விராட் – ரோஹித் ஆகியோரில் 3 வகையான கிரிக்கெட்டிலும் சிறந்த கேப்டன் யார்? ஹர்பஜன் கொடுத்த ரசிகர்கள் எதிர்பாராத பதில் இதோ

Harbhajan Singh
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் முதன்மை அணிகளில் ஒன்றாக திகழும் இந்தியாவுக்கு 2017 முதல் 3 வகையான கிரிக்கெட்டிலும் கேப்டனாக வழி நடத்திய விராட் கோலி இருதரப்பு தொடர்களில் தென்னாபிரிக்கா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் வரலாறு காணாத வெற்றிகளை பெற்றுக் கொடுத்தார். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 7வது இடத்தில் திண்டாடிய இந்தியாவை தனது ஆக்ரோஷமான கேப்டன்ஷிப் வாயிலாக 2016 – 2021 வரை தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் கிரிக்கெட் அணியாக வெற்றி நடை போட வைத்த அவர் ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வெற்றிகரமான ஆசிய டெஸ்ட் கேப்டனாக சாதனை படைத்துள்ளார்.

இருப்பினும் ஐபிஎல் தொடரிலும் சர்வதேச கிரிக்கெட்டிலும் கேப்டனாக ஒரு கோப்பையை கூட வெல்ல முடியாதது அவருடைய கேப்டன்ஷிப் கேரியரில் பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதே போல் ஐபிஎல் தொடரில் அசால்ட்டாக 5 கோப்பைகளை வென்று அதன் வாயிலாக இன்று 3 வகையான இந்திய அணிக்கும் கேப்டனாக முன்னேறியுள்ள ரோகித் சர்மா இருதரப்பு தொடர்களில் வழக்கமான வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார். ஆனால் ஐபிஎல் தொடரில் முதல் முயற்சிலேயே கோப்பையை வென்ற அவரால் சர்வதேச கிரிக்கெட்டில் 2022 டி20 உலக கோப்பையை வெல்ல முடியவில்லை.

- Advertisement -

ரசிகர்கள் வியப்பு:
மறுபுறம் கேப்டன்ஷிப் அனுபவமில்லாத போதும் இளமையும் அனுபவமும் கலந்த வீரர்களை சிறப்பாக வழி நடத்தி அழுத்தமான நேரங்களில் முக்கிய முடிவுகளை எடுத்து 2007 டி20 உலக கோப்பையை வென்று கொடுத்த தோனி 2011இல் கங்குலி உருவாக்கிய வீரர்களை வைத்து 28 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் உலகக் கோப்பையை வென்று காட்டினார். அத்துடன் தாம் உருவாக்கிய விராட் கோலி, ரெய்னா உள்ளிட்ட இளம் வீரர்களை வைத்து 2013 சாம்பியன்ஸ் ட்ராபியை வென்று கொடுத்த அவர் ஐபிஎல் தொடரிலும் 4 கோப்பைகளை வென்று ஆல் ஏரியாவிலும் கில்லியாக வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ளார்.

இருப்பினும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருடைய கேப்டன்ஷிப் சுமாராக இருப்பதாக சில ரசிகர்கள் சொல்வார்கள். ஆனால் சச்சின், டிராவிட் உள்ளிட்ட சீனியர்களை மிகச் சிறப்பாக வழி நடத்திய அவர் வரலாற்றில் முதல் முறையாக 2009 – 2010 காலகட்டத்தில் இந்தியாவை நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக முன்னேற்றிய பெருமைக்குரியவர். மேலும் 2013க்குப்பின் அதே சீனியர்கள் ஓய்வு பெற்றதால் அடுத்த தலைமுறையை நோக்கி நகர்ந்த இந்தியா அவரது தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் படுதோல்விகளை சந்தித்தது.

- Advertisement -

ஆனாலும் அதற்கு தகுந்த நேரத்தில் உலகமே ஆச்சரியப்படும் வகையில் ஓய்வு பெற்று முற்றுப்புள்ளி வைத்த அவர் டெஸ்ட் கேப்டன்ஷிப் பொறுப்பை விராட் கோலியிடம் ஒப்படைத்து சிறந்த முடிவை எடுத்தார். அந்த வகையில் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் அசத்தலாக செயல்பட்டுள்ள தோனி இந்தியா மட்டுமல்லாமல் உலக அளவில் சிறந்த கேப்டனாக போற்றப்படுகிறார். இந்நிலையில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரில் 3 வகையான கிரிக்கெட்டிலும் சிறந்த கேப்டன் யார் என்று ஒரு ரசிகர் கேட்டதற்கு தோனி என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் ட்விட்டரில் பதிலளித்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

ஏனெனில் கங்குலி தலைமையிலான இந்திய அணியில் அறிமுகமாகி வளர்ந்து ஜாம்பவானாக போற்றப்படும் அளவுக்கு நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்திய அவர் 2011க்குப்பின் வயது காரணமாக சுமாராக செயல்பட தொடங்கினார். அப்போது அடுத்த தலைமுறையை உருவாக்குவதற்காக சேவாக் போன்றவர்களை கழற்றி விட்ட தோனி சுழல் பந்து வீச்சு துறையில் இவரையும் வெளியே அனுப்பி ரவிச்சந்திரன் அஸ்வின், ரவிந்திர ஜடேஜா போன்றவர்களுக்கு வாய்ப்பளித்தார்.

இதையும் படிங்க:வீடியோ : தந்தை டீமை அடித்து நொறுக்கிய மகன், அன்பான வெறுப்புடன் பாராட்டிய அப்பா – பிஎஸ்எல் தொடரில் ருசிகரம்

அந்த முடிவு சரிதான் என்பதை தற்போது அஸ்வின் – ஜடேஜா செயல்படுவதை வைத்து ரசிகர்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனால் 2011லயே 400 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்த தமக்கு மேற்கொண்டு தோனி வாய்ப்பு வழங்காததால் 500 விக்கெட்டுகளை எடுக்க முடியாமல் போய் விட்டதாக கடந்த வருடம் தெரிவித்திருந்த ஹர்பஜன் சிங் சமீப காலங்களாகவே அவர் மீது வன்மத்தை வெளிப்படுத்தி வருகிறார். அப்படிப்பட்ட நிலையில் அவருடைய இந்த பதில் ரசிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்துவதில் எந்த ஆச்சரியமும் இல்லை என்று கூறலாம்.

Advertisement