
இந்திய கிரிக்கெட் அணி கடந்த 2011 உலகக் கோப்பையை தோனி தலைமையில் சொந்த மண்ணில் வென்றதை மறக்க முடியாது. அத்தொடரில் ஆரம்பம் முதலே அசத்திய இந்தியா இறுதிப்போட்டியில் இலங்கையை தோற்கடித்து 28 வருடங்கள் கழித்து கோப்பையை வென்றது. அதன் வாயிலாக சொந்த மண்ணில் உலகக் கோப்பையை வென்ற முதல் அணி என்ற உலக சாதனையையும் இந்தியா படைத்தது.
அந்த வெற்றிக்கு சச்சின் டெண்டுல்கர் முதல் ரவிச்சந்திரன் அஸ்வின் வரை அனைவருமே முக்கிய பங்காற்றினார்கள். ஆனால் 362 ரன்கள் மற்றும் 15 விக்கெட்டுகள் எடுத்த யுவ்ராஜ் சிங் ஆல் ரவுண்டராக வெற்றியில் முக்கிய பங்காற்றி தொடர்நாயகன் விருதை வென்றார். அத்தொடரில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததை வெளியில் சொல்லாத அவர் நாட்டுக்காக அபாரமாக விளையாடி கோப்பையை வெல்ல உதவினார்.
அந்தத் தொடருக்குப்பின் புற்றுநோயையும் வென்ற அவர் 2017 சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடினார். இந்நிலையில் 2011 உலகக் கோப்பையில் யுவ்ராஜ் சிங்கை தேர்வுக்குழுவினர் கழற்றி விட விரும்பியதாக அப்போதைய இந்திய அணியின் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் தெரிவித்துள்ளார். ஆனால் பெரிய அனுபவத்தைக் கொண்ட யுவ்ராஜ் எப்படியாவது விளையாட வேண்டும் என்று தாமும் கேப்டன் தோனியும் விடாப்பிடியாக நின்று தேர்ந்தெடுக்க வைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இது பற்றி ரெஃடிப் இணையத்தில் கிர்ஸ்டன் பேசியது பின்வருமாறு. “நல்லவேளையாக நாங்கள் அவரை தேர்ந்தெடுத்தோம். ஏனெனில் அவருடைய தேர்வு மிகவும் நெருக்கமாக இருந்தது. அது மோசமான தேர்வு கிடையாது. 15 வீரர்கள் தேர்வு பற்றி தேர்வாளர்கள் விவாதித்தார்கள். அப்போது நானும் தோனியும் அவரை எப்படியாவது விளையாட வைக்க வேண்டுமென விரும்பினோம்”
“ஏனெனில் யுவ்ராஜ் சிங் இந்திய அணிக்கு நிறைய அனுபவத்தைக் கொண்டு வருவார். கடைசியில் அவர் விளையாடியதால் உலகக் கோப்பை எப்படி முடிந்தது என்பதைப் பாருங்கள். யுவ்ராஜ் சிங்குடன் எனக்கு எப்போதும் நல்ல நட்பு இருக்கிறது. சில நேரங்களில் அவர் என் மேலே விரக்தியடைவார். ஆனால் அவரை நான் விரும்பினேன். மிகவும் நல்ல வீரரான அவர் அனைத்து நேரங்களிலும் ரன்கள் அடிப்பதை விரும்பினேன்”
இதையும் படிங்க: 22 பேரும் ரோபோவா இருக்கனுமா? தவறு செய்யாத சிராஜை தண்டித்த ஐசிசியை சாடிய நாசர் ஹுசைன்
“ஏனெனில் அவர் பேட்டிங் செய்வதை பார்ப்பது சிறப்பாக இருக்கும். யுவ்ராஜ் 2011 உலகக் கோப்பையில் வந்து விளையாடிய விதத்திற்கு பேடி அப்டோனுக்கும் (ஸ்ட்ரென்த் கண்டிசினிங் பயிற்சியாளர்) பாராட்டு கொடுக்க வேண்டும். உலகக் கோப்பையில் விளையாடுவதற்காக யுவ்ராஜுடன் அவர் நிறைய வேலை செய்தார். அதே போல யுவ்ராஜ் சிங்கும் உலகக் கோப்பையில் விளையாடுவதற்காக தமக்குத் தாமே சில முக்கியமான முடிவுகளை எடுத்தார்” என்று கூறினார்.