ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இலங்கையில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. எதிர்வரும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக நடைபெற்று வரும் இந்த ஆசிய கோப்பை தொடரானது இந்திய அணிக்கு முக்கிய தொடராக பார்க்கப்படும் வேளையில் இந்த தொடரில் விளையாடும் இந்த அணியே உலகக்கோப்பை தொடரின் பிளேயிங் லெவனாக இருக்கும் என்பதனால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.
இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியில் அனுபவ வீரரான முகமது ஷமி இருந்தும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் பேட்டிங் டெப்த் இருக்க வேண்டும் என்பதன் காரணமாக ஷர்துல் தாகூருக்கு ரோகித் சர்மா இடம் கொடுத்திருந்தார். ஆனால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஷர்துல் தாகூர் வெறும் மூன்று ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து இருந்தார்.
அதன் பிறகு நேபாள் அணிக்கு எதிரான போட்டியின் போது பும்ரா தனது குழந்தை பிறப்பிற்காக நாடு திரும்பியதால் முகமது ஷமி இரண்டாவது போட்டியில் விளையாடி இருந்தார். இந்நிலையில் ஷர்துல் தாகூருக்கு பதிலாக முகமது ஷமிக்கு தான் இடம் கொடுக்க வேண்டும் என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
அந்த வகையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங்கும் அதே கோரிக்கையை முன் வைத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : என்னை பொறுத்தவரை முகமது ஷமி அணியில் தொடர்ச்சியாக விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனெனில் அவருடைய அனுபவத்தை யாராலும் விலைக்கு வாங்க முடியாது.
அவர் டக் அவுட்டில் அமர்ந்திருப்பதை பார்ப்பதற்கு வருத்தமாக உள்ளது. என்னை பொறுத்தவரை ஷர்துல் தாகூரை காட்டிலும் முகமது ஷமிதான் விளையாட வேண்டும். ஏனெனில் முகமது சிராஜ், பும்ரா ஆகியோரோடு ஷமி இணையும் போது இன்னும் பந்துவீச்சு கூட்டணி பலமடையும். அதேபோன்று ஷர்துல் தாகூரிடம் பேட்டிங்கை எதிர்பார்க்காமல் அணியின் பேட்ஸ்மேன்களை ரன் குவிக்க சொல்ல வேண்டும். ஏனெனில் பேட்ஸ்மேன்கள் தான் ரன் குவிப்பிற்கு பொறுப்பினை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க : ஐ.பி.எல் 2023-ல நான் ஒரு ஓவர் கூட பவுலிங் பண்றேனு கேக்கவே இல்ல. ஏன் தெரியுமா? – ஷிவம் துபே விளக்கம்
அதனை தவிர்த்து பேட்டிங் டெப்த் வேண்டும் என்றதற்காக ஷர்துல் தாகூரை அணியில் இணைப்பது தவறு. நிறைய பேர் ஷர்துல் தாகூரால் பேட்டிங் மற்றும் பவுலிங் செய்ய முடியும் என்று கூறுகிறார்கள். அதனை நான் ஒப்புக்கொள்கிறேன் ஆனாலும் கீழ் வரிசையில் வந்து அவர் பேட்டிங்கில் கை கொடுப்பதை விட ஒரு முறையான பவுலரை வைத்திருந்தால் அது அணிக்கு மேலும் பலத்தை தரும் என ஹர்பஜன் சிங் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.