வீடியோ : தந்தை டீமை அடித்து நொறுக்கிய மகன், அன்பான வெறுப்புடன் பாராட்டிய அப்பா – பிஎஸ்எல் தொடரில் ருசிகரம்

Azam Khan
- Advertisement -

பாகிஸ்தானின் பிரபல பிஎஸ்எல் டி20 கிரிக்கெட் தொடரின் 2023 சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் பிப்ரவரி 24ஆம் தேதியன்று நடைபெற்ற 12வது லீக் போட்டியில் இஸ்லாமாபாத் மற்றும் குயிட்டா அணிகள் மோதின. கராச்சியில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இஸ்லாமாபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 220/6 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு ரஹ்மத்துல்லா குர்பாஸ் 8, கோலின் முன்றோ 38, ராசி வேன் டெர் டுஷன் 1, கேப்டன் சடாப் கான் 12 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

அதனால் 71/4 என தடுமாறிய அந்த அணிக்கு அடுத்து களமிறங்கிய இளம் பாகிஸ்தான் வீரர் அசாம் கான் முதல் பந்திலிருந்தே அதிரடி சரவெடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். குறிப்பாக சற்று உடல் எடையுடன் கூடிய அவர் இப்போட்டியில் விளையாடிய விதத்திற்கு பவர் கொடுத்து அடித்த அத்தனை ஷாட்டுகளும் பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாக பறந்தன. அதே வேகத்தில் அதிரடியாக செயல்பட்டு அரை சதம் கடந்த அவருடன் 5வது விக்கெட்டுக்கு 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தனது பங்கிற்கு சிறப்பாக செயல்பட்ட ஆசிப் அலி 1 பவுண்டரி 4 சிக்சருடன் 42 (24) ரன்கள் குவித்து அவுட்டானார்.

- Advertisement -

தந்தை – மகன் போட்டி:
ஆனால் மறுபுறம் எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக மாறிய அசாம் கான் 9 பவுண்டரி 8 சிக்ஸர்களை விளாசி 97 (42) ரன்களை 230.95 என்ற அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கி 20வது ஓவரின் கடைசி பந்தில் அவுட்டானார். அதைத்தொடர்ந்து 221 ரன்களை துரத்திய குயிட்டா அணி இஸ்லாமாபாத் அணியின் நேர்த்தியான பந்து வீச்சில் ஆரம்பம் முதலே சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 19.1 ஓவரில் 157 ரன்களுக்குச் சுருண்டது. அதிகபட்சமாக முகமது ஹபீஸ் 48 (26) ரன்கள் எடுத்த நிலையில் இஸ்லாமாபாத் சார்பில் அதிகபட்சமாக பரூக்கி மற்றும் ஹசான் அலி தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

அதனால் 63 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இஸ்லாமாபாத் அணிக்கு 97 (42) ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய அசாம் கான் சந்தேகமின்றி ஆட்டநாயகன் விருதை வென்றார். முன்னாள் பாகிஸ்தான் வீரர் மொய்ன் கான் அவர்களின் மகனான இவர் கடந்த 2018 முதல் பிஎஸ்எல் தொடரில் ஓரளவு நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி 2021ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். இருப்பினும் 3 டி20 போட்டியில் வாய்ப்பு பெற்று 6 ரன்கள் மட்டுமே எடுத்து சுமாராக செயல்பட்டதால் கழற்றி விடப்பட்ட அவர் மீண்டும் பாகிஸ்தான் அணிக்கு விளையாடுவதற்காக போராடி வருகிறார்.

- Advertisement -

அந்த நோக்கத்தில் இந்த போட்டியில் விளையாடிய அவர் 19வது ஓவரில் அதிரடி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஹசனனை ஹாட்ரிக் சிக்ஸர்களாக பறக்க விட்டார். குறிப்பாக முட்டி போட்டு அவர் பறக்க விட்ட 3வது சிக்ஸர் மைதானத்திற்கு வெளியே பறந்தது. அப்போது எதிரணியான குயிட்டா கிளாடியேட்டர் தலைமை பயிற்சியாளராக இருக்கும் தனது தந்தையான மொயின் கானை பார்த்து “எப்படி விளையாடுகிறேன்” பாருங்கள் என்று தனது மார்பில் இருக்கும் இஸ்லாமாபாத் அணியின் லோகோவை தட்டி காட்டினார்.

அப்போது உனது ஆட்டம் சிறப்பாக இருக்கிறது மகனே என்ற வகையில் கை தட்டி பாராட்டிய மொய்ன் கான் தன்னுடைய அணிக்கு எதிராக இந்த அடி அடிக்கிறார் என்று சிரிக்காமல் சற்று வெறுப்பு கலந்த அன்புடன் பாராட்டினார்.

இதையும் படிங்க:வீடியோ : இந்த 5 இளம் இந்திய வீரர்கள் அடுத்த 5 வருசத்துக்கு ஐபிஎல் தொடரில் ராஜாங்கம் நடத்துவங்க – கங்குலியின் தேர்வு இதோ

அப்படி தந்தையின் அணியை அதிரடியாக பேட்டிங் செய்து தோற்கடித்த அசாம் கான் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் வரும் மார்ச் 12 முதல் நடைபெறும் இந்த தொடரின் லீக் சுற்றில் சிறப்பாக செயல்பட்டு முதல் 4 இடங்களை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற 6 அணிகள் போட்டி போட்டு வருகின்றன.

Advertisement