சர்வதேச கிரிக்கெட்டில் முதன்மை அணியாக திகழும் இந்தியாவுக்காக விளையாடும் 11 பேர் அணியில் நிலையான இடம் பிடிப்பது மிகப்பெரிய சவாலாகும். ஏனெனில் ரஞ்சிக் கோப்பையில் ஒரே சமயத்தில் 38 அணிகளில் 400க்கும் மேற்பட்ட வீரர்கள் விளையாடி போட்டி போடுவதால் வெறும் 11 பேர் மட்டுமே விளையாடக்கூடிய இந்திய அணியில் வாய்ப்பு பெறுவது மிகவும் கடினமாகும். சொல்லப்போனால் ஒரு வீரர் சதமடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்து காயமடைந்து வெளியேறினால் மீண்டும் முழுமையாக குணமடைந்து வரும் போது அவருக்கு அதே இடம் கிடைப்பதில்லை. அதற்கு தற்சமயத்தில் சிறந்த எடுத்துக்காட்டாக ஹனுமா விகாரி இருக்கிறார் என்றால் மிகையாகாது.
ஆந்திராவைச் சேர்ந்த அவர் கடந்த 2010 முதலே உள்ளூர் போட்டிகளில் விளையாடி சிறப்பாக செயல்பட்டதால் ஒரு வழியாக கடந்த 2018இல் இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார். இருப்பினும் புஜாரா, ரகானே போன்ற சீனியர்கள் இருந்ததால் நிலையான வாய்ப்புகளை பெறாத அவர் கடந்த 2021ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடைபெற்ற 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அஸ்வினுடன் இணைந்து காயத்தை பொருட்படுத்தாமல் நங்கூரமாக நின்று போராடி தோல்வியை தவிர்க்க உதவினார்.
கடினமான கம்பேக்:
அதைத்தொடர்ந்து கடந்த 2021 டிசம்பரில் தெனாப்பிரிக்க மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரிலும் வாய்ப்பு பெற்ற போட்டியில் சிறப்பாக செயல்பட்ட அவருக்கு ரகானே இருந்ததால் நிலையான இடம் கிடைக்கவில்லை. அந்த நிலையில் 2022 ஜனவரியில் ரகானே மற்றும் புஜாரா ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டதால் தொடர்ச்சியான வாய்ப்புகளை பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் மீண்டும் காயத்தை சந்தித்து தற்போது இந்திய அணியிலிருந்து வெகு தூரம் சென்று துலீப் உள்ளூர் கோப்பை தொடரில் தெற்கு மண்டல அணியின் கேப்டன் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் நிலையான இடத்தை பிடிக்கும் வரை ஒருமுறை இந்திய அணியிலிருந்து காயமடைந்து வெளியேறினால் மீண்டும் கம்பேக் கொடுப்பது மிகவும் கடினம் என்று ஹனுமா விஹாரி கூறியுள்ளார். இருப்பினும் 35 வயதில் ரகானே கம்பேக் கொடுத்துள்ளதை போல 29 வயதாகும் தம்மாலும் சாதிக்க முடியும் என்று அவர் நம்பிக்கையும் தெரிவித்துள்ளார். ஆனால் ரகானே போல தமக்கு ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பு 10 வருடங்களாக கிடைக்காததால் இந்தியாவுக்காக மீண்டும் விளையாடுவது கடினம் என்று சோகத்துடன் தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.
“ஒருமுறை நீங்கள் நீக்கப்பட்டு இந்திய அணியிலிருந்து வெளியேறினால் மீண்டும் கம்பேக் கொடுப்பது மிகவும் கடினமான காரியமாகும். ஏனெனில் அது உங்களை மனதளவில் பாதிக்கும். அதை நான் கடந்த சீசனில் எதிர்கொண்டேன். இருப்பினும் நீங்கள் ஓய்வு பெறும் வரை இந்தியாவுக்காக மீண்டும் விளையாடி கம்பேக் கொடுக்க முயற்சிக்க வேண்டும். குறிப்பாக ரகானே 35 வயதில் கம்பேக் கொடுத்த நிலையில் 29 வயது மட்டுமே நிரம்பியுள்ள என்னாலும் சாதிக்க முடியும் என்று நம்புகிறேன்”
“என்னால் இன்னும் நீண்ட தூரம் இந்திய அணியில் குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிகளில் பங்காற்ற முடியும் என்று உணர்கிறேன். எனவே இந்த சீசனில் முழு கவனத்தையும் பேட்டிங்கில் செலுத்தி என்னுடைய நுணுக்கங்களை முன்னேற்ற முயற்சிக்க உள்ளேன். மேலும் இந்தியாவுக்காக இதற்கு முன் விளையாடுவதற்கு கிடைத்த வாய்ப்புகளை நான் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக கருதுகிறேன். ஒருவேளை என்னுடைய செயல்பாடுகள் இந்திய அணிக்கு போதுமானதாக இல்லாமல் இருந்திருக்கலாம். அதனால் நான் என்னை இன்னும் முன்னேற்ற முயற்சிக்க உள்ளேன்”
இதையும் படிங்க:IND vs WI : திலக் வர்மாவை விட நன்றாக விளையாடி இருந்தும் டி20 அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்ட தமிழகவீரர் – இதை கவனிச்சீங்களா?
“மேலும் ஐபிஎல் தொடரில் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு எனக்கு வாய்ப்புகள் கிடைப்பதில்லை. மாறாக உள்ளூர் தொடரில் மட்டுமே விளையாடுவதற்கு வாய்ப்புகள் கிடைக்கின்றன. அதனால் அதை நான் சிறப்பாக பயன்படுத்த வேண்டியுள்ளது. அத்துடன் அனைவரும் என்னை டெஸ்ட் வீரர் என்று கருதுவது நியாயமற்றதாகும். ஏனெனில் 19 – 20 வயதில் ஐபிஎல் தொடரில் ஓரளவு சிறப்பாக செயல்பட்ட எனக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே 3 விதமான கிரிக்கெட்டில் விளையாடுபவர்கள் மட்டும் தரமான வீரர்கள் என்று மதிப்பிடுவது நியாயமற்றதாகும்” என கூறினார்.