ஹேப்பி பர்த்டே தல தோனி – இந்திய கிரிக்கெட்டின் ஆல்டைம் பெஸ்ட் விக்கெட் கீப்பர் இவர்தான் – ஏன் தெரியுமா?

Dhoni
- Advertisement -

இந்தியாவைச் சேர்ந்த நட்சத்திர முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி இன்று தனது 41-வது பிறந்தநாளை இங்கிலாந்தின் லண்டனில் தனது குடும்பம் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடினார். இந்த நாளை அவரது ரசிகர்கள் 41 அடி உயர கட் அவுட், பேனர், கேக் என ஒரு சினிமா பிரபலத்தை போல் நிஜ வாழ்விலும் சமூக வலைதளங்களிலும் கொண்டாடினார்கள். கிரிக்கெட் பிரபலமடையாத ராஞ்சி எனும் சிறிய நகரில் ஏழைக் குடும்பத்தில் பிறந்த அவர் தனது அபார திறமையால் இந்தியாவுக்காக 3 வகையான உலகக்கோப்பைகளை வென்று கொடுத்ததே இந்த அத்தனை கொண்டாட்டங்களுக்கும் காரணமாகும்.

Dhoni-Bday

- Advertisement -

கிரிக்கெட் மீதிருந்த காதலால் ரயில்வே அரசு வேலையை விட்டுவிட்டு நாட்டுக்காக விளையாடும் லட்சியத்தில் உள்ளூர் கிரிக்கெட்டில் வெளுத்து வாங்கிய இவர் 2004இல் அப்போதைய கேப்டன் கங்குலியின் நம்பிக்கையை பெற்று சர்வதேச அரங்கில் அறிமுகமானார். அறிமுக போட்டியிலேயே கோல்டன் டக் அவுட்டாகி மோசமான தொடக்கத்தை பெற்றாலும் அதன்பின் அதிரடியாக பேட்டிங் செய்து மின்னல் வேகத்தில் விக்கெட் கீப்பிங் செய்து 3 வகையான இந்திய அணியிலும் முதன்மை விக்கெட் கீப்பராக அளவுக்கு அபார வளர்ச்சி கண்டார்.

அதைவிட உள்ளூர் போட்டிகளில் கூட கேப்டன்ஷிப் அனுபவமில்லாத போதிலும் 2007இல் தம்மிடம் நம்பி கொடுக்கப்பட்ட பொறுப்பில் இளமையும் அனுபவமும் கலந்த தரமான வீரர்களை சரியாக வழி நடத்திய அவர் பரம எதிரியான பாகிஸ்தானை பைனலில் தோற்கடித்து வரலாற்றின் முதல் டி20 உலகக் கோப்பையை இந்தியாவிற்கு வென்று கொடுத்தார்.

Trophies Won By MS Dhoni

பன்முக தோனி:
அப்போது துவங்கிய அவரின் வெற்றி பயணம் இன்று வரை முடியவே இல்லை என்றே கூறலாம். ஏனெனில் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் போன்ற ஜாம்பவான்களை அற்புதமாக வழிநடத்திய அவர் 2010இல் வரலாற்றில் இந்தியாவை நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக தரம் உயர்த்தி 2011இல் கங்குலி உருவாக்கிய வீரர்களை வைத்து சொந்த மண்ணில் 28 வருடங்கள் கழித்து உலக கோப்பையையும் வென்று கொடுத்தார். அதைவிட தாம் உருவாக்கிய விராட் கோலி, ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னா போன்ற இளம் வீரர்களை வைத்து 2013ல் இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபியை வென்று காட்டிய வரலாற்றில் 3 விதமான ஐசிசி உலகக் கோப்பைகளை வென்ற ஒரே மகத்தான கேப்டன் என்ற ரிக்கி பாண்டிங் கூட படைக்காத சாதனையை படைத்தார்.

- Advertisement -

ஐபிஎல் தொடரிலும் சென்னைக்காக 4 கோப்பைகளை வென்று போட்டிகளின் அடிப்படையில் வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ள அவர் இன்றைய இந்திய அணியில் விளையாடும் 70% வீரர்களை அப்போதே கண்டறிந்து தேவையான வாய்ப்பையும் ஆதரவையும் கொடுத்து வளர்த்து வருங்கால இந்தியாவுக்கு வளமான அடித்தளத்தை அமைத்தவர்.

Dhoni

அதேபோல் அதிரடியாக பேட்டிங் செய்யும் கூடிய திறமை பெற்ற இவர் கேப்டனாக பொறுப்பேற்றதும் அணியின் நலனுக்காக தனது வாழ்நாளில் பெரும்பாலும் மிடில் ஆர்டரில் விளையாடினார். அதனாலேயே பெரும்பாலும் கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடியாக ரன்களை குவித்த அவரின் இயற்கையான பினிஷிங் திறமையும் வெளிவந்தது. அந்த வகையில் இந்தியா தோற்கயிருந்த எத்தனையோ போட்டிகளில் அதிரடியாக பேட்டிங் செய்து வெற்றிகளை பெற்றுக் கொடுத்த அவர் உலகின் மிகச்சிறந்த பினிஷர்களில் முதன்மையானவராக போற்றப்படுகிறார்.

- Advertisement -

மகத்தான கீப்பர்:
மகத்தான கேப்டன், சிறப்பான பினிஷர், இளைஞர்களுக்கு ரோல் மாடல்களாக திகழும் தலைவன் போன்ற பன்முகங்களை கொண்டிருக்கும் தோனி ஏன் இந்திய கிரிக்கெட்டின் முதன்மையான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்பதை பற்றி பார்ப்போம்:

Dhoni 2

கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பர்கள் என்றால் பந்து பிடித்து போடுபவர்கள் என்ற நிலைமையே காலம் காலமாக இருந்து வந்தது. அதை 90களில் அறிமுகமான ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் விக்கெட் கீப்பர்களால் அதிரடியாகவும் பேட்டிங் செய்து வெற்றிக்கு பங்காற்ற முடியும் என்பதை உலகிற்கு நிரூபித்தார். அதேபோல் 1932 முதல் இந்திய கிரிக்கெட்டில் இருந்த அத்தனை விக்கெட் கீப்பர்களும் பேட்டிங்கில் பெரும்பாலும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்களாக அல்லாமல் பந்து பிடித்து போடுபவர்களாகவே இருந்தனர். அதை 2004இல் அறிமுகமாகி தனது அதிரடி சரவெடியான பேட்டிங் மற்றும் மின்னல் வேக விக்கெட் கீப்பிங் ஆகியவற்றால் தலைகீழாக மாற்றிய எம்எஸ் தோனி இந்திய விக்கெட் கீப்பர்களின் இலக்கணத்தை மாற்றியமைத்தார்.

- Advertisement -

பேட்ஸ்மேன்கள் ஒருசில இன்ச்கள் காலை நகர்த்தினாலும் கண்ணிமைக்கும் நேரத்தில் மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்வது, முக்கிய தருணங்களில் ஒற்றை கையுறையை கழற்றிவிட்டு கீப்பிங் செய்வது, திரும்பி பார்க்காமல் ரன் அவுட் செய்வது போன்ற அம்சங்களால் ஒட்டுமொத்த உலக அளவில் விக்கெட் கீப்பிங்கை புதிய பரிணாமத்திற்கு எடுத்துச் சென்ற பெருமை தோனியை சேரும். சர்வதேச கிரிக்கெட்டில் ஆடம் கில்கிறிஸ்ட் (92), குமார் சங்ககாரா (139) ஆகியோரைக் காட்டிலும் அதிக ஸ்டம்பிங் செய்த விக்கெட் கீப்பராக தோனி (195) உலக சாதனை படைத்துள்ளதே அதற்கு சான்றாகும்.

Dhoni

அதேபோல் ஒருநாள் கிரிக்கெட்டில் 50+ பேட்டிங் சராசரியுடன் அதிக ரன்கள் குவித்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களின் பட்டியலைப் பார்த்தாலே யார் மிகச் சிறந்த விக்கெட் கீப்பர் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். அந்தப் பட்டியல் இதோ:
1. எம்எஸ் தோனி : 10770 ரன்கள்
2. ஷை ஹோப் : 4016* ரன்கள்
3. ஏபி டிவில்லியர்ஸ் : 2963 ரன்கள்

அதைவிட ஒருநாள் கிரிக்கெட்டில் வரலாற்றில் தோனியை தவிர வரலாற்றில் விளையாடிய அத்தனை இந்திய விக்கெட் கீப்பர்களின் இணைந்த பேட்டிங் புள்ளி விவரங்கள் இதோ:
இன்னிங்ஸ் : 481
ரன்கள் : 8427
சராசரி : 24.00
சதங்கள் : 5
அரை சதங்கள் : 37

Dhoni

அதேசமயம் ஒருநாள் கிரிக்கெட்டில் தோனியின் பேட்டிங் புள்ளி விவரங்கள் இதோ:
இன்னிங்ஸ் : 294
ரன்கள் : 10599
சராசரி : 50.23
சதங்கள் : 9
அரை சதங்கள் : 73

மேற்குறிப்பிட்ட புள்ளி விவரங்களே அன்றும் இன்றும் என்றும் இந்திய கிரிக்கெட்டின் மகத்தான விக்கெட் கீப்பர் என்றால் அது எம்எஸ் தோனி என்பதை நிரூபிக்கப் போதுமானது. இன்று ரிஷப் பண்ட், இஷான் கிசான் அல்லது வருங்காலத்தில் அவர்களையும் மிஞ்சிய வீரர்கள் விக்கெட் கீப்பர்களாக வந்து தோனியின் சாதனையை உடைக்கலாம்.

இதையும் படிங்க : டி20 உலககோப்பையில் உம்ரான் மாலிக் இடம்பெறுவாரா? மிகப்பெரிய ஹின்ட் கொடுத்த – கேப்டன் ரோஹித் சர்மா

ஆனால் இந்திய கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பர்கள் என்றால் அதிரடியாக விளையாட வேண்டும் என்ற நிலைமையையும் இலக்கணத்தையும் உருவாக்கிய எம்எஸ் தோனியே வரலாற்றின் மிகச்சிறந்த முதல் விக்கெட் கீப்பராக காலம் கடந்தும் நிற்க தகுதியானவர்.

Advertisement