
நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்திய அணி (0-3) என்ற கணக்கில் இழந்து படுமோசமான தோல்வியை சந்தித்தது. இந்த தோல்வியின் மூலம் 12 ஆண்டுகளாக இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை இழக்காமல் வெற்றிநடை போட்டு வந்த இந்திய அணியின் வெற்றிப் பயணம் முடிவுக்கு வந்ததோடு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பும் தற்போது கடினமாகியுள்ளது.
இதன் காரணமாக எதிர்வரும் ஆஸ்திரேலியா தொடரில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை நான்குக்கு பூஜ்யம் (4-0) அல்லது ஐந்துக்கு பூஜ்யம் (5-0) என்ற கணக்கில் வென்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு செல்ல முடியும் என்ற இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி வெற்றி பெற்றிருந்தால் இந்த நிலைமையே இருந்திருக்காது.
இதன் காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிராக ஏற்பட்ட தோல்வி குறித்து இந்திய அணியின் மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்து வருகின்றன. இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு கடுமையான விமர்சனங்கள் எங்கள் மீது எழுந்து வருகின்றது என்றும் அந்த விமர்சனங்களை நாங்கள் இருகரம் கொண்டு ஏற்றுக் கொள்வதாக ஆஸ்திரேலியா பயணத்திற்கு முன்னதாக இந்திய அணியின் பயிற்சியாளான கௌதம் கம்பீர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : சொந்த மண்ணில் நாங்கள் அடைந்த இந்த படுதோல்வி எங்கள் அணியின் மீது கடும் விமர்சனத்தை எழுப்பியுள்ளது. நாங்கள் இந்த தொடரில் முற்றிலுமாக வீழ்த்தப்பட்டோம். அதனை மறுத்து பேச நான் விரும்பவில்லை. ஏனெனில் இந்த தோல்வி எங்களை மிகவும் மோசமாக பாதித்துள்ளது.
எங்கள் மீதான விமர்சனங்களை நாங்கள் இருகரம் கொண்டு வரவேற்கிறோம். இந்த விமர்சனத்தின் மூலம் நாங்கள் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம் என்பதை புரிந்து கொண்டு முன்னேறிச் செல்ல விரும்புகிறோம் என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : 4 இன் ஒன் ராகுல் மாதிரி பிளேயர் உலகத்தில் கிடைக்க மாட்டாரு.. அதுக்கெல்லாம் நான் கவலைப்படல.. கம்பீர் பேட்டி
அதோடு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் ரோகித் சர்மா இடம்பெறவில்லை என்பதனால் முதல் போட்டியில் கே.எல் ராகுல் அல்லது அபிமன்யு ஈஸ்வரன் ஆகிய இருவரில் ஒருவர் யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் களமிறங்குவார்கள் என்றும் இந்த முதல் போட்டியின் கேப்டனாக பும்ரா விளையாடுவார் என்றும் கம்பீர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.