
இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் 38 வயதில் சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2010ஆம் ஆண்டு அறிமுகமாகி மிடில் ஆர்டரில் தடுமாறிக் கொண்டிருந்த அவரை கேப்டன் எம்எஸ் தோனி 2013 சாம்பியன்ஸ் டிராபியில் ரோஹித் சர்மாவுடன் துவக்க வீரராக களமிறக்கினார். அதை கச்சிதமாக பயன்படுத்திய தவான் தங்க பேட் விருது வென்று இந்தியா கோப்பையை வெல்ல உதவினார்.
அப்போதிலிருந்து 2015 உலகக் கோப்பை, 2017 சாம்பியன்ஸ் டிராபி, 2018 ஆசிய கோப்பை போன்ற தொடர்களில் அதிக ரன்கள் குவித்த தவான் இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார். அதனால் மிஸ்டர் ஐசிசி என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட அவர் 2019 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக காயத்துடன் சதமடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார்.
இருப்பினும் அதன் பின் தடுமாற்றமாக விளையாடிய அவர் கொஞ்சம் கொஞ்சமாக கழற்றி விடப்பட்டார். மேலும் தற்போது ஜெய்ஸ்வால் போன்ற இளம் வீரர்கள் வந்து விட்டதால் நிலைமையை உணர்ந்த தவான் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அப்படி இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றி ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து விடைபெறும் ஷிகர் தவானுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
அவருக்கு தற்போதைய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ட்விட்டரில் “சிறப்பான கேரியருக்காக வாழ்த்துக்கள் சிக்கி. வருங்காலத்தில் நீங்கள் செய்யும் அனைத்து விஷயங்களிலும் அதே மகிழ்ச்சியை பரப்புவீர்கள் என்பது எனக்குத் தெரியும்” என்று வாழ்த்தியுள்ளார். அதே போல சுரேஷ் ரெய்னா “எண்ணற்ற நினைவுகளுடன் சிறப்பான கேரியரை கொண்டதற்கு வாழ்த்துக்கள் ஷிகர் தவான். உங்களுடன் இந்திய அணியின் உடைமாற்றம் அறையை பகிர்ந்து கொண்டது எனக்கு கௌரவமானது சகோதரரே. உங்களின் வருங்கால பயணத்திற்கு வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.
மேலும் ஜாம்பவான் விவிஎஸ் லக்ஷ்மன் “சிறப்பான கேரியருக்கு வாழ்த்துக்கள் ஷிகர். சிறப்பான கிரிக்கெட்டர் என்பதை தாண்டி அனைத்து சூழ்நிலைகளிலும் ஷிகர் நேர்மறையுடன் இருப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். பயணத்திற்கு வாழ்த்துக்கள்” என்று பாராட்டியுள்ளார். முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் “பெரிய தொடர்களின் பிளேயர். தமக்கு தகுதியான பாராட்டுகளை எப்போதும் பெற்றதில்லை”
இதையும் படிங்க: 5 வருடத்தில் 100 சதங்கள்.. விராட், ரோஹித்துடன் சேர்ந்து உலகில் ராஜாங்கம் நடத்தியது பற்றி தவான் பேட்டி
“ஆனால் அணி வெல்லும் வரை அவர் அதற்காக கவலைப்பட்டதில்லை. எப்போதும் அணியின் மனிதர். அற்புதமான கேரியர் மற்றும் 2வது இன்னிங்ஸ்க்கு வாழ்த்துக்கள் தவான்” என்று கூறியுள்ளார். அத்துடன் ஹர்திக் பாண்டியா, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரும் ஷிகர் தவானுக்கு இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் ஆகாஷ் சோப்ரா சஞ்சய் மஞ்ரேக்கர், சேட்டன் சர்மா முன்னாள் இந்திய வீரர்களும் அவருக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.