ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடரின் வீரர்கள் ஏலத்தில் ரிஷப் பண்ட் லக்னோ அணிக்காக 27 கோடிகளுக்கு வாங்கப்பட்டார். அதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றின் நேரடி ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரராகவும் அவர் சாதனை படைத்தார். இதைத் தொடர்ந்து அவரை லக்னோ அணியின் புதிய கேப்டனாகவும் அந்த அணி நிர்வாகம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் ஏலத்தில் தம்மை பஞ்சாப் அணி வாங்கி விடுமோ என்று பயந்ததாக ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார். ஏனெனில் எப்போதுமே அடிக்கடி மாற்றங்களை செய்யக்கூடிய அந்த அணியில் தம்மால் வெற்றிகரமாக செயல்பட முடியாது என்று அவர் மறைமுகமாக கூறியுள்ளார். மேலும் பணத்துக்காக தாம் ஏலத்தில் பங்கேற்கவில்லை என்றும் அவர் பல்டி அடித்து புதிய கருத்தை தெரிவித்துள்ளார்
பல்டி கருத்து:
ஏனெனில் 2025 ஏலத்தில் பங்கேற்றால் நான் எவ்வளவு விலைக்கு போவேன் என்று ரிஷப் பண்ட் ட்விட்டரில் ஏலத்துக்கு முன் வெளிப்படையாக பதிவிட்டிருந்தார். அது போக டெல்லி அணி தக்க வைக்க விரும்பியும் அதிக சம்பளம் பெற விரும்பியதாலயே அவர் வெளியேறியதாக பயிற்சியாளர் ஹேமங்க் பதானி சமீபத்தில் தெரிவித்திருந்தார். அந்த நிலையில் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ரிஷப் பண்ட் பேசியது பின்வருமாறு.
“பஞ்சாப் அணி பற்றி மட்டுமே எனக்கு ஒரு டென்ஷன் இருந்தது. அவர்களிடம் அதிக பணமும் இருந்தது. இருப்பினும் ஸ்ரேயாஸ் ஐயரை அவர்கள் வாங்கியதும் லக்னோ அணிக்காக நாம் வாங்கப்படுவோம் என்று கருதினேன். எனது செயல்முறைகள் எளிதானது. ஏலத்திற்கு வந்த போது பணம் மட்டும் என்னுடைய மனதில் இல்லை. 5 அல்லது 10 கோடிக்கு நான் வாங்கப்படுவேனா என்பது பற்றி நான் கவலையும் படவில்லை”
பணம் முக்கியமல்ல:
“அதற்காக என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன். அது எளிதல்ல. எப்போதும் பணம் மட்டுமே முக்கியமல்ல என்ற உண்மையை உங்களுக்கு நீங்களே சொல்லி சமாதானப்படுத்திக் கொள்ள வேண்டும். பணம் என்பது ஒரு அங்கம் மட்டுமே. பணத்தை பெறுவது சிறந்த விஷயம். ஆனால் அது மட்டுமே முதன்மையானதாக இருக்கக் கூடாது”
இதையும் படிங்க: தோல்விகளால் குறைவா நினைக்காதீங்க.. கெளதம் கம்பீர் வலுவான லீடர்.. வெற்றிகள் வரும்.. மெக்கல்லம் ஆதரவு
“இவ்வளவு பெரிய தொகைக்கு வாங்கப்பட்டதால் எனக்கு எந்த அழுத்தமும் இருக்காது என்று எங்கள் அணியின் உரிமையாளரே கூறியுள்ளார். அவரே அப்படி சொல்லும் போது எனக்கும் எந்த அழுத்தமும் இல்லை” என்று கூறினார். இதைத்தொடர்ந்து 2025 ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் தலைமையில் முதல் கோப்பையை வெல்லும் முனைப்புடன் லக்னோ விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.