92/5 டூ 208/5.. 13 சிக்ஸ்.. மேக்ஸ்வெல் மிரட்டல் சதம்.. லாஸ் ஏஞ்சல்ஸை நொறுக்கி வாஷிங்டன் 2வது சாதனை வெற்றி

Glenn Maxwell 106
- Advertisement -

அமெரிக்காவில் மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 2025 சீசன் நடைபெற்று வருகிறது. அந்தத் தொடரில் ஓக்லாந்து நகரில் ஜூன் 18ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 6.30 மணிக்கு 8வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் வாஷிங்டன் ஃபிரீடம் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற வாஷிங்டன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு ரச்சின் ரவீந்திரா 8 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். இருப்பினும் மறுபுறம் அதிரடியாக விளையாடிய மிட்சேல் ஓவன் 32 (11) ரன்களை விளாசி அவுட்டானார். மிடில் ஆடரில் ஆண்ட்ரீஸ் கௌஸ் 12, மார்க் சேப்மேன் 17, ஜேக் எட்வர்ட்ஸ் 11 ரன்களில் அவுட்டாகி பின்னடைவைக் கொடுத்தார்கள்.

- Advertisement -

மேக்ஸ்வெல் மிரட்டல்:

அதனால் 92/5 என தடுமாறிய வாஷிங்டன் அணிக்கு கேப்டன் கிளன் மேக்ஸ்வெல் நிதானமாக விளையாடினார். முதல் 15 பந்துகளில் 11 ரன்கள் மட்டுமே எடுத்து அவர் நேரம் செல்ல செல்ல எதிரணி பவுலர்களை அடித்து நொறுக்க ஆரம்பித்தார். 29 பந்துகளில் அரை சதத்தை அடித்த அவர் தொடர்ந்து பட்டாசாக விளையாடினார்.

தொடர்ந்து வெளுத்து வாங்கிய அவர் வெறும் 2 பவுண்டரி 13 சிக்ஸர்களை பறக்க விட்டு சதத்தை அடித்து 106* (49) ரன்கள் தெறிக்க விட்டு அபார ஃபினிஷிங் கொடுத்தார். அவருக்கு எதிர்ப்புறம் கம்பெனி கொடுத்த ஓபுஸ் ஃபீனார் 14* (15) ரன்கள் எடுத்தார். அதனால் 20 ஓவரில் வாஷிங்டன் 208/5 ரன்கள் குவித்து அசத்திய நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸ் அணிக்கு அதிகபட்சமாக தன்வீர் சங்கா, கோர்னே ட்ரை தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

- Advertisement -

2வது பெரிய வெற்றி:

அடுத்ததாக விளையாடிய அலெக்ஸ் ஹேல்ஸ், சுனில் நரேன், உன்முக்த் சந்த் டக் அவுட்டாகி பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள். போதாகுறைக்கு ரோவ்மன் போவெல் 4, மேத்தியூ ட்ரோம்ப் 2, ஆண்ட்ரே ரசல் 4 ரன்னில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினார். அதனால் 26-5 என ஆரம்பத்திலேயே சரிந்த அந்த அணிக்கு மிடில் ஆர்டரில் ஃசைப் பாதர் போராடி 32 (31), கேப்டன் ஜேசன் ஹோல்டர் 23 (16) ரன்கள் எடுத்தார்கள்.

இதையும் படிங்க: ஆஷஸ்’க்கு அடி வாங்க வந்துள்ள இந்தியாவை.. 2 வகையா இங்கிலாந்து தோற்கடிக்கும்.. கிரேம் ஸ்வான் கணிப்பு

இறுதியில் ஷேட்லே 12, கோர்னே ட்ரை 13 ரன்கள் எடுத்தும் 16.3 ஓவரில் லாஸ் ஏஞ்சல்ஸை 95 ரன்களுக்கு சுருட்டி வீசிய வாஷிங்டன் 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ஜேக் எட்வர்ட்ஸ் 3, மிட்சேல் ஓவன் 3 விக்கெட்டுகள் எடுத்தார்கள். இதன் வாயிலாக மேஜர் லீக் டி20 தொடரில் 2வது பெரிய வெற்றியைப் பதிவு செய்த அணி என்ற எம்ஐ நியூயார்க் சாதனையை உடைத்த வாஷிங்டன் புதிய சாதனை படைத்தது. இதற்கு முன் 2023 சீசனில் லாஸ் ஏஞ்சல்ஸ்க்கு எதிராக எம்ஐ நியூயார்க் 105 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதே முந்தைய சாதனை.

Advertisement