
இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்துக்கு எதிராக விளையாடும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் செப்டம்பர் 19ஆம் தேதி சென்னையில் துவங்குகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு தகுதி பெற அத்தொடரில் வெல்லும் முனைப்புடன் இந்தியா விளையாடுகிறது. மறுபுறம் பாகிஸ்தானை சமீபத்தில் தோற்கடித்த உத்வேகத்துடன் இந்தியாவையும் வீழ்த்துவோம் என்று வங்கதேசம் சவால் விட்டு வருகிறது.
இந்நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான இந்த தொடரில் வழக்கம் போல பிட்ச்கள் சுழலுக்கு சாதகமாக இருக்குமா? போட்டி இரண்டரை நாட்களில் முடியுமா? என்று பயிற்சியாளர் கௌதம் கம்பீரிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் வேகத்துக்கு சாதகமான மைதானங்களில் இரண்டரை நாட்களில் போட்டி முடிந்தால் அதைப்பற்றி ஏன் கேள்வி எழுப்பவில்லை? என்று கம்பீர் செய்தியாளர்களை சாடினார்.
எனவே இந்தியாவை மட்டும் கேள்வி கேட்காமல் இங்குள்ள சுழலுக்கு சாதகமான மைதானங்களில் வெளிநாட்டவர்கள் விளையாடக் கற்றுக்கொள்ள வேண்டுமென கம்பீர் தெரிவித்தார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா போன்ற இடங்களுக்கு செல்லும் போது அங்கேயும் டெஸ்ட் போட்டிகள் இரண்டரை நாட்களில் முடிகிறது. இருப்பினும் அங்கே அதைப் பற்றி அதிகம் பேசுவதில்லை”
“ஆனால் எதிரணிகள் இந்தியாவுக்கு வரும் போது இங்கே இரண்டரை நாட்களில் ஒரு டெஸ்ட் போட்டி முடிந்தால் உடனே ஸ்பின்னர்களுக்கு அதிக ஆதரவு இருப்பதாக நாம் சொல்கிறோம். இதுவே வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிக உதவி கிடைத்தால் அதைப்பற்றி யாரும் பேசுவதில்லை. எனவே அதுபோன்ற சூழ்நிலையிலும் நாம் நியாயமாகவும் தெளிவாகவும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்”
“உலகின் எந்த இடத்திலும் 5 நாட்கள் முழுமையாக நடைபெறக்கூடிய மைதானத்தை நம்மால் தயாரிக்க முடியும் என்று நினைக்கவில்லை. உங்களுக்கு நல்ல டெஸ்ட் போட்டி தேவையெனில் அதற்கு நல்ல தகுதி வேண்டும். வேகத்துக்கு சாதகமான மைதானத்தில் விளையாடுவதை போலவே நீங்கள் சுழலுக்கு சாதகமான மைதானங்களிலும் விளையாட வேண்டும். அதனால் இந்தியாவில் ஒரு போட்டி இரண்டரை நாட்களில் முடிந்தால் உடனே ஸ்பின்னர்களுக்கு அதிக ஆதரவு இருக்கிறது என்று நாம் பேசுவதை முதலில் நிறுத்த வேண்டும்”
இதையும் படிங்க: 2012இல் பாகிஸ்தானை விராட் கோலி அடித்து நொறுக்கியதே இந்தியர் விளையாடிய சிறந்த இன்னிங்ஸ்.. கம்பீர் பாராட்டு
“உண்மையில் எதிரணியினர் ஸ்பின்னர்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை இங்கே கற்றுக் கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு ஆடுகளத்தின் இயற்கை தன்மையை மாற்றுவதாக பேசுவதில் அர்த்தமில்லை” என்று கூறினார் சொல்லப்போனால் கடந்த காலங்களில் ரவி சாஸ்திரி, ராகுல் டிராவிட் ஆகியோரும் இதே கருத்தை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.