ஹேப்பி பர்த்டே தாதா : இந்திய கிரிக்கெட்டை வளமாக்கிய கங்குலி – இன்றும் படைத்துள்ள மகத்தான சாதனைகளின் பட்டியல்

Ganguly
- Advertisement -

நட்சத்திர முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சௌரவ் கங்குலி இன்று தம்முடைய 51வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடுகிறார். கொல்கத்தாவின் ராஜ குடும்பத்தில் பிறந்து கிரிக்கெட்டின் மீதான காதலால் உள்ளூர் போட்டிகளில் விளையாடி கடந்த 1992ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் அறிமுகமான அவர் ஆரம்ப காலத்தில் தடுமாறினாலும் 1996ஆம் ஆண்டு கிரிக்கெட்டின் மெக்கா என்றழைக்கப்படும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தன்னுடைய அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்து சாதனை படைத்தார். அப்போதிலிருந்து மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்த துவங்கி நிரந்தர இடத்தை பிடித்த அவர் சச்சின் டெண்டுல்கருடன் ஜோடி சேர்ந்து எதிரணிகளைப் பந்தாடி இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்தார்.

மேலும் ஆஃப் சைடின் கடவுள் என்று ரசிகர்கள் கொண்டாடும் அளவுக்கு ஆஃப் சைட் திசையில் எப்படி பந்து வீசினாலும் அடித்து நொறுக்கும் திறமையை கொண்டிருந்த அவர் ஸ்பின்னர்களை இறங்கி இறங்கி வந்து கன்னத்தில் அறையாத குறையாக பறக்க விட்ட சிக்சர்களை எப்போதும் மறக்க முடியாது. அதை விட 90களின் இறுதியில் சூதாட்டப் புகாரில் சிக்கி அவப்பெயருக்கு உள்ளான இந்தியாவின் கேப்டனாக பொறுப்பேற்ற அவர் தம்முடைய ஆக்ரோஷம் நிறைந்த அதிரடியான கேப்டன்ஷிப் வாயிலாக தரமான அணியை உருவாக்கி குறுகிய காலத்திலேயே வெற்றி நடை போட வைத்தார்.

- Advertisement -

தாதாவின் சாதனைகள்:
அவரது தலைமையில் 2002 சாம்பியன்ஸ் ட்ராபியை மழையால் இலங்கையுடன் பகிர்ந்து கொண்ட இந்தியா 2002 நாட்வெஸ்ட் முத்தரப்பு தொடரை வென்று 2003 உலக கோப்பையில் ஃபைனல் வரை சென்ற அசத்தியது. மேலும் 2001 கொல்கத்தா டெஸ்ட் போல தோல்வியின் பிடியில் சிக்கினாலும் மனம் தளராமல் போராடி குணத்தையும் வெளிநாடுகளில் எப்படி வெற்றி பெற வேண்டும் என்ற கலையையும் இந்தியாவிற்கு அவர் கற்றுக் கொடுத்தார் என்றே சொல்லலாம். அத்துடன் சேவாக் கம்பீர், யுவராஜ், ஹர்பஜன், தோனி உட்பட அவர் உருவாக்கிய அனைத்து இளம் வீரர்களுமே இன்று ஜாம்பவான்களாக ஜொலிக்கின்றனர்.

சொல்லப்போனால் கங்குலி உருவாக்கிய வீரர்களை வைத்தே 2007 டி20 உலக கோப்பை மற்றும் 2011 உலக கோப்பையில் எம்எஸ் தோனி இந்தியாவுக்கு சாம்பியன் பட்டம் வென்று கொடுத்தார். இருப்பினும் கிரேக் சேப்பல் உடனான கருத்து வேறுபாடு காரணமாக அதிரடியாக நீக்கப்பட்ட அவர் மீண்டும் கம்பேக் கொடுத்து 2008இல் திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்தார். மேலும் 2019 முதல் 2022 வரை பிசிசிஐ தலைவராகவும் சிறப்பாக செயல்பட்ட அவர் தற்போது ஓய்வு பெற்று மீண்டும் ஏற்கனவே செய்து வந்த வர்ணனையாளர் பணியை தொடர்ந்து வருகிறார்.

- Advertisement -

மொத்தத்தில் எதிரணிகள் ஸ்லெட்ஜிங் செய்தால் அதற்கு குனியாமல் லார்ட்ஸ் மைதானத்தில் சட்டையை கழற்றி சுழற்றியது முதல் இன்றைய இந்திய கிரிக்கெட்டின் வளமான வருங்காலத்திற்கு அப்போதே விதை போட்ட சௌரவ் கங்குலி படைத்துள்ள சில முக்கியமான சாதனைகளைப் பற்றி பார்ப்போம்:

1. உலகிலேயே ஐசிசி தொடர்களில் அதிக சதங்கள் அடித்த கேப்டன் என்ற உலக சாதனை 6 சதங்களுடன் இன்றும் அவர் தன்வசம் வைத்துள்ளார். 2வது இடத்தில் ஆஸ்திரேலியாலின் ரிக்கி பாண்டிங் (5) உள்ளார்.

- Advertisement -

2. ஒருநாள் கிரிக்கெட்டில் 4 தொடர்ச்சியான வருடங்களில் 1300க்கும் மேற்பட்ட ரன்களை அடித்த ஒரே வீரர் என்ற மாபெரும் உலக சாதனையை இன்றும் கங்குலி படைத்துள்ளார். கடந்த 1997இல் 1338, 1998இல் 1328, 1999இல் 1767, 2000இல் 1579 ரன்கள் என 4 அடுத்தடுத்த வருடங்களில் 1300க்கும் மேற்பட்ட ரன்களை அடித்து அவர் இந்த சாதனையை படித்துள்ளார். அவரை தவிர்த்து வேறு யாரும் 2 வருடங்களில் கூட அவ்வளவு ரன்கள் அடித்ததில்லை.

3. அதுபோக ஒருநாள் கிரிக்கெட்டில் 4 தொடர்ச்சியான போட்டிகளில் ஆட்டநாயகன் விருது பெற்ற ஒரே வீரர் என்ற மாபெரும் உலக சாதனையும் கங்குலி படைத்துள்ளார். கடந்த 1997இல் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் அவர் இந்த சாதனையை படைத்தார்.

- Advertisement -

4. மேலும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் ஒரே தொடரில் 3 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையும் ஃபைனலில் அதிகபட்ச ஸ்கோர் (117) பதிவு செய்த வீரர் என்ற சாதனையும் கங்குலி படைத்துள்ளார். 2000 சாம்பியன்ஸ் ட்ராபியில் அவர் இந்த சாதனைகளை படைத்துள்ளார்.

5. ஐசிசி உலகக்கோப்பை வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய வீரராக இப்போதும் சௌரவ் கங்குலி முதலிடத்தில் இருக்கிறார். 183, இலங்கைக்கு எதிராக, 1999.

இதையும் படிங்க:IND vs WI : இந்திய அணியின் தேர்வு கொஞ்சம் கூட சரியில்ல. டீம்ல பினிஷரான அவரை சேத்திருக்கனும் – ஹர்ஷா போக்ளே கருத்து

6. அத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சினுடன் இணைந்து அதிக பார்ட்னர்ஷிப் ரன்கள் (8227) குவித்த ஜோடி என்ற உலக சாதனையும் படைத்துள்ள படைத்துள்ள கங்குலி பத்மஸ்ரீ போன்ற இந்தியாவின் உயரிய விருதுகளையும் வென்றுள்ளார்.

Advertisement