பாவம் அதிக மேட்ச்ல விளையாடி களைச்சிட்டாரு அதான் தடுமாறுறாரு – நட்சத்திர இந்திய வீரருக்கு ஹர்பஜன் ஆதரவு

Harbhajan Singh
- Advertisement -

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா புள்ளி கொடுக்கப்பட்டது. இலங்கையின் கண்டி நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்ததால் 66/4 என ஆரம்பத்திலேயே மிகப்பெரிய சரிவை சந்தித்தது. இருப்பினும் மிடில் ஆர்டரில் இசான் கிசான் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் 138 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 267 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயிக்க உதவி ஓரளவு மானத்தை காப்பாற்றினார்கள்.

முன்னதாக அந்த போட்டியில் சாகின் அப்ரிடிக்கு எதிராக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் கிளீன் போல்டானது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. அதை விட ஹரிஷ் ரவூப் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் தொடக்க வீரர் சுப்மன் கில் 10 ரன்னில் போல்டாகி சென்றது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக அமைந்தது என்றே சொல்லலாம். ஏனெனில் தற்சமத்தில் நல்ல ஃபார்மில் இருக்கும் பேட்ஸ்மேனாக அறியப்படும் அவர் சச்சின், விராட் கோலி வரிசையில் அடுத்த சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் பாராட்டுப்படும் அளவுக்கு நல்ல திறமை கொண்டுள்ளார்.

- Advertisement -

ஹர்பஜன் ஆதரவு:
குறிப்பாக இந்த வருடம் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டி20, ஒருநாள், டெஸ்ட் ஆகிய 3 வகையான கிரிக்கெட்டிலும் சதமடித்து சாதனைகளை படைத்த அவர் ஐபிஎல் 2023 தொடரில் ஆரஞ்சு தொப்பியை வென்று அசத்தினார். ஆனால் அதன் பின் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் சொதப்பிய அவர் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திலும் சுமாராக செயல்பட்டு விமர்சனத்திற்குள்ளானார்.

இந்நிலையில் நல்ல ஃபார்மில் இருக்கும் சுப்மன் கில் டெக்னிக்கில் எந்த தவறுமில்லை என்று என்று தெரிவிக்கும் ஹர்பஜன் சிங் சமீப காலங்களில் அதிகப்படியான போட்டிகளில் விளையாடிய சோர்வாலையே தடுமாறுவதாக ஆதரவு தெரிவித்துள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “அனேகமாக இது அதிகப்படியான கிரிக்கெட்டால் வந்துள்ளது என்று நினைக்கிறேன். ஏனெனில் அவர் சமீப காலங்களில் தொடர்ந்து அனைத்து போட்டிகளிலும் விளையாடி வருகிறார்”

- Advertisement -

“குறிப்பாக ஐபிஎல் தொடரில் அவர் மிகச் சிறப்பாக செயல்பட்டார். இருப்பினும் மிகவும் அழுத்தமான ஐபிஎல் தொடருக்குப்பின் ஒவ்வொரு வீரருக்குமே ஓய்வு அவசியமாகும். அத்துடன் ஒவ்வொரு 2 – 3 நாட்களுக்கு ஒரு முறை நீங்கள் அதிக தூரம் பயணிக்க வேண்டியுள்ளதால் சிறிய ஓய்வு தேவையாகும். இருப்பினும் நல்ல ஃபார்மில் இருக்கும் அவர் ஐபிஎல் போலவே கம்பேக் கொடுத்து ரன்கள் அடிப்பதை விரைவில் பார்க்க முடியும்”

இதையும் படிங்க: RSA vs AUS : தெ.ஆ அணியை சொந்த மண்ணில் தூளாக்கிய ஆஸ்திரேலியா – புதிய கேப்டன் தலைமையில் வரலாற்று சாதனை வெற்றி

“ஏனெனில் அவருடைய டெக்னிக்கில் எந்த தவறுமில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன். அனேகமாக இது தன்னம்பிக்கையின் சற்று பின்னடைவு ஏற்பட்டதால் வந்திருக்கலாம். இருப்பினும் தமக்கு சற்று நேரம் கொடுத்து விளையாடினால் அவரால் சிறப்பாக செயல்பட முடியும் என்று நான் நம்புகிறேன்” என கூறினார். இருப்பினும் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு பின் நடைபெற்ற அயர்லாந்து தொடரில் பணிச்சுமையை நிர்வகிப்பதற்காக கில் ஓய்வெடுத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement