7 விக்கெட்கள் சரிந்த போது சதமடித்து காப்பாற்றிய ஜிம்பாப்வே வீரர் – டெஸ்ட் கிரிக்கெட்டில் அரிதான உலக சாதனை சமன்

- Advertisement -

ஜிம்பாப்பேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அங்கு 2 போட்டிகள் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. கடந்த பிப்ரவரி 4ஆம் தேதியன்று புலவாயோ நகரில் இருக்கும் குயின்ஸ் கிளப் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தாலும் முதலிரண்டு நாட்கள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. அந்த நிலைமையில் 3வது நாள் பேட்டிங்கை துவக்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஆரம்பத்திலேயே சுமாராக செயல்பட்ட ஜிம்பாப்பே பவுலர்களை நங்கூரமாக எதிர்கொண்ட கேப்டன் க்ரைக் ப்ரத்வெய்ட் – தக்நரேன் சந்திர்பால் 336 ரன்கள் மெகா ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து சதமடித்தனர்.

குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த முதல் வெஸ்ட் இண்டீஸ் ஜோடி என்ற சாதனை படைத்த அவர்களில் ப்ரத்வெய்ட் 18 பவுண்டரியுடன் 182 ரன்கள் குவித்து அவுட்டானார். அதை பயன்படுத்திய ஜிம்பாப்வே மேயர்ஸ் 20, ரைபர் 2, ப்ளாக்வுட் 5 என அடுத்து வந்த முக்கிய வீரர்களை அடுத்தடுத்து சொற்ப ரன்களில் காலி செய்தனர். ஆனால் மறுபுறம் சதமடித்தும் நங்கூரமாக நின்ற தக்நரேன் சந்திர்பால் தனது முதல் சதத்தையே இரட்டை சதமாக மாற்றி 16 பவுண்டரி 3 சிக்சருடன் 207* ரன்கள் விளாசினார்.

- Advertisement -

அரிதான சாதனை:
முன்னாள் ஜாம்பவான் வீரர் சிவ்நரேன் சந்தர்பால் அவர்களது மகனான அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்த 2வது தந்தை – மகன் ஜோடி என்ற சாதனையையும் சமன் செய்தார். அவரது சிறப்பான ஆட்டத்தால் வெஸ்ட் இண்டீஸ் தங்களது முதல் இன்னிங்ஸை 447/6 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. ஜிம்பாப்வே சார்பில் அதிகபட்சமாக ப்ரெண்டன் மவுட்டா 5 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு தொடக்க வீரர்கள் கையா 67 ரன்களும் மகோணி 33 ரன்களும் எடுத்து அவுட்டானார்கள்.

ஆனால் அவர்களுக்கு பின் சிபாபா 2, கேப்டன் எர்வின் 13, டிஷிகா 2, ப்ராட் எவான்ஸ் 7, மசகட்ஸா 15 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினர். அதனால் 192/7 என சரிந்த அந்த அணியின் கதை முடிந்ததாக கருதப்பட்டாலும் 5வது இடத்தில் களமிறங்கி நங்கூரமாக நின்ற கேரி பேலன்ஸ் ப்ரெண்டன் மவுட்டாவுடன் இணைந்து சரிவை சரி செய்ய போராடினார். 8வது விக்கெட்டுக்கு 135 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடியில் ப்ரெண்டன் மவுட்டா தனது பங்கிற்கு 52 ரன்கள் குவித்து போராடி அவுட்டானார்.

- Advertisement -

அடுத்து வந்த நயுச்சி 13 ரன்னில் நடையை கட்டினாலும் 11வது பேட்ஸ்மேனாக களமிறங்கிய ரிச்சர்ட் ங்கரவாவுடன் மீண்டும் நங்கூரத்தை போட்ட கேரி பேலன்ஸ் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சிம்ம சொப்பனமாக மாறி சதமடித்து அசத்தினார். குறிப்பாக 10வது விக்கெட்டுக்கு 106 ரன்கள் அபார பார்ட்னர்ஷிப் அமைத்த அவர் 12 பவுண்டரி 2 சிக்சருடன் 137* (231) ரன்கள் குவித்ததால் ஒரு கட்டத்தில் 192/7 என சரிந்த ஜிப்பாப்பே இறுதியில் 377/9 ரன்கள் குவித்திருந்த போது ஒருநாள் மட்டுமே எஞ்சியிருக்கும் இந்த போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக அல்சாரி ஜோசப் 3 விக்கெட்டுகள் எடுத்தார்

அதை தொடர்ந்து 68 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 4வது நாள் முடிவில் 21/0 என்ற நிலையில் விளையாடி வருகிறது. முன்னதாக ஜிம்பாப்வே நாட்டில் பிறந்தாலும் இங்கிலாந்துக்கு குடி பெயர்ந்து அந்த அணிக்காக 2013 – 2017 வரை 23 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய கேரி பேலன்ஸ் 4 சதங்கள் 7 அரை சதங்கள் உட்பட 1498 ரன்களை எடுத்தார். இருப்பினும் 2017 வாக்கில் தடுமாறிய காரணத்தால் கழற்றி விடப்பட்ட அவர் நீண்ட காலமாக மீண்டும் வாய்ப்பு பெறாமல் தவித்து வந்தார்.

இதையும் படிங்க: நீங்கல்லாம் எப்டி இந்தியாவின் முன்னாள் செலக்ட்ரா இருந்தீங்க? சுனில் ஜோசியை கலாய்த்து தள்ளும் ரசிகர்கள் – காரணம் இதோ

அதனால் தற்போது மீண்டும் தனது தாய்நாட்டுக்கே குடி வந்து அந்த அணிக்காக முதல் முறையாக இப்போட்டியில் களமிறங்கிய அவர் முதல் போட்டியிலேயே சதமடித்து தோல்வியின் விளிம்புக்கு சென்ற ஜிம்பாப்வேவை குறைந்தபட்சம் டிரா செய்யும் அளவுக்கு போராடிக் கொண்டு வந்துள்ளார். அப்படி ஜிம்பாப்வே அணிக்காகவும் சதமடித்துள்ள அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 வெவ்வேறு நாடுகளுக்காக சதமடித்த வீரர் என்ற கெப்ளர் வெசல்ஸின் அரிதான உலக சாதனையை சமன் செய்துள்ளார். இதற்கு முன் உலகிலேயே முதல் முறையாக தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 2 வெவ்வேறு நாடுகளுக்காக கெப்ளர் வெசல்ஸ் சதமடித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement