
ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா விளையாடும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை 2024 – 25 டெஸ்ட் தொடர் நவம்பர் மாதம் துவங்க உள்ளது. கடைசியாக 2018-19, 2020-21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் ஆஸ்திரேலியாவில் விளையாடிய 2 தொடர்களையும் இந்தியா வென்றது. அந்த வரிசையில் இம்முறை ரோகித் சர்மா தலைமையில் இந்தியா களமிறங்க உள்ளது.
எனவே இம்முறையும் வென்று ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா ஹாட்ரிக் வெற்றியை பெறுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு வழக்கம் போல இம்முறையும் விராட் கோலி சிறப்பாக செயல்படுவது அவசியமாகிறது. 2014 ஆஸ்திரேலிய தொடரில் தோனிக்குப்பின் கேப்டனாக பொறுப்பேற்ற அவர் சதங்களை அடித்து முடிந்தளவுக்கு இந்தியாவின் வெற்றிக்கு போராடினார்.
இருப்பினும் அத்தொடரில் தோல்வியை சந்தித்த இந்தியா 2018-19 தொடரில் விராட் கோலி தலைமையில் முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் கோப்பையை வென்று சாதனை படைத்தது. ஆனால் அத்தொடரில் விராட் கோலி பேட்டிங்கில் பெரிய ரன்களை எடுக்கவில்லை. அதே போல 2020/21 தொடரில் 36க்கு ஆல் அவுட்டாகி படுதோல்வியை சந்தித்த முதல் போட்டியுடன் விராட் கோலி நாடு திரும்பினார்.
இந்நிலையில் விராட் கோலி தரமானவர் என்றாலும் 36 வயதை கடந்து விட்டதால் அதே பழைய கூர்மை கொண்டிருப்பாரா? என்பது சந்தேகம் என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஃஜெப் லாசன் தெரிவித்துள்ளார். எனவே இம்முறை ஜஸ்ப்ரித் பும்ரா போல ஆஸ்திரேலியாவுக்கு சவாலைக் கொடுப்பவராக விராட் கோலியை தான் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி மிட்டே இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு.
“ஜஸ்ப்ரித் பும்ராவின் விருப்பமான இயற்கை குணத்திற்கு நேர்மாறாக விராட் கோலி வில்லனாக இருப்பார். ஃபைன் லெக் பகுதியில் ஃபீல்டிங் செய்யும் போது பும்ரா ஆஸ்திரேலிய ரசிகர்களுடன் பேசி புன்னகையையும் இதயங்களையும் வெல்லும் வாய்ப்பை பெறுவார். மறுபுறம் விராட் கோலி இன்ஃபீல்டிங்கில் பதுங்கியிருந்த பிரமாதமாக ஃபீல்டிங் செய்து சத்தமாக முறையிடுவார். ஏதேனும் ஆஸ்திரேலிய வீரருடன் உரையாடலில் இருப்பார்”
இதையும் படிங்க: ஃட்ரான்ஸ்பார்மர் மாதிரி திறமையான.. பும்ரா ஆஸி மண்ணில் இந்த சவாலை சமாளிப்பாரா பாப்போம்.. ஃஜெப் லாசன்
“ஆஸ்திரேலிய ரசிகர்கள் விராட் கோலியை ஒரு போட்டியாளராக விரும்புவார்கள். எதிரியாக நடித்தால் அவருக்கு கொஞ்சம் வருத்தத்தையும் கொடுப்பார்கள். ஆனால் 50, 100 ரன்களை அடிக்கும் போது அவர்கள் விராட் கோலிக்கு சத்தமாக கைதட்டுவார்கள் என்று கேரண்டியாக சொல்லலாம். 13 வருடங்களுக்கு முன் வந்திலிருந்தே அவர் ஆஸ்திரேலிய சூழ்நிலைகளை விரும்புகிறார். இங்குள்ள வேகம் மற்றும் பவுன்ஸ் ஆகியவை அவருடைய ஆட்டத்திற்கு பொருந்தும். ஆனால் 2024கிலும் ஆஸ்திரேலிய பவுலர்களை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்ளக்கூடிய கூர்மை அவரிடம் இருக்கிறதா? என்பது கேள்விக்குறியாகும். எனவே அவரை நான் கணக்கிட மாட்டேன்” என்று கூறினார்.