
தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. நவம்பர் 14ஆம் தேதி கொல்கத்தாவில் துவங்கும் அத்தொடரில் வெற்றி பெற இரு அணிகளும் தயாராக உள்ளன. பொதுவாகவே வெளிநாட்டு அணிகளுக்கு இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடிப்பது கடினமானதாக இருந்து வருகிறது.
இருப்பினும் இம்முறை உலக டெஸ்ட் சாம்பியனாக திகழும் தென்னாப்பிரிக்கா தெம்பா பவுமா தலைமையில் இந்தியாவை தோற்கடிக்கும் முனைப்புடன் இந்தியாவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் மோர்னே மோர்கெல் இந்திய அணியின் பவிலிங் பயிற்சியாளராக இருப்பதால் தென்னாப்பிரிக்காவின் எதிரியாகிவிட்டதாக அந்நாட்டின் முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் கலகலப்பாக தெரிவித்துள்ளார். மேலும் தென் ஆப்பிரிக்கா அணி ஜஸ்ப்ரித் பும்ராவை கவனத்துடன் எதிர்கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.
ஜஸ்ப்ரித் பும்ராவை நன்றாக எதிர்கொண்டு பேட்டிங்கில் பெரிய ரன்கள் குவித்தால் இந்தியாவை வீழ்த்துவதற்கான திறமை தென்னாப்பிரிக்காவிடம் இருப்பதாக ஸ்மித் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “மோர்னே தற்போது தவறான பக்கத்தில் எதிரியாக இருக்கிறார் (சிரிக்கிறார்). டாப் 3 பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் குவித்து உங்களுக்கு வலுவான துவக்கத்தைக் கொடுப்பது வெற்றிக்கான அடித்தளத்தை அமைக்கும்”
“நீங்கள் ஆரம்பத்திலேயே 2 – 3 விக்கெட்டுகளை இழந்து விட்டால் உங்களுக்கு எதிராக ஸ்பின்னர்கள் வருவார்கள். அது உங்களைப் போட்டிக்கு எதிராக அழைத்துச் செல்லும். எனவே ஜஸ்ப்ரித் பும்ராவை அடிப்பது மிகவும் முக்கியம். அதே போல இந்தியாவுக்கு ராபாடாவை அடிப்பது முக்கியம். உலகத்தரம் வாய்ந்த பவுலர்களான அவர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் தரமான ரெக்கார்ட் வைத்துள்ளனர். இம்முறை தென் ஆப்பிரிக்கா ஒழுக்கமான பவுலிங் கூட்டணியுடன் இந்தியாவுக்கு வந்துள்ளது”
“குறிப்பாக சுழல் துறையில் மகாராஜ், ஹார்பர் ஆகியோர் எதிரணிக்கு சேதத்தை ஏற்படுத்துவார்கள். பந்தை சுழற்றும் திறமையுடைய அவர்கள் விக்கெட்டுகளை எடுத்து போட்டியைக் கட்டுக்குள் வைக்க உதவுவார்கள். மறுபுறம் ரபாடா ரிவர்ஸ் ஸ்விங்கை எப்படி கையாளுகிறார் என்பதைப் பார்ப்பது சுவாரசியமாக இருக்கும். முதல் போட்டி நடைபெறும் கொல்கத்தா பொதுவாக பேட்டிங் செய்ய நல்ல இடம் என்று நான் நம்புகிறேன்”
இதையும் படிங்க: சாய் சுதர்சனிடம் நல்ல திறமை இருக்கு.. அனால் அவர் இதை மட்டும் டெஸ்ட் போட்டிகளில் செய்யனும் – புஜாரா அட்வைஸ்
“அங்கே ரன்களுக்கு மதிப்பு இருக்கும். கொல்கத்தா மைதானம் நிரம்பியிருந்தால் அது தென்னாபிரிக்க அணி சிறப்பாக விளையாடுவதற்கான ஊக்கத்தைக் கொடுக்கும். இது போன்ற கடினமான சுற்றுப்பயணத்தை நீங்கள் நன்றாகத் துவக்குவது முக்கியம். ஆசிய நாடுகளில் நீங்கள் ஆரம்பத்திலேயே பின்தங்கி விட்டால் பின்னர் திரும்பி சண்டையிடுவது கடினம். எனவே வெற்றிக்கு பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாட வேண்டும்” என்று கூறினார்.