
இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் கோலாகலமாக தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் 26-ஆம் தேதியன்று உலகப் புகழ்பெற்ற மும்பை வான்கடே மைதானத்தில் துவங்கிய இந்த தொடரின் சாம்பியன் பட்டத்தை வெல்வதற்காக 10 அணிகளும் 74 போட்டிகளில் பலப்பரிட்சை நடத்த தொடங்கியுள்ளன. வரும் மே 29-ஆம் தேதி வரை மும்பை, புனே ஆகிய நகரங்களில் நடைபெறும் இந்த தொடர் 2 மாதங்களுக்கு மேல் ரசிகர்களுக்கு விருந்து படைக்க உள்ளது. இந்த தொடரில் இதுவரை நடைபெற்ற அனைத்துப் போட்டிகளும் பரபரப்பாக த்ரில் நிறைந்த போட்டிகளாக அமைந்து வருகிறது.
காயத்தால் விலகிய சாம் கரண்:
இந்த தொடரில் பல நட்சத்திர வீரர்களும் தங்களது அபார திறமையால் சிறப்பாக செயல்பட்டு தங்கள் அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்து வருகின்றனர். இருப்பினும் இந்த தொடரில் டேவிட் வார்னர் போன்ற ஒரு சில வெளிநாட்டு நட்சத்திர வீரர்கள் தங்கள் நாட்டுக்காக விளையாடுவதால் இன்னும் பங்கேற்க முடியவில்லை. மேலும் இந்த தொடருக்கு முன்பாக ஒரு சில வெளிநாட்டு நட்சத்திர வீரர்கள் காயம் காரணமாக துரதிஷ்டவசமாக விலகியது ரசிகர்களை ஏமாற்றம் அடைய வைத்தது.
அந்த வகையில் இங்கிலாந்தைச் சேர்ந்த நட்சத்திர இளம் ஆல்-ரவுண்டர் சாம் கரண் இந்த வருடம் ஐபிஎல் தொடரில் காயமடைந்த காரணத்தால் இந்த சீசனில் பங்கேற்க முடியாமல் போனது. தற்போது இங்கிலாந்தில் இருக்கும் அவர் தமக்கு ஏற்பட்ட காயத்தில் இருந்து குணமடைவதற்கான வேலைகளில் ஈடுபட்டு லேசான பயிற்சிகளை எடுக்க தொடங்கியுள்ளார்.
வீட்டில் இருந்து பார்க்க கடுப்பாகுது:
இந்நிலையில் மும்பை நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரை வீட்டில் இருந்து பார்க்கும்போது அதில் பங்கேற்க முடியாமல் போனதை நினைத்து கடுப்பாவதாக சாம் கரண் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஐபிஎல் தொடரில் என்னால் பங்கேற்க முடியாததை நினைத்து வருத்தம் அடைகிறேன். அதை வீட்டில் அமர்ந்து கொண்டு பார்க்கும்போது மிகவும் கடுப்பாகிறது. இந்த தொடருக்கான ஏலத்தில் பங்கேற்க விரும்பினேன். ஆனால் கடைசி நேரத்தில் அதிலிருந்து பின்வாங்கி சரியான முடிவை எடுத்தேன். மேலும் அந்த நேரத்தில் இருந்து பார்க்கும் போது இந்த வருடம் ஐபிஎல் சற்று முன்கூட்டியே வந்து விட்டது” என கூறினார்.
தற்போது 23 வயதாகும் இவர் முதல் முறையாக ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்து அனைவரின் கவனத்தை ஈர்த்தார். அதன்பின் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய இவர் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டு அந்த அணியில் முக்கிய வீரராக வலம் வந்தார்.
குறிப்பாக கடந்த 2020-ஆம் ஆண்டு துபாயில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சுரேஷ் ரெய்னா போன்ற ஒருசில முக்கிய வீரர்கள் இல்லாத நிலையில் மோசமாக செயல்பட்ட சென்னை அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வரலாற்றிலேயே முதல் முறையாக பிளே-ஆஃப் சுற்றுக்கு கூட தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறி பெரிய அவமானத்தை சந்தித்தது.
சுட்டிக்குழந்தை:
இருப்பினும் அந்த சீசனில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட சாம் கரண் பல போட்டிகளில் சென்னையின் வெற்றிக்கு தனி ஒருவனாக போராடினார் என்றே கூறலாம். குறிப்பாக அந்த அணியின் கேப்டன் எம்எஸ் தோனி வயது காரணத்தால் மூச்சு வாங்கி களத்தில் தடுமாறிய போது அவருக்கு உறுதுணையாக சாம் கரண் நின்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த அளவுக்கு சென்னை அணியில் ஒன்றிய அவர் ஒருசில சேட்டைகளும் செய்த காரணத்தால் சென்னை ரசிகர்கள் அவரை “சுட்டிகுழந்தை” என அன்போடு அழைத்தனர்.
அந்த வேளையில் கடந்த வருடம் துபாயில் நடந்த ஐபிஎல் தொடரில் சென்னைக்காக மீண்டும் விளையாடிய அவர் ராஜஸ்தானுக்கு எதிரான ஒரு போட்டியின்போது காயமடைந்து பாதியிலேயே விலகினார். அதன் காரணமாக ஐசிசி டி20 உலக கோப்பை 2021 தொடரிலும் அவர் பங்கேற்கவில்லை. தற்போது காயத்தில் இருந்து குணமடைய துவங்கியுள்ள அவர் விரைவில் இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்று அதன் வாயிலாக இங்கிலாந்துக்காகவும் ஐபிஎல் தொடரிலும் விளையாடுவதற்கு முயற்சி செய்ய உள்ளதாக நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஐபிஎல் தொடரில் கண்டிப்பாக ஏதேனும் ஒரு தருணத்தில் மீண்டும் விளையாட விரும்புகிறேன். ஏனெனில் அதுபோன்ற தரமான டி20 தொடரில் கற்றுக்கொள்ள நிறைய உள்ளது. அந்த தொடரில் கிரிக்கெட்டை சுவாசித்து வாழ முடியும்.
இதையும் படிங்க : பழைய பன்னீர்செல்வமாக தெறிக்கவிட்ட தல தோனி, மாஸ் பினிஷிங் ! டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல் சாதனை
மேலும் ஒவ்வொரு நாளும் சூப்பர் ஸ்டார் கிரிக்கெட் வீரர்களுடன் அமர்ந்து ஜாலியாக உணவு சாப்பிட்டுக் கொண்டே கிரிக்கெட்டைப் பற்றி பேசி கற்றுக்கொள்ள முடியும்” என கூறினார்.