நானே உங்களோட பெரிய ரசிகன், காயத்தை தவிர்க்க இதை செய்ங்க ப்ளீஸ் – பும்ராவுக்கு ஜாம்பவான் மெக்ராத் கோரிக்கை

Glen McGrath
- Advertisement -

உலக கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் ஐசிசி 2023 உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் நடைபெறுகிறது. அதில் சொந்த மண் சாதகத்தை பயன்படுத்தி 2011 போல கோப்பையை வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கும் இந்தியாவுக்கு ஜஸ்பிரித் பும்ரா முழுமையாக ஃபிட்டாகி விளையாடாமல் போனால் தோல்வியே மிஞ்சும் என்று சமீபத்தில் முன்னாள் வீரர் முகமது கைஃப் கவலை தெரிவித்திருந்தார். ஏனெனில் 2016இல் அறிமுகமாகி 2018 முதல் தன்னுடைய வித்தியாசமான பவுலிங் ஆக்சனால் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் அவர் இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக்கொடுத்து முதன்மை பவுலராகவும் கருப்பு குதிரையாகவும் செயல்பட்டு வருகிறார்.

இருப்பினும் 2022 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் காயத்தை சந்தித்து அதிலிருந்து 2 முறை குணமடைந்த அவர் மீண்டும் காயமடைந்து கடைசி நேரத்தில் வெளியேறியது 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையை தொடர்ந்து 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலும் இந்தியாவின் தோல்விக்கு மறைமுக காரணமானது. ஆனாலும் சுமார் ஒரு வருடமாக குணமடைந்து வரும் அவர் ஒரு வழியாக அடுத்ததாக நடைபெறும் அயர்லாந்து டி20 கிரிக்கெட் தொடரில் கேப்டனாக களமிறங்குவார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

- Advertisement -

மெக்ராத் கோரிக்கை:
இந்நிலையில் ஐபிஎல் தொடருடன் 3 வகையான கிரிக்கெட்டிலும் சேர்ந்தார் போல் விளையாடுவது அசாத்தியமற்றது என்று தெரிவிக்கும் ஆஸ்திரேலிய ஜாம்பவான் கிளன் மெக்ராத் ஏதேனும் ஒரு வகையான கிரிக்கெட்டில் விளையாடினால் மட்டுமே பும்ராவால் நீண்ட நாட்கள் தம்முடைய கேரியரை நீட்டித்து வெற்றிகரமாக விளையாட முடியுமென கூறியுள்ளார். குறிப்பாக பும்ராவுக்கு தாமே ஒரு ரசிகன் என்று தெரிவிக்கும் அவர் ஜேம்ஸ் ஆண்டர்சன் போல ஏதேனும் ஒரு வகையான கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று தன்னுடைய உடலை பாதுகாத்து சரியாக விளையாடுமாறு ஆலோசனை தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

“பும்ரா இந்தியாவுக்காக அபாரமாக செயல்படுகிறார். அவருடைய சாதனை புள்ளி விவரங்கள் பந்து வீசும் விதம் போன்ற அனைத்தும் சிறப்பாக இருக்கிறது. நான் அவருடைய மிகப்பெரிய ரசிகன். ஆனால் அந்த வகையான வித்தியாசமான ஆக்சன் அவருடைய உடலில் பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடியது. எனவே அவர் எப்போதும் வலுவாக ஃபிட்டாக இருக்க வேண்டும். அதை செய்தால் இன்னும் அவரால் சில வருடங்கள் தொடர்ந்து விளையாட முடியும்”

- Advertisement -

“ஆனாலும் தற்போது நெருக்கமான சர்வதேச அட்டவணையுடன் ஐபிஎல் தொடரும் இருப்பதால் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வெடுக்க நேரம் கிடைப்பதில்லை. குறிப்பாக பும்ராவை போன்றவர் நிச்சயமாக தன்னுடைய வழுவை மீட்டெடுக்க ஓய்வு அவசியமாகும். அதை அவர் தான் எடுக்க வேண்டும். ஏனெனில் 3 வகையான கிரிக்கெட்டிலும் சேர்ந்தார் போல் விளையாடுவது மிகவும் கடினமாகும். எனவே அதற்கு தகுந்த முடிவை பும்ரா எடுக்க வேண்டும். ஏனெனில் அவருடைய ஆக்சன் மிகவும் தனித்துவமாக இருந்தாலும் அதுவே உடலில் பெரிய பாரத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது”

“தற்போதைய நிலைமையில் எஞ்சிய கேரியரில் இன்னும் அவரால் சிறப்பாக செயல்படுவதற்கு நிறைய இருக்கிறது என்று நினைக்கிறேன். தற்சமயத்தில் ஏராளமான போட்டிகள் நடைபெறுகின்றன. அது உங்களது உடலில் நிறைய வலியையும் ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. எனவே அதிலிருந்து வெளிவந்து உங்களது உடலுக்கு மீண்டும் வலுவை கொடுப்பதற்கான வழியை நீங்கள் கண்டறிய வேண்டும். ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டுவர்ட் ப்ராட், கோர்ட்னி வால்ஷ் போன்றவர்கள் தங்களுடைய உடலை கவனித்துக் கொண்ட காரணத்தாலேயே நீண்ட காலம் விளையாடினார்கள்”

இதையும் படிங்க:வீடியோ : இப்டி அவுட்டான எப்டி இந்தியா சான்ஸ் கிடைக்கும்? வெளிநாட்டில் மானத்தை வாங்கிய பிரிதிவி ஷா – ரசிகர்கள் அதிருப்தி

“நானும் என்னுடைய ஃபிட்னஸ் விஷயத்தில் கடினமாக உழைத்தேன். இருப்பினும் என்னுடைய ஆக்சன் மிகவும் எளிதாக இருந்ததால் காயத்திலிருந்து என்னால் விரைவில் குணமடைந்து செயல்பட முடிந்தது” என்று கூறினார். முன்னதாக பும்ரா நீண்ட காலம் விளையாடுவதற்கு ஏதேனும் ஒரு வகையான கிரிக்கெட்டில் ஓய்வு பெற வேண்டும் அல்லது தன்னுடைய ஆக்ஷனில் எக்ஸ்ட்ரா நடைகளை சேர்க்க வேண்டும் என்று சோயப் அக்தர், வாசிம் அக்ரம் போன்ற ஜாம்பவான்களும் ஏற்கனவே ஆலோசனை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement