உச்சக்கட்டத்தை எட்டியுள்ள ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தங்களுடைய முதல் 8 போட்டிகளிலும் தொடர்ச்சியாக 8 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. அதனால் செமி ஃபைனல் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ள இந்தியா 2011 போல சொந்த மண்ணில் கோப்பையை வென்று சரித்திரம் படைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக இந்த தொடரில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற வலுவான அணிகளை தோற்கடித்த இந்திய அணிக்கு தென்னாபிரிக்கா மட்டுமே சவாலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த அணியையும் கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்து 326 ரன்கள் குவித்த இந்தியா பின்னர் பந்து வீச்சில் அபாரமாக செயல்பட்டு 83 ரன்களுக்கு சுருட்டி மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.
கம்பீர் அட்வைஸ்:
குறிப்பாக ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளை எடுத்த நிலையில் பேட்டிங் துறையில் விராட் கோலி சதமடித்து 101* ரன்களும் ஸ்ரேயாஸ் ஐயர் 71 ரன்களும் எடுத்து வெற்றியில் பங்காற்றினர். இருப்பினும் அந்த போட்டியில் கடைசி நேரத்தில் விராட் கோலி சதத்தை தொடுவதற்காக சுயநலத்துடன் மெதுவாக விளையாடியதாக நிறைய விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் இது போல ஆரம்பத்தில் நங்கூரமாக விளையாடி கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடாமல் மெதுவாக விளையாடும் விராட் கோலியின் பேட்டிங் ஸ்டைல் இந்தியாவுக்கு தோல்வியை கொடுக்கலாம் என்று முன்னாள் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ஒருவேளை கொல்கத்தா பிட்ச் பேட்டிங்க்கு சாதகமாக இருந்திருந்தால் எளிதாக தென்னாப்பிரிக்கா 327 ரன்கள் இலக்கை அடித்திருக்கும் என்றும் கம்பீர் கூறியுள்ளார்.
எனவே கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி முடிந்தளவுக்கு இந்தியாவுக்காக பெரிய ஸ்கோரை அடிப்பதில் கவனம் செலுத்துங்கள் என்று விராட் கோலிக்கு ஆலோசனை தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “விராட் கோலி கடைசி வரை விளையாடுவது முக்கியமாகும். இருப்பினும் கடைசி 5 – 6 ஓவர்களில் அவர் சற்று மெதுவாக விளையாடுவதாக நான் கருதுகிறேன். ஒருவேளை சதத்தை தொடுவதற்காக அவர் மெதுவாக விளையாடலாம்”
இதையும் படிங்க: ஃபுட் ஒர்க் இல்லாமையே மேக்ஸ்வெல் மிரட்ட காரணம் இது தான்.. டெக்னிக் பற்றி ரசிகர்களுக்கு விளக்கிய சச்சின்
“இருப்பினும் ஏற்கனவே அப்போட்டியில் தேவையான ரன்கள் அடிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் ஒருவேளை அது பேட்டிங் பிட்ச்சாக இருந்திருந்தால் இந்தியாவுக்கு தோல்வி கிடைத்திருக்கும். மேலும் தொடர்ந்து அதிரடியான ஷாட்டுகளை அடித்து விராட் கோலி மீதான அழுத்தத்தை போக்கிய ஸ்ரேயாஸ் ஐயருக்கு நீங்கள் பாராட்டு தெரிவிக்க வேண்டும். அந்த இருவருமே மிடில் ஓவர்களில் நன்றாக விளையாடினார்கள். குறிப்பாக ஜடேஜா 5 விக்கெட் எடுத்த அதே பிட்ச்சில் அவர்கள் கேசவ் மகாராஜுக்கு எதிராக ஒரு விக்கெட்டை மட்டுமே கொடுத்து மிகச் சிறப்பாக செயல்பட்டனர்” என்று கூறினார்.