இங்கிலாந்து மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் 3வது போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து 2 – 1* என்ற கணக்கில் முன்னிலையில் வகிக்கிறது. மறுபுறம் போராடி தோல்வியை சந்தித்த இந்தியா தொடரை சமன் செய்ய 4வது போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
அந்தப் போட்டியில் வெற்றி பெறுவதற்கு இந்தியா 5 முதன்மை பவுலர்களுடன் விளையாடுவது அவசியம் என்று நிறைய முன்னாள் வீரர்கள் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் நான்காவது போட்டி ஜூலை 23ஆம் தேதி மான்செஸ்டர் நகரில் துவங்குகிறது. அங்கு மையத்தில் உள்ள முதன்மையான பிட்ச்கள் பெரும்பாலும் ஃபிளாட்டாக இருக்கும் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் ஆதர்டன் தெரிவித்துள்ளார்.
ஃபிளாட்டான மான்செஸ்டர்:
எனவே அங்கே வெற்றி பெறுவதற்கு இந்தியா தங்களுடைய 3 ஸ்பின்னர்களையும் களமிறக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அதே சமயம் மான்செஸ்டரில் வானிலை குளிர்ச்சியாக இருக்கும் பட்சத்தில் 3வது போட்டியில் விளையாடிய பவுலர்களை மீண்டும் களமிறக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஆதர்டன் பேசியது பின்வருமாறு.
“இப்போதெல்லாம் மான்செஸ்டரில் இருக்கும் ஃபிட்ச்கள் முந்தைய காலங்களைப் போல் வேகமாக இருப்பதில்லை. கடைசி பகுதியில் இருக்கும் சில பிட்ச்கள் அப்படி இருக்கலாம். ஆனால் மையப்பகுதியில் தொலைக்காட்சியில் தெரியும் பிட்ச்கள் ஃபிளாட்டாக இருக்கும். எனவே மான்செஸ்டர் மைதானத்தில் சில சூழ்நிலைகளில் மணிக்கட்டு ஸ்பின்னர்கள் நன்றாக தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்”
3 ஸ்பின்னர்கள்:
“அது போன்ற சூழ்நிலையில் பும்ரா, சிராஜ் மற்றும் 3 ஸ்பின்னர்களுடன் இந்தியா விளையாடுவார்களா? என்று நான் ஆச்சரியப்படுகிறேன். வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோர் விளையாட வேண்டும். அதே சமயம் மான்செஸ்டர் நகரில் வானிலை எப்படி இருக்கும் என்பது நமக்குத் தெரியாது”
இதையும் படிங்க: 4 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்த 2 மாற்றங்களை செய்யுங்க.. வெற்றி உறுதி – திலீப் வெங்சர்க்கார் கருத்து
“அங்கே வானிலை குளிர்ச்சியாகவும் சீதோசனமாகவும் இருக்குமா? என்பது தெரியவில்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் விளையாட வருவார்கள். மற்ற படி இந்தியா 3 ஸ்பின்னர்களை விளையாட வைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது” என்று கூறினார். இதற்கிடையே 4வது போட்டியில் பணிச்சுமை காரணமாக ஜஸ்ப்ரித் பும்ரா விளையாடுவாரா என்பதும் உறுதியாகத் தெரியாதது குறிப்பிடத்தக்கது.



