அவங்ககிட்ட தடவல் பேட்டிங்கை வெச்சு ஜெயிக்க முடியாது – இந்திய தொடக்க வீரர்களுக்கு கம்பீர் கொடுத்த மாஸ் ஆலோசனை என்ன?

Gautam gambhir 4
- Advertisement -

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 2ஆம் தேதி இலங்கையின் பல்லக்கேல் நகரில் நடைபெறும் முக்கியமான லீக் போட்டியில் ஆசிய கண்டத்தின் பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதுவது அனைவரிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போட்டியில் இந்தியாவை காட்டிலும் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் உலகின் நம்பர் அணியாக ஜொலிக்கும் பாகிஸ்தான் பந்து வீச்சு துறையில் மிகவும் வலுவாக இருக்கிறது. குறிப்பாக ஹரிஷ் ரவூப், நாசீம் ஷா போன்ற 140 – 150 கி.மீ வேகத்தில் வீசும் பவுலர்கள் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பெரிய சவாலை கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிலும் குறிப்பாக இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தடுமாறுவது உலகமே அறிந்த நிலைமையில் ஷாஹீன் அப்ரிடி புதிய பந்தை ஸ்விங் செய்து ரோஹித் சர்மா, சுப்மன் கில் ஆகியோரை எளிதாக அவுட்டாக்கி பாகிஸ்தானை வெற்றி பெற வைப்பார் என்று நிறைய கணிப்புகள் காணப்படுகின்றன. இருப்பினும் இதே பவுலர்களை கடந்த 2022 டி20 உலகக் கோப்பையில் அபாரமாக எதிர்கொண்டு வெற்றி பெற வைத்த விராட் கோலி இம்முறையும் சிம்ம சொப்பனமாக செயல்பட்டு இந்தியாவின் வெற்றிக்கு போராடுவார் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.

- Advertisement -

கம்பீரின் ஆலோசனை:
இந்நிலையில் ஷாஹீன் அப்ரிடி போன்ற புதிய பந்தை ஸ்விங் செய்யும் பவுலர்களுக்கு எதிராக இந்திய ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் பவர் பிளே ஓவர்களில் விக்கெட்டை காப்பாற்றும் எண்ணத்துடன் நங்கூரமாக நிதான பேட்டிங்கை வெளிப்படுத்தினால் வெற்றி பெற முடியாது என கெளதம் கம்பீர் அதிரடியாக பேசியுள்ளார். எனவே ரோஹித் சர்மா, சுப்மன் கில் ஆகிய தொடக்க வீரர்கள் எதிரணி பவுலர்களை அட்டாக் செய்து அடித்து நொறுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்டால் அழுத்தம் பறந்து போய் வெற்றி கிடைக்கும் என்று கம்பீர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஷாஹீன் அப்ரிடி மற்றும் நாசீம் ஷா ஆகியோருக்கு எதிராக ரோஹித் சர்மா, சுப்மன் கில் ஆகியோரின் அணுகுமுறை தெளிவாக இருக்க வேண்டும். குறிப்பாக அவர்களுக்கு எதிராக விக்கெட்டை காப்பாற்றுவதற்காக விளையாடாமல் ரன்கள் அடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுங்கள். அப்போது தான் உங்களுடைய ரிதம், பேக்லிப்ட், ஃபுட்ஒர்க் ஆகியவை சிறப்பாக அமையும்”

- Advertisement -

“இங்கே பலரும் ஷாஹீன், நாசீம் ஆகியோர் இந்திய பேட்ஸ்மேன்களை உலகக் கோப்பையில் திணறடிப்பதாக பேசுகின்றனர். ஆனால் அது நடந்து முடிந்த கதையாகும். ஏனெனில் ஒருநாள் போட்டிகள் வித்தியாசமானது. இதில் பேட்ஸ்மேன்கள் செட்டிலாவதற்கு தேவையான நேரம் கிடைக்கும். எனவே அதை பயன்படுத்தி நீங்கள் விக்கெட்டை காப்பாற்ற நினைக்காமல் உங்களது இடத்திலிருந்து ஹால்ஃப் வாலி பந்துகளை அதிரடியாக எதிர்கொள்ள வேண்டும்”

இதையும் படிங்க: அவரே ஒரு அரைகுறை பிளேயர். அவரை மட்டும் பிளேயிங் லெவன்ல எடுக்காதீங்க – இந்திய வீரர் குறித்து கம்பீர் கருத்து

“குறிப்பாக களத்தில் எந்தளவுக்கு நீங்கள் நேர்மறையாக செயல்படுகிறீர்களோ அந்தளவுக்கு எதிரணிக்கு அழுத்தம் உண்டாகும். அதனால் முடிந்ததை மறந்து விட்டு தற்போது எளிமையாக விளையாடுங்கள். இந்த புதிய நாள், போட்டி, வடிவத்தில் அட்டாக் செய்யும் மனநிலையுடன் விளையாடுங்கள்” என்று கூறினார்.

Advertisement