இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. ஜூன் 20ஆம் தேதி துவங்கும் அந்தத் தொடரில் சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி களமிறங்குகிறது. அதனால் இம்முறை இந்தியா வெற்றி பெறுவது கடினம் என்பதே பலருடைய கணிப்பாக இருக்கிறது.
ஏனெனில் வரலாற்றில் சவாலான இங்கிலாந்து மண்ணில் சச்சின் டெண்டுல்கர் முதல் விராட் கோலி வரை பல ஜாம்பவான்கள் விளையாடியும் இந்திய அணியால் தொடர்ச்சியாக வெற்றி பெற முடியவில்லை. அதனாலேயே 2007க்குப்பின் இங்கிலாந்து மண்ணில் தொடரை வெல்ல முடியாமல் இந்தியா திணறுகிறது. போதாக்குறைக்கு இம்முறை விராட் கோலி, ரோஹித் சர்மா, அஸ்வின் போன்ற அனுபவ வீரர்கள் ஓய்வு காரணமாக விளையாடப் போவதில்லை.
ஆஷஸ் தொடருக்கு தயாராக:
இந்நிலையில் வரும் டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடரில் விளையாட உள்ளதாக அந்நாட்டின் முன்னாள் வீரர் கிரேம் ஸ்வான் தெரிவித்துள்ளார். அந்தத் தொடருக்கு இங்கிலாந்து அணி தயாராக உதவும் வகையில் தங்கள் நாட்டுக்கு இந்தியா வந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்தத் தொடரில் 4 – 1 அல்லது 3 – 2 என்ற இந்தியாவை தோற்கடித்து ஆஷஸ் தொடருக்கு இங்கிலாந்து தயாராகும் என்றும் அவர் கணித்துள்ளார்.
இது பற்றி ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஸ்வான் பேசியது பின்வருமாறு. “நேர்மையாக சொல்ல வேண்டுமெனில் இது ஆஷஸ் தொடருக்கு தயாராக கச்சிதமான தொடராகும். இந்திய தொடர் மிகவும் பெரியது. கடந்த 2 – 3 முறையாக இந்தியாவுக்கு நாம் சென்ற போது முழுமையாக தோற்கடிக்கப்பட்டோம். எனவே இம்முறை இந்தியாவை நம்முடைய சொந்த ஊரில் சொந்த மண்ணில் தோற்கடிக்க வேண்டும்”
இங்கிலாந்து வெல்லும்:
“நாம் நன்றாக விளையாட வேண்டும். இம்முறை இந்தியாவுக்கு விராட் கோலி – ரோஹித் சர்மா போன்ற அனுபவமிக்க வீரர்களும் இல்லை. இருப்பினும் அவர்களுக்கு பதிலாக இந்தியாவிடம் நல்ல வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால் நம்முடைய பவுலர்கள் நமது சொந்த நாட்டில் நிலவும் சூழ்நிலைகளைப் பயன்படுத்தி சிறப்பாக பௌலிங் செய்வார்கள்”
இதையும் படிங்க: சொல்றத கேளுங்க.. விராட் கோலியின் 4-ஆம் இடத்தில் இவர் இறங்குவது தான் சரியா இருக்கும் – சபா கரீம் கருத்து
“எனவே இங்கிலாந்து இந்தத் தொடரை வெற்றி பெற பார்க்க வேண்டும். அவர்கள் இந்தத் தொடரை எளிதாக வெல்லப் பார்க்க வேண்டும். 4 – 1, 3 – 2 என்ற கணக்கில் அவர்கள் வெல்வார்கள் என்று நான் நம்புகிறேன். ஆஷஸ் தொடருக்கு செல்வதற்கு முன்பாக இந்தத் தொடரில் கிடைக்கும் வெற்றி பெரிய தன்னம்பிக்கையைக் கொடுக்கக் கூடியதாக இருக்கும்” என்று கூறினார்.



