4, 4, 6, 6, 6.. 9 ஃபோர்ஸ் 8 சிக்ஸ்.. நெதர்லாந்திடம் ருத்ரதாண்டவம் ஆடிய கிளன் மேக்ஸ்வெல்.. புதிய சரவெடி உலக சாதனை

Maxwell
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 25ஆம் தேதி தலைநகர் டெல்லியில் நடைபெற்ற 24வது லீக் போட்டியில் வலுவான ஆஸ்திரேலியாவை கத்துக்குட்டி நெதர்லாந்து எதிர்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் அதிர்ஷ்டத்தை பெற்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு மிட்சேல் மார்ஷ் 9 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

அந்த நிலைமையில் வந்த ஸ்டீவ் ஸ்மித் மற்றொரு துவக்க வீரர் டேவிட் வார்னருடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக இந்த தொடரில் ஆரம்பம் முதலே தடுமாறி வந்த அவர் முதல் முறையாக இந்த போட்டியில் சற்று அதிரடியாக விளையாடி 2வது விக்கெட்டுக்கு 132 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அரை சதமடித்து 9 பவுண்டரி 1 சிக்சருடன் 71 (68) ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

சரவெடி சாதனை:
மறுபுறம் தொடர்ந்து அசத்திய வார்னரும் 50 ரன்கள் கடந்து சவாலை கொடுத்த நிலையில் அடுத்ததாக வந்த மார்னஸ் லபுஸ்ஷேன் தம்முடைய பங்கிற்கு நெதர்லாந்து பவுலர்களின் அதிரடியாக எதிர்கொண்டு 3வது விக்கெட்டுக்கு 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அரை சதமடித்து 7பவுண்டரி 2 சிக்சருடன் 62 (47) ரன்களில் ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து வந்த ஜோஸ் இங்கிலீஷ் 14 ரன்களில் ஆட்டம் இழந்தாலும் மறுபுறம் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய டேவிட் வார்னர் 11 பவுண்டரி 3 சிக்சருடன் சதமடித்து 104 (93) ரன்கள் விளாசி அவுட்டானார். ஆனால் அவரைத் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய கிளன் மேக்ஸ்வெல் வெறும் 27 பந்துகளில் 50 ரன்கள் கடந்து நெதர்லாந்து பவுலர்களை வெளுத்து வாங்கினார்.

- Advertisement -

குறிப்பாக 40வது ஓவரில் களமிறங்கிய அவர் டெத் ஓவர்களில் நெதர்லாந்து அணியை புரட்டி எடுத்து நேரம் செல்ல செல்ல கொஞ்சமும் அதிரடியை குறைக்காமல் ருத்ரதாண்டவம் ஆடினார். அதே வேகத்தில் வெறும் 40 பந்துகளில் 100 ரன்கள் தொட்ட அவர் உலகக்கோப்பை வரலாற்றில் மிகவும் அதிவேகமாக சதமடித்த வீரர் என்ற புதிய உலக சாதனையை படைத்தார். இதற்கு முன் இதே டெல்லி மைதானத்தில் இந்த வருடம் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் ஐடன் மார்க்ரம் 49 பந்துகளில் சதடித்ததே முந்தைய சாதனையாகும்.

இதையும் படிங்க: காயத்திலிருந்து மீண்டு வந்த அக்சர் படேல். சையத் முஷ்டாக் அலி தொடரில் காட்டடி பேட்டிங் – விவரம் இதோ

ஆனால் அவரை விட 9 பந்துகள் குறைவாக 100 ரன்கள் கடந்த மேக்ஸ்வெல் 9 பவுண்டரி 8 சிக்ஸர்களை பறக்க விட்டு 106 (44) ரன்களை 240.91 என்ற அதிரடியான விளாசி ஆட்டமிழந்தார். குறிப்பாக 75 ரன்களில் இருந்த போது பஸ் டீ லீடி வீசிய 49வது ஓவரின் முதல் 5 பந்துகளில் 4, 4, 6, 6, 6 (நோபால்) என மொத்தம் 26 ரன்கள் அடித்த அவர் அடுத்த 5 பந்துகளில் 100 ரன்கள் கடந்தது ரசிகர்களுக்கு பிரமிப்பாக இருந்தது. அவரது அதிரடியால் 50 ஓவர்களில் ஆஸ்திரேலியா 399/8 ரன்கள் எடுக்க நெதர்லாந்து சார்பில் அதிகபட்சமாக வேன் பீக் 4 விக்கெட்களை சாய்த்தார்.

Advertisement