இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியை நேற்று இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஹார்டிக் பாண்டியாவின் தலைமையிலான பதினைந்து பேர் கொண்ட இந்திய அணியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் இடதுகை ஆட்டக்காரரான திலக் வர்மாவிற்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இப்படி திலக் வர்மாவிற்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது பலராலும் வரவேற்கப்பட்டிருந்தாலும் அதேபோன்று மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடும் இடது கை தமிழக ஆட்டக்காரரான சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் கேள்வியை எழுப்பி உள்ளது. ஏனெனில் ஐபிஎல் தொடரில் கடந்த 2022-ஆம் ஆண்டு அறிமுகமாகி இதுவரை 25 போட்டிகளில் விளையாடியுள்ள திலக் வர்மா 38.9 சராசரியுடன் 740 ரன்கள் குவித்துள்ளார். அதிகபட்சமாக 84 ரன்கள் குவித்துள்ளார்.
இந்தியாவில் நடைபெற்று முடிந்த 16-வது சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதேவேளையில் கடந்த 2022-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான தமிழக வீர சாய் சுதர்சன் 13 போட்டிகளில் விளையாடி 46.1 என்கிற சராசரி உடன் 507 ரன்களை குவித்து அவரும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
அதோடு உள்ளூர் தொடர்களிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு இந்திய அணியில் ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதோடு நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் மும்பை அணி வெளியேறியிருந்தும் திலக் வர்மாவிற்கு வாய்ப்பை வழங்கிய நீங்கள் இறுதிப் போட்டி வரை சென்ற குஜராத் அணியில் இடம் பிடித்து சிஎஸ்கே அணிக்கு எதிரான கடைசி மாபெரும் அழுத்தம் நிறைந்த இறுதிப்போட்டியில் 96 ரன்களை விளாசிய சாய் சுதர்சனுக்கு ஏன் வாய்ப்பினை வழங்கவில்லை? என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்திய அணியின் மிடில் ஆர்டரில் இடதுகை ஆட்டக்காரர்கள் இல்லை என்கிற பேச்சுக்கள் எழுந்து வந்த வேளையில் திலக் வர்மா தேர்வு செய்யப்பட்டது சரியான விடயம் தான் என்றாலும் அவரை விட நல்ல சராசரி வைத்திருந்தும், அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தும் தமிழக வீரரான சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது அனைவரது மத்தியிலும் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது.
இதையும் படிங்க : சச்சினை மிஞ்சி 21 பந்தில் 50 ரன்கள் உட்பட, இந்தியாவின் புதிய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் – படைத்துள்ள 5 சாதனைகள் இதோ
ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணியைச் சேர்ந்த வீரர்கள் தான் இந்திய அணிக்காக தொடர்ச்சியாக தேர்வு செய்யப்படுகிறார்கள் என்கிற பேச்சு இருந்த வேளையில் தற்போது திலக் வர்மாவின் தேர்வும் நெட்டிசன் மத்தியில் பேசு பொருளாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.