இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி தற்சமயத்தில் சுமாரான ஃபார்மில் இருந்து வருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் 26,000 ரன்கள் 80 சதங்கள் அடித்து பெரிய அனுபவத்தை கொண்ட அவர் கடந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்களில் இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்தார். குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் சதத்தை அடித்த அவர் தொடர்ந்து அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அதற்கடுத்த போட்டிகளில் அவுட் சைடு ஆஃப் ஸ்டம்ப் பந்துகளில் விராட் கோலி தனது விக்கெட்டை தொடர்ந்து பரிசாக கொடுத்தார். அவருடைய சுமாரான ஆட்டத்தால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முதல் முறையாக தகுதி பெறாமல் வெளியேறிய இந்தியா பார்டர் கவாஸ்கர் கோப்பையையும் 10 வருடங்கள் கழித்து கோட்டை விட்டது. அதனால் அவர் ஓய்வு பெற வேண்டிய நேரம் வந்து விட்டதாக ஒரு தரப்பு ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.
மகத்தான பேட்ஸ்மேன்:
இந்நிலையில் விராட் கோலி வெள்ளைப்பந்து கிரிக்கெட்டின் வரலாற்றில் மகத்தான பேட்ஸ்மேன் என்று சௌரவ் கங்குலி பாராட்டியுள்ளார். அதே சமயம் ஆஸ்திரேலிய தொடரின் முதல் போட்டியில் சதத்தை அடித்தும் அதற்கடுத்த போட்டிகளில் சொதப்பியது தமக்கு ஆச்சரியமாகவும் ஏமாற்றமாகவும் இருந்ததாக கங்குலி தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“ஆடவர் கிரிக்கெட்டில் விராட் கோலி வாழ்வில் ஒரு முறை மட்டும் வரக்கூடிய வீரர் என்று நினைக்கிறேன். சர்வதேச கிரிக்கெட்டில் 80 சதங்கள் அடித்த அவருடைய கேரியர் நம்ப முடியாதது. என்னைப் பொறுத்த வரை அவர் இந்த உலகம் கண்ட மகத்தான வெள்ளைப்பந்து கிரிக்கெட்டின் பிளேயர் ஆவார். ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் சதத்தை அடித்த பின்பும் அவர் பேட்டிங் செய்த விதம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது”
கங்குலி ஆதரவு:
“அதற்கு முன்பு ஒரு வருடம் தடுமாறிய அவர் முதல் போட்டியில் சதத்தை அடித்ததால் அந்தத் தொடர் முழுவதும் அசத்துவார் என்று நினைத்தேன். ஆனால் அவ்வாறு நடப்பது சகஜம். ஒவ்வொரு வீரர்களுக்கும் பலம் பலவீனம் இருக்கும். அது இல்லாத வீரர்களே உலகில் இருக்க முடியாது. இவை அனைத்தும் உங்களுடைய பலவீனத்திற்கு எப்படி உங்களை உட்படுத்திக் கொண்டு சிறந்த பவுலர்களை எதிர்கொண்டு விளையாடுகிறீர்கள் என்பதை பற்றியது”
இதையும் படிங்க: ஐபிஎல் 2025: பணம் முக்கியமல்ல.. பஞ்சாப் எடுத்துருவாங்களோன்னு பயந்தேன்.. ரிஷப் பண்ட் பல்டி பேட்டி
“எனவே இப்போதும் விராட் கோலியிடம் நிறைய கிரிக்கெட் இருப்பதாக நான் கருதுகிறேன். அடுத்த இங்கிலாந்து சுற்றுப்பயணம் அவருக்கு பெரிய சவாலாக இருக்கும். ஆனால் சாம்பியன்ஸ் டிராபியில் அவருடைய ஃபார்ம் பற்றி நான் கவலைப்படவில்லை. அவர் அத்தொடரில் உள்ள சூழ்நிலைகளில் ரன்கள் அடிப்பார்” எனக் கூறினார்.



