இப்டி அவுட்டான எப்டி இந்தியா சான்ஸ் கிடைக்கும்? வெளிநாட்டில் மானத்தை வாங்கிய பிரிதிவி ஷா – ரசிகர்கள் அதிருப்தி

- Advertisement -

டெல்லியை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் பிரிதிவி ஷா கடந்த 2018 அண்டர்-19 உலகக் கோப்பையை கேப்டனாக வென்று சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமாகி வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதமடித்து மிகச் சிறப்பான துவக்கத்தை பெற்றார். அதனால் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர், பிரைன் லாரா, வீரேந்திர சேவாக் ஆகியோர் கலந்த கலவை என்று அப்போதே பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாராட்டும் அளவுக்கு அசத்திய அவர் நாளடைவில் அந்த வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள முடியாத அளவுக்கு சுமாராக செயல்பட்டார். குறிப்பாக ஸ்விங் வேகப்பந்துகளுக்கு எதிராக தடுமாறி கிளீன் போல்டான அவர் 2021 ஜூலையுடன் மொத்தமாக இந்திய அணியிலிருந்து கழற்றி விடப்பட்டார்.

அதற்கிடையே தடை செய்யப்பட்ட இருமல் மருந்தை உட்கொண்டு ஒரு வருடம் தடை பெற்ற அவர் அதிலிருந்து மீண்டு உள்ளூர் போட்டிகளில் விளையாடியும் தேர்வுக் குழுவினர் கண்டுகொள்ளவில்லை. இருப்பினும் தொடர்ந்து மனம் தளராமல் உடல் எடையை குறைத்து போராடி வந்த அவர் கடந்த ரஞ்சி கோப்பையில் முச்சதம் அடித்து சிறப்பாக செயல்பட்டதால் கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் மீண்டும் ஒரு வழியாக இந்தியாவுக்காக விளையாட தேர்வானார். இருப்பினும் அதில் விளையாடும் 11 பேர் அணியில் விளையாடும் வாய்ப்பை பெறாத அவர் அதை உறுதி செய்ய ஐபிஎல் தொடரில் அசத்த வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டார்.

- Advertisement -

பரிதாப அவுட்:
ஆனால் அதற்கு நேர்மாறாக 8 போட்டிகளில் 106 ரன்களை மட்டுமே எடுத்து மோசமாக செயல்பட்ட அவர் மீண்டும் பின்னடைவுக்குள்ளாகி தற்போது உள்ளூர் தொடர்களில் விளையாடி வருகிறார். அதிலும் இந்தியாவில் நடைபெற்ற தியோதார் கோப்பை போன்ற உள்ளூர் தொடரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த தவறிய அவர் தற்போது இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி தொடரில் நார்த்தம்டன்ஷைர் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளார்.

அங்கு நடைபெறும் ராயல் லண்டன் கோப்பை ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக ஒப்பந்தம் செய்து கொண்ட அவர் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற பயிற்சி போட்டியில் 65 (39) ரன்களை அதிரடியாக எடுத்தார். அதனால் அட்டகாசம் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் ஆகஸ்ட் 4ஆம் தேதி கவுண்டி தொடரில் முதல் முறையாக தன்னுடைய அறிமுக போட்டியில் களமிறங்கி 34 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து நல்ல துவக்கத்தையும் பெற்றார்.

- Advertisement -

ஆனால் வேன் மீக்கர் எனும் நெதர்லாந்து பவுலர் வீசிய ஷார்ட் பிட்ச் பவுன்சர் பந்தை எதிர்கொள்ள தடுமாறிய அவர் அடிக்காமல் விட்டதுடன் தன்னை பேலன்ஸ் செய்ய முடியாமல் தட்டு தடுமாறி கீழே விழுந்தார். அப்போது தன்னை கட்டுப்படுத்த முடியாமல் ஸ்டம்ப் மீது மோதியதால் ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்த ப்ரித்வி ஷா “என்னய்யா இப்படி ஆகிடுச்சு” என்ற வகையில் குழந்தையைப் போல் கையில் பேட்டை செங்குத்தாக பிடித்துக் கொண்டு பிட்ச்சில் அமர்ந்து ஏமாற்றத்தை வெளிப்படுத்தி பின்னர் அதிருப்தியுடன் எழுந்து பெவிலியன் திரும்பினார்.

அதிலும் 54/5 என தன்னுடைய அணி சரிந்த போது பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய அவர் இப்படி தடுமாறி ஆட்டமிழந்து ஏமாற்றத்தை கொடுத்தார். அப்போது அவருக்கு என்ன ஆயிற்று என பேசிய வெளிநாட்டு வர்ணனையாளர்கள் இருவரும் “ஹிட் விக்கெட் முறையில் அவுட்டாகியுள்ளார்” என்று தெரிவித்தது இந்திய ரசிகர்களின் மானத்தை வாங்கும் வகையில் அமைந்தது என்றே சொல்லலாம். அதை விட இதை பார்க்கும் போது பாகிஸ்தானின் நட்சத்திர முன்னாள் வீரர் இன்சமாம்-உல்-ஹக் உடல் பருமன் காரணமாக பலமுறை தம்மை பேலன்ஸ் செய்ய முடியாமல் இப்படி ஹிட் விக்கெட் முறையில் அவுட்டானதே இந்திய ரசிகர்களுக்கு நினைவுக்கு வருகிறது.

இதையும் படிங்க:IND vs WI : இந்திய அணியின் சொதப்பலுக்கு காரணமே இதுதான். அப்பட்டமாக தெரிந்த வீக்னஸ் – இதை கவனிச்சீங்களா?

அதனால் ஏமாற்றமடையும் இந்திய ரசிகர்கள் இன்னும் நீங்கள் முழுமையான ஃபிட்னஸை தொட்டு சிறப்பான பயிற்சிகளை எடுத்து முழுமையான ஃபார்முக்கு வரவில்லை என்பதை இது நிரூபிப்பதாக அவர் மீது சமூக வலைதளங்களில் அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். மேலும் இப்படி அவுட்டானால் எப்படி போட்டி நிறைந்த இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு பெறுவீர்கள் என்றும் அவர் மீது ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்துவது குறிப்பிடத்தக்கது.

Advertisement