
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிகமுறை சாம்பியன் பட்டம் வென்ற அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது தற்போது நடைபெற்று வரும் 2025 ஐபிஎல் தொடரில் மிக மோசமான நிலையை சந்தித்துள்ளது. இதுவரை நடைபெற்றுள்ள 8 போட்டியில் 6 தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்திருக்கும் சிஎஸ்கே அணியானது கிட்டத்தட்ட பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை இழக்கும் தருவாயில் உள்ளது.
ஏற்கனவே ருதுராஜ் கெய்க்வாட் காயமடைந்து வெளியேறியதால் தற்போது தோனி தலைமையில் விளையாடும் அந்த அணி மீண்டும் சிறப்பான ஆட்டத்திற்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்துள்ளது பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இப்படி சிஎஸ்கே அணி சந்தித்துள்ள இந்த நிலைமைக்கு சரியான பேட்ஸ்மேன்கள் அணியில் இல்லாததே பெரிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் சி.எஸ்.கே வீரருமான ஹர்பஜன்சிங் சுரேஷ் ரெய்னா இன்னும் மூன்று ஆண்டுகள் சி.எஸ்.கே அணிக்காக விளையாடி இருக்க வேண்டும் என்றும் அவர் சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருக்க தகுதியான ஒரு வீரர் என்ற கருத்தினை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :
சுரேஷ் ரெய்னா நினைத்ததை விட விரைவாகவே ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துவிட்டார். என்னை பொருத்தவரை அவர் இன்னும் கூடுதலாக மூன்று ஆண்டுகள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியிருக்கலாம். அதேபோன்று சிஎஸ்கே அணியின் கேப்டனாகும் தகுதியும் அவருக்கு இருந்தது. ஆனால் நிர்வாகம் அவருக்கு ஆதரவு தராமல் ஒதுக்கி விட்டது.
அதன் காரணமாகவே அவர் விரைவாக ஓய்வு அறிவித்து விட்டார். வேறு ஒரு அணிக்காக விளையாடும் நினைப்பு அவரிடம் இல்லாததால் தான் அவர் விரைவாக இந்த முடிவை எடுத்தார் என்று நினைக்கிறேன். சிஎஸ்கே அணிக்காக 15 ஆண்டுகள் விளையாடிய அவர் துணை கேப்டனாகவும் செயல்பட்டுள்ளதால் நிச்சயம் அவருக்கு கேப்டன் பதவியை நிர்வாகம் வழங்கி இருக்க வேண்டும்.
இதையும் படிங்க : ரோஹித் சர்மாவின் பார்ம் பத்தி எந்த கவலையும் வேண்டாம்.. அவரு பார்முக்கு வந்தா இதான் நடக்கும் – பாண்டியா புகழாரம்
ஆனால் அவர்கள் சுரேஷ் ரெய்னாவை கடைசி கட்டத்தில் ஆதரிக்கவில்லை என்ற தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார். கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான சுரேஷ் ரெய்னா 2021 ஆம் ஆண்டு வரை 205 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் மற்றும் 39 அரைசதம் என 5528 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.