நீங்க விதைச்ச பிட்ச் வினை தான் ஃபைனலில் தோற்க காரணம் – இந்திய அணி நிர்வாகத்தை விமர்சித்த ஹர்பஜன் சிங்

- Advertisement -

இங்கிலாந்தின் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதி போட்டியில் 209 ரன்கள் வித்தியாசத்தில் மெகா தோல்வியை சந்தித்த இந்தியா 2013க்குப்பின் தொடர்ந்து 10 வருடமாக ஐசிசி தொடரில் கோப்பையை வெல்லாமல் மண்ணை கவ்வியது. இத்தனைக்கும் ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக ஆரம்பத்திலேயே டாஸ் அதிர்ஷ்டம் கிடைத்தும் அதை சரியாக பயன்படுத்தாத கேப்டன் ரோகித் சர்மா ஆஸ்திரேலிய அணியில் அதிக இடது கை பேட்ஸ்மேன்கள் இருந்தும் உலகின் நம்பர் ஒன் பவுலரான அஷ்வினை கழற்றி விட்ட தவறான அணி தேர்வு தோல்விக்கு காரணமானது.

அது மட்டுமின்றி ஐபிஎல் தொடரில் விளையாடி விட்டு முழுமையாக தயாராகாமல் ஃபைனலில் சோர்வுடன் பந்து வீசிய இந்திய பவுலர்கள் முதல் இன்னிங்ஸிலையே 469 ரன்கள் வாரி வழங்கியதும் நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவான்கள் என்று போற்றப்படும் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி புஜாரா ஆகியோரில் யாருமே ஒரு அரை சதம் கூட அடிக்காமல் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியதும் படுதோல்வியை பரிசாக கொடுத்தது. அதன் காரணமாக ஏமாற்றமடைந்துள்ள ரசிகர்கள் நீங்கள் சாதாரண இரு தரப்பு தொடர்களில் வெஸ்ட் இண்டீஸ் போன்ற அணிகளை அடித்து நொறுக்கி சாதனைகளை படைப்பதற்கு மட்டுமே தகுதியானவர்கள் என்று அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர்.

- Advertisement -

பிட்ச் வினை:
இந்நிலையில் இந்த தோல்விக்கு வீரர்களை மட்டும் குறை சொல்லி பயனில்லை என்று தெரிவிக்கும் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் இந்திய அணி நிர்வாகம் செய்த பிட்ச் வினை தான் வினை தான் முதல் விதை போட்டது என கூறியுள்ளார். அதாவது சமீப காலங்களாகவே இந்தியாவில் சுழலுக்கு சாதகமான பிட்ச்சை வேண்டுமென்றே அமைத்து எதிரணிகளை இரண்டரை நாட்களில் சுருட்டி வெற்றி காணும் வேலையை இந்திய அணி நிர்வாகம் செய்து வருகிறது. அதை எதிரணி கேட்டால் ஆஸ்திரேலியா, இங்கிலாந்தில் மட்டும் வேகத்துக்கு சாதகமான மைதானங்கள் இருக்கும் போது இந்தியாவில் சுழலுக்கு சாதகமான மைதானங்கள் இருக்கக் கூடாதா? என்று ரவி சாஸ்திரி, ராகுல் டிராவிட் போன்ற முன்னாள் இந்நாள் பயிற்சியாளர்கள் வெளிப்படையாக பதிலடி கொடுத்தனர்.

ஆனால் சமீபத்திய பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் இந்தூரில் நடைபெற்ற 3வது போட்டியில் முதல் நாளின் முதல் பந்தே தாறுமாறாக சுழன்றதால் தோல்வியை சந்தித்த இந்தியா தாங்கள் வைத்த வலையில் தாங்களே சிக்கியது. மேலும் அந்த மைதானத்திற்கு மிகவும் மோசம் என ஐசிசி ரேட்டிங் வழங்கியதையும் ரசிகர்கள் மறந்திருக்க முடியாது. அந்த வகையில் சமீப காலங்களாகவே இந்தியாவில் பிட்ச் இயற்கையாக இல்லாமல் இந்திய அணி நிர்வாகத்தின் கோரிக்கைக்கேற்ப அதிகப்படியான சுழலுக்கு சாதகமாக தயாரிக்கப்படுவது தெளிவாக தெரிகிறது.

- Advertisement -

அதனால் ஒரு காலத்தில் சென்னையில் வீரேந்தர் சேவாக் 300 ரன்கள் அடித்தது போன்ற டெஸ்ட் போட்டிகளை இப்போதெல்லாம் இந்தியாவில் பார்க்க முடிவதில்லை என இந்திய ரசிகர்களே அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். அப்படி முழுக்க முழுக்க சுழலுக்கு சாதகமான பிட்ச்சை தயாரித்து அதில் வென்று விட்டு திடீரென ஸ்விங் வேகத்துக்கு சாதகமான இங்கிலாந்து மண்ணில் விளையாடினால் எப்படி வெல்ல முடியும் என்று தெரிவிக்கும் ஹர்பஜன் சிங் இந்த வழக்கம் மாற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “முதல் பந்திலிருந்தே தாறுமாறாக சுழலும் மோசமான பிட்ச்களில் விளையாடி வெற்றி கண்டு உங்களுக்கு நீங்களே போலியான தன்னம்பிக்கையை கொடுத்துக் கொள்ளக் கூடாது. மாறாக 5 நாட்களும் கடினமாக உழைத்து வெற்றிக்கு போராடும் பழக்கத்தை நீங்கள் உருவாக்க வேண்டும். அப்போது தான் உங்களாலும் இது போன்ற பெரிய போட்டிகளுக்கு சிறப்பாக உண்மையாக தயாராக முடியும்”

இதையும் படிங்க:அடுத்ததா அந்த புள்ள பூச்சி டீமை அடிச்சு சாதனை படைச்சுட்டு வாங்க – இந்திய அணியை ஓப்பனாக சாடிய கவாஸ்கர்

“குறிப்பாக நம்முடைய வேகப்பந்து வீச்சாளர்கள் அது போன்ற பிட்ச்களில் அதிகம் பந்துகளை வீசுவதற்கு வாய்ப்பை கூட பெறுவதில்லை. ஏனெனில் ஸ்பின்னர்கள் தான் முதல் ஓவரிலிருந்தே ஆதிக்கம் செலுத்துகின்றனர். இது போன்ற நிறைய அம்சங்களை நாம் திருத்த வேண்டும்” என்று கூறினார்.

Advertisement