இங்கிலாந்து மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரின் 3வது போட்டியில் இந்தியாவை 22 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இங்கிலாந்து 2 – 1* என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. முன்னதாக அத்தொடரில் 3வது போட்டியில் இந்திய வீரர் முகமது சிராஜ்க்கு ஐசிசி 15% சம்பளம் மற்றும் ஒரு கருப்புப் புள்ளியை தண்டனையாக வழங்கியது.
அதாவது இங்கிலாந்து ஓப்பனிங் பேட்ஸ்மேன் பென் டக்கெட் விக்கெட்டை எடுத்த சிராஜ் அவருடைய முகத்துக்கு நேராக சென்று 3 முறை வெறித்தனமாக கத்திக் கொண்டாடினார். மறுபுறம் பென் டக்கெட் ஏமாற்றத்துடன் பெவிலியன் நோக்கி நடையைக் கட்டினார். அந்த கொண்டாட்டத்தின் முடிவில் சிராஜ் தோள்பட்டை தெரியாதத் தனமாக லேசாக டக்கெட் தோளில் இடித்தது.
ஐசிசி தண்டனை:
அதனால் எதிரணி வீரருடன் உடலளவில் மோதிய விதிமுறையை மீறியதாக கருதிய ஐசிசி சிராஜ்க்கு தண்டனை வழங்கியது. இந்நிலையில் பரபரப்பான போட்டியில் அது போன்ற நிகழ்வுகள் அரங்கேறுவது சகஜம் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார். களத்தில் விளையாடும் 22 வீரர்களும் விதிமுறையால் உருவாக்கப்பட்ட ரோபோக்கள் கிடையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே வேண்டுமென்றே டக்கெட் தோளில் இடிக்காத சிராஜுக்கு ஐசிசி தண்டனை வழங்கியது சரியல்ல என்று நாசர் ஹுசைன் சாடியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஜாக் கிராவ்லியிடம் இந்திய அணியினர் மோதச் சென்றது லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் ஹைலைட்டாகும். அன்றைய நாள் மாலையில் இங்கிலாந்து ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் 90 வினாடிகள் தாமதமாக ஆட்டத்தைத் துவக்கினார்கள்”
நாசர் ஹுசைன் சாடல்:
“அந்த வகையில் அவர்கள் சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்கள். மறுபுறம் அது இந்திய அணியினரை கோபப்படுத்தியது. குறிப்பாக சிராஜ் சுடப்பட்டார். பொதுவாக சிராஜ் ஆக்ரோஷமாக மாறும் போது சிறந்த கிரிக்கெட்டராக செயல்படுகிறார் என்று நான் கருதுகிறேன். அதற்காக அவருக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று நான் கருதவில்லை. டக்கெட் முகத்துக்கு நேராக சென்ற சிராஜ் மோதவில்லை”
இதையும் படிங்க: ஃப்ளாட் மான்செஸ்டர் பிட்ச்சில் ஜெய்க்க.. இந்தியா அந்த 3 பேரையும் ஆட வைக்கலாம்.. மைக்கேல் ஆதர்டன்
“அது தோளில் இடித்தப் பிரச்சனை கிடையாது. அது போட்டியின் சூழ்நிலையால் ஏற்பட்ட உணர்வு என்று நினைக்கிறேன். உங்களுக்கு 22 ரோபோக்கள் தேவைப்படாது. களத்தில் நிலவும் பரபரப்பான சூழ்நிலைகளை நான் விரும்புகிறேன்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து ஜூலை 23ஆம் தேதி மான்செஸ்டர் நகரில் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.



