
இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்து தொடரில் விளையாட உள்ளது. அதை முடித்துக் கொண்டு துபாயில் ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி களமிறங்க உள்ளது. அந்தத் தொடரில் 2013க்குப்பின் 12 வருடங்கள் கழித்து இந்திய அணி கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதற்கு விராட் கோலி, ரோஹித் சர்மா அசத்துவது அவசியமாகிறது.
ஏனெனில் இந்திய பேட்டிங் துறையின் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக அறியப்படும் அவர்கள் தற்போது சுமாரான ஃபார்மில் இருக்கிறார்கள். குறிப்பாக கடந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் அவர்களுடைய சுமாரான பேட்டிங் இந்தியாவின் தோல்விக்கு காரணமானது. அவர்களுடைய ஆட்டத்தால் இந்தியா டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முதல் முறையாக தகுதி பெறாமல் வெளியேறியது.
அதனால் ஏமாற்றத்தை சந்தித்த சில ரசிகர்கள் அவர்களை டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெறுமாறு விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் அனுபவமும் திறமையும் கொண்ட விராட் கோலி, ரோஹித் சர்மாவுக்கு எப்படி ஃபார்முக்கு திரும்ப வேண்டும் என்பது தெரியும் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். குறிப்பாக 2023 உலகக்கோப்பை, 2024 டி20 உலகக் கோப்பையில் அவர்கள் வெளிப்படுத்திய செயல்பாடுகளை மறக்க வேண்டாம் என்று ஹர்பஜன் கூறியுள்ளார்.
மேலும் இம்முறை சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் அணியை இந்தியா தோற்கடிக்கும் என்று ஹர்பஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “எப்படி கம்பேக் கொடுக்க வேண்டும் என்பது ஒரு சிறந்த வீரருக்கு நன்றாக தெரியும். விராட் மற்றும் ரோஹித் ஆகியோர் பெரிய நட்சத்திர அந்தஸ்தை கொண்டவர்கள்”
“அவர்கள் சாம்பியன்ஸ் டிராபியில் அசத்துவார்கள். அவர்கள் பெரிய தொடர்களில் எப்படி செயல்படுவார்கள் என்பதை நாம் பார்த்துள்ளோம். 2023 உலகக் கோப்பை மற்றும் கடந்த டி20 உலகக் கோப்பை ஆகியவை அதற்கு சிறந்த எடுத்துக்காட்டுகள். பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா கண்டிப்பாக வெல்லும். நீண்ட நாட்கள் கழித்து இந்தியா – பாகிஸ்தான் போட்டிகள் நடைபெறுவதால் அது பற்றிய பரபரப்பு இருக்கும்”
இதையும் படிங்க: 80 சதம்.. கோலி மகத்தான லைஃப் டைம் பிளேயர்.. சாம்பியன்ஸ் ட்ராபியில் அசத்துவாரு.. கங்குலி பேட்டி
“துபாயில் நிறைய இந்தியர்கள் மற்றும் பாகிஸ்தானியர்கள் இருப்பார்கள். எனவே அங்கு இரண்டு அணிகளுக்கும் மின்சாரத்தை போன்ற ஆதரவு இருக்கும். ஆனால் அங்கே இந்தியா வெற்றியை பெறக்கூடிய அணியாக வரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” எனக் கூறினார். கடைசியாக 2017 சாம்பியன்ஸ் ட்ராபி ஃபைனலில் இந்தியாவை தோற்கடித்து பாகிஸ்தான் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.