PBKS vs GT : யாஷ் தயாயளுக்கு பதிலாக வந்து பஞ்சாப் வெற்றியை பறித்த மூத்த வீரர் – கடைசி ஓவரில் குஜராத் வென்றது எப்படி

Mohit Sharma GT vs PBKS
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 13ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடைபெற்ற 18வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. அதில் கடந்த போட்டியில் ரிங்கு சிங் மாயாஜாலத்தால் கையிலிருந்த வெற்றியை கோட்டை விட்ட குஜராத்துக்கு இம்முறை கேப்டனாக திரும்பிய ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப்புக்கு முதல் ஓவரிலேயே பிரப்சிம்ரன் சிங் டக் அவுட்டாகி ஏமாற்றிய நிலையில் கடந்த போட்டியில் நங்கூரமாக நின்ற கேப்டன் ஷிகர் தவானும் 8 (8) ரன்களில் அவுட்டாகி சென்றார்.

அதனால் 28/2 என ஆரம்பத்திலேயே தடுமாறிய அந்த அணிக்கு அடுத்ததாக வந்த மேத்தியூ ஷார்ட் அதிரடியாக விளையாட முயற்சித்து 6 பவுண்டரி 1 சிக்சருடன் 36 (24) ரன்களில் ஆட்டமிழந்தார். அவருடன் இம்பேக்ட் வீரராக விளையாடிய பனுகா ராஜபக்சா தடுமாறி 20 (26) ரன்களிலும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜித்தேஷ் சர்மா 25 (23) ரன்களிலும் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தனர். அதனால் 115/4 என தடுமாறிய பஞ்சாப் 150 ரன்களை தொடுமா என்ற சந்தேகம் நிலவிய போது கடைசி நேரத்தில் தமிழக வீரர் சாருக்கான் அதிரடியாக 1 பவுண்டரி 2 சிக்சருடன் 22 (22) ரன்களும் ஷாம் கரண் தலா 1 பவுண்டரி 2 சிக்சருடன் 22 (9) ரன்களும் எடுத்து போராடி அவுட்டானார்கள்.

- Advertisement -

குஜராத் அசத்தல்:
அதனால் ஓரளவு தப்பிய பஞ்சாப் 20 ஓவர்களில் 153/8 ரன்கள் எடுக்க குஜராத் சார்பில் அதிகபட்சமாக மோகித் சர்மா 2 விக்கெட்களை எடுத்தார். அதைத்தொடர்ந்து 154 ரன்களை துரத்திய குஜராத்துக்கு ஆரம்பத்திலேயே சுப்மன் கில்லுடன் இணைந்து 5 பவுண்டரியை பறக்க விட்டு 48 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அதிரடியான தொடக்கம் கொடுத்த ரித்திமான் சஹா 30 (19) ரன்களில் அவுட்டாக அடுத்த களமிறங்கிய தமிழக வீரர் சாய் சுதர்சன் 2வது விக்கெட்டுக்கு நங்கூரமாக செயல்பட்டு 41 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தாலும் கடைசி வரை அதிரடியை துவக்காமல் 19 (20) ரன்களில் நடையை கட்டினார்.

அந்த நிலைமையில் களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் தடுமாறி 8 (11) ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் தொடர்ந்து நங்கூரமாகவும் அதிரடியாகவும் செயல்பட்ட இளம் வீரர் சுப்மன் கில் ரன் ரேட்டை சரிய விடாமல் அரை சதமடித்து குஜராத்தை வெற்றி பாதைக்கு அழைத்து வந்தார். அதனால் வெற்றியை நெருங்கிய அந்த அணிக்கு சாம் கரண் வீசிய கடைசி ஓவரில் வெறும் 6 ரன்கள் மட்டுமே ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அதிரடியாக விளையாட முயற்சித்த சுப்மன் கில் 7 பவுண்டரி 1 சிக்சருடன் 67 (48) ரன்களில் க்ளீன் போல்ட்டானார்.

- Advertisement -

அதனால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் 3வது பந்தில் ராகுல் திவாடியா சிங்கிள் எடுக்க 4வது பந்தில் மில்லர் சிங்கிள் எடுத்தார். அதனால் பரபரப்பு ஏற்பட்டாலும் 5வது பந்தில் பவுண்டரியை பறக்க விட்ட திவாடியா 5* (2) ரன்களும் மில்லர் 17* (18) ரன்களும் எடுத்து குஜராத்தை 19.5 ஓவரில் 154/4 ரன்கள் எடுக்க வைத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர்.

முன்னாதாக தொடர்ந்து வெற்றி நடை போட்டு வந்த குஜராத்துக்கு கடந்த போட்டியில் கேப்டன் ஹர்திக் பாண்டியா இல்லாதது பெரிய பின்னடைவாக மாறியது. குறிப்பாக வழக்கத்திற்கு மாறாக பந்து வீச்சில் ரன்களை வாரி வழங்கிய குஜராத்துக்கு கடைசி ஓவரில் ரிங்கு சிங்கிடம் 30 ரன்கள் வாரி வழங்கிய யாஷ் தயாள் இப்போட்டியில் அதிரடியாக நீக்கப்பட்டு 2014இல் ஊதா தொப்பியை வென்ற அனுபவம் வாய்ந்த மோகித் சர்மா சேர்க்கப்பட்டார். அந்த நிலையில் பாண்டியா தலைமையில் இப்போட்டியில் பந்து வீச்சில் மிகச் சிறப்பாக செயல்பட்ட குஜராத் ஆரம்பத்திலேயே வெற்றியை உறுதி செய்தது.

இதையும் படிங்க:IPL 2023 : ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் அணி சார்பாக மோசமான சாதனையை படைத்த சஞ்சு சாம்சன் – என்ன தெரியுமா?

குறிப்பாக 2020க்குப்பின் முதல் முறையாக விளையாடிய மோகித் சர்மா 4 ஓவரில் 18 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை 4.50 என்ற இதர பவுலர்களை காட்டிலும் குறைவான எக்கனாமியில் எடுத்து பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். அதனால் இலக்கு குறைவாக இருந்ததால் பேட்டிங் செய்யும் போது ஒரு சில விக்கெட்டுகள் இழந்தாலும் குஜராத் எளிதான வெற்றி பெற்றது. மறுபுறம் பேட்டிங்கில் சொதப்பிய பஞ்சாப் போராடி தோற்றது.

Advertisement