோப்பை வரை முதன்மை ஸ்பின்னராக விளையாடினார். ஆனால் அதன் பின் ஃபார்மை இழந்ததால் 2021 டி20 உலக கோப்பையில் கழற்றி விடப்பட்ட அவர் 2022 ஐபிஎல் தொடரில் ஊதா தொப்பியை வென்று கம்பேக் கொடுத்தார்.

இருப்பினும் 2022 டி20 உலகக் கோப்பையில் அஸ்வின் இருந்ததால் விளையாடும் 11 பேர் அணியில் வாய்ப்பு பெறவில்லை. இருப்பினும் மணிக்கட்டு ஸ்பின்னரான அவரை தேர்ந்தெடுக்காததே 2022 டி20 உலகக் கோப்பை தோல்விக்கு காரணம் என்று நிறைய முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர். அதனால் 2023 உலக கோப்பையில் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் சற்று ரன்களை வாரி வழங்கியதால் 2023 ஆசிய கோப்பை அணியிலேயே கழற்றி விடப்பட்டார்.

- Advertisement -

ஆனால் ஜடேஜா, குல்தீப், அக்சர் படேல் என தற்போது தேர்வாகியுள்ள ஸ்பின்னர்கள் அனைவருமே இடது கை அல்லது ஆர்ம் ஸ்பின்னர்களாக இருப்பதால் மணிக்கட்டு ஸ்பின்னரான சஹால் நிச்சயம் உலகக்கோப்பை அணியில் இருக்க வேண்டுமென்று மதன் லால், சௌரவ் கங்குலி, ஹர்பஜன் சிங் போன்ற முன்னாள் வீரர்கள் அப்போதே விமர்சித்தனர். இருப்பினும் அதை கண்டுகொள்ளாத தேர்வுக்குழு தரமான மேட்ச் வின்னரை தவற விட்டுள்ளதாக தேர்வுக்குழுவை ட்விட்டரில் விமர்சித்துள்ளது பின்வருமாறு.

இதையும் படிங்க: இது வேறயா? அப்டினா 2023 உ.கோ ஜெயிக்கிறது கஷ்டம் தான் – மோசமான பட்டியலில் உலக அளவில் 9வது இடத்தில் தவிக்கும் இந்தியா

“யுஸ்வேந்திர சஹால் இந்திய உலகக்கோப்பை அணியில் இடம் பெறாதது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருக்கிறது. அவர் மிகவும் தரமான மேட்ச் வின்னர்” என்று கூறியுள்ளார். அப்படி தொடர்ச்சியாக அடுத்தடுத்த டி20 உலகக் கோப்பைகளில் வாய்ப்பு பெறாத சஹால் சொந்த மண்ணில் நடைபெறும் இந்த உலகக்கோப்பையில் ஒருவேளை கடைசி நேரத்தில் எந்த ஸ்பின்னராவது காயத்தை சந்தித்தால் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement