
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 தொடரை 2 – 1 (5) என்ற கணக்கில் வென்றது. அத்தொடரில் அபிஷேக் ஷரமா உள்ளிட்ட பெரும்பாலான வீரர்கள் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினர். குறிப்பாக பேட்டிங், பவுலிங் ஆகிய 2 துறைகளிலும் அசத்திய சிவம் துபே ஆல் ரவுண்டராக இந்தியாவில் வெற்றிகளில் பங்காற்றினார்.
அத்தொடரில் நம்பிக்கை நட்சத்திரம் ஹர்டிக் பாண்டியா காயத்தால் விளையாடாமல் விலகினார். அதனால் பின்னடைவை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி சிவம் துபேவுக்கு வாய்ப்பு கொடுத்தது. அந்த வாய்ப்பில் முக்கிய ரன்கள் மற்றும் விக்கெட்டுகள் எடுத்த துபே இந்தியாவின் வெற்றிக்கு தம்முடைய பங்காற்றினார்.
குறிப்பாக கோல்ட் கோஸ்ட் மைதானத்தில் நடைபெற்ற 4வது போட்டியில் 21 ரன்கள் அடித்த அவர் மார்ஷ், டிம் டேவிட் ஆகியோரின் 2 விக்கெட்டுகளை எடுத்து வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார். அதற்கு முன்பாக நடைபெற்ற 2025 ஆசியக் கோப்பையை இந்தியா வெல்வதற்கும் துபே முக்கிய பங்காற்றினார். அதனால் தம்மால் பேட்டிங் போல பந்து வீச்சிலும் அசத்த முடியும் என்பதை துபே நிரூபித்தார் என்றே சொல்லலாம்.
இந்நிலையில் சுப்மன் கில் போல சிவம் துபேயையும் சோதனை எனும் கடலில் தூக்கிப் போட்டுள்ளதாக பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். அப்படி செய்யாவிட்டால் வீரர்களின் திறமை மற்றும் குணம் வெளிப்படாமலேயே போய் விடும் என்று கம்பீர் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“வீரர்களை ஆழமான கடலில் தூக்கி போட வேண்டும் என்பதே எளிமையான திட்டமாகும். அதையே நாங்கள் சுப்மன் கில்லிடம் இங்கிலாந்து தொடரின் கேப்டனாக நியமித்து செய்தோம். இங்கிலாந்து எனும் ஆழ்கடலில் அவரை நாங்கள் போட்டோம். அங்கிருந்து நீந்திய வந்த அவர் சிறந்த நீச்சல் வீரராக உருவெடுத்தார். அதையே நாங்கள் சிவம் துபேவிடமும் செய்துள்ளோம்”
இதையும் படிங்க: இந்தியா – தெ.ஆ முதல் டெஸ்ட் கொல்கத்தா பிட்ச் எப்படி? சுழலுக்கு சாதகமாக இருக்குமா? க்யூரேட்டேர் பேட்டி
“நீங்கள் வீரர்களை அதிகப்படியான அழுத்தத்திற்குள் தூக்கி போட்டு எப்படி அவர்கள் ரியாக்ட் செய்கிறார்கள்? என்பதைப் பார்க்க வேண்டும். எடுத்துக்காட்டாக துபே செய்ததைப் பாருங்கள். ஒருவேளை அவரை நாம் கடலில் தூக்கி போடாமல் போயிருந்தால் அழுத்தமான சூழ்நிலைகளில் அவருடைய கேரக்டர், சுபாவம் ஆகியவை நமக்குத் தெரிந்திருக்காது. ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் 2 ஓவர்கள் வீசியதால் அவருக்கு எவ்வளவு தன்னம்பிக்கை கிடைத்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்” எனக் கூறினார்.