IND vs WI : கடைசி 2 டி20 போட்டிகள் திட்டமிட்டபடி அமெரிக்காவில் நடைபெறுமா – வெ.இ வாரியம் வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ

INDvsWI
- Advertisement -

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் விளையாடி வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இதுவரை நடைபெற்றுள்ள 3 போட்டிகளின் முடிவில் இந்தியா 2 – 1* என முன்னிலை பெற்று அசத்தியுள்ளது. இத்தொடரின் முதல் போட்டியில் 68 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்தியாவை அடுத்த போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த வெஸ்ட் இண்டீஸ் டி20 போட்டிகளில் நாங்கள் எப்போதுமே பலம் வாய்ந்த அணி என்று நிரூபித்து தொடரை சமன் செய்தது. அந்த நிலையில் நடந்த 3-வது போட்டியில் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக 76 ரன்கள் எடுத்ததால் மீண்டும் அசத்திய இந்தியா தொடரில் முன்னிலை வகிக்கிறது.

முன்னதாக சர்வதேச தொடரை போல் அல்லாமல் இந்த டி20 தொடரில் நிறைய குளறுபடிகள் நடைபெற்று வருகிறது. ஏனெனில் முதல் போட்டி நடந்த ட்ரினிடாட் நகரிலிருந்து 2-வது போட்டி நடைபெற்ற செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் நகருக்கு ஒருநாள் இடைவெளி இருந்தும் இரு நாட்டு வீரர்களின் லக்கேஜ்ஜை கொண்டுவருவதற்கு வெஸ்ட் இண்டீஸ் வாரியம் தாமதப்படுத்தியது. அதனால் 2-வது போட்டி 2 மணி நேரம் தாமதமாக துவங்கும் என அறிவிக்கப்பட்டு பின்னர் 3 மணி நேரம் தாமதமாக நடைபெற்றது. அந்த தாமதம் அடுத்த நாள் நடைபெற்ற 3-வது போட்டியிலும் எதிரொலித்து ஒன்றரை மணி நேரம் தாமதமாக நடைபெற்றது.

- Advertisement -

விசா பிரச்சனை:
அதனால் சர்வதேச கிரிக்கெட்டிலும் இப்படி ஒரு நிலைமையை ஏற்படுத்திய வெஸ்ட் இண்டீஸ் வாரியத்தின் மீது நிறைய முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் அதிருப்தியை வெளிப்படுத்தினர். அந்த நிலையில் இந்த தொடரின் கடைசி 2 போட்டிகள் வரும் ஆகஸ்ட் 6, 7 ஆகிய அடுத்தடுத்த நாட்களில் வெஸ்ட் இண்டீசின் அருகில் இருக்கும் அமெரிக்காவின் ப்ளோரிடாவில் நடைபெறுவதாக ஏற்கனவே அட்டவணையில் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 2024இல் நடைபெறும் ஐசிசி டி20 உலகக் கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு கிரிக்கெட் வாரியங்களும் இணைந்து நடத்துகின்றன.

அதில் ஆரம்பகட்ட குரூப் சுற்றுப்போட்டிகள் அமெரிக்காவில் வரலாற்றிலேயே முதல் முறையாக நடைபெறுவதால் அதற்கு வெள்ளோட்டம் பார்க்கும் வகையிலேயே இத்தொடரின் கடைசி 2 போட்டிகளை அங்கே நடத்துவதற்கு இருநாட்டு வாரியங்களும் இணைந்து முடிவெடுத்தன. ஆனால் அந்தப் போட்டிகளில் பங்கேற்பதற்காக இருநாட்டு வீரர்களுக்காக விண்ணப்பிக்கப்பட்டிருந்த விசாவை உரிய நேரத்தில் வழங்க அமெரிக்க அரசு தாமதப்படுத்துவதாக செய்திகள் வெளியாகியது.

- Advertisement -

கயானா அதிபர்:
அப்படி கடைசி நேரத்தில் அமெரிக்க அரசின் இந்த செயலால் கடைசி 2 போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற சந்தேகமும் ஏற்பட்டது. ஒருவேளை கடைசிவரை விசா கிடைக்காவிட்டால் வெஸ்ட் இண்டீஸ் மண்ணிலேயே அப்போட்டிகளை நடத்தி முடிப்பதற்கு அந்நாட்டு வாரியமும் தயாரானது. இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸில் இருக்கும் கயானா நாட்டின் அதிபர் இர்பான் அலி இந்தப் பிரச்சனையில் தலையிட்டு உடனடியாக விசா கிடைப்பதற்கு வழி செய்துள்ளதால் கடைசி 2 போட்டிகள் திட்டமிட்டபடி ப்ளோரிடாவில் நடைபெறும் என்று வெஸ்ட் இண்டீஸ் வாரியம் அறிவித்துள்ளது.

இதுபற்றி அந்நாட்டு வாரிய தலைவர் ரிக்கி ஸ்கெரிட் சமீபத்தில் அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு. “இது அவருடைய (இர்பான் அலி) சரியான நேரத்தில் மற்றும் செல்வாக்கு மிக்க ராஜதந்திர முயற்சியாகும். அதனால் வியாழக்கிழமை மதியம் இரு அணி வீரர்களும் அமெரிக்கா பறக்க உள்ளனர். அனைவருக்கும் விசா கிடைத்து விட்டாலும் இன்னும் பாஸ்போர்ட் கைக்கு வந்து சேரவில்லை. அது கிடைத்ததும் இரு அணி வீரர்களும் தனி விமானத்தின் வாயிலாக மியாமி நகரை சென்றடைய நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம்” என்று கூறினார்.

- Advertisement -

அமெரிக்காவில் இந்தியா:
மேலும் அமெரிக்காவுக்கு புறப்படுவதற்கு முன்பாக கயானா தலைநகர் ஜார்ஜ் டவுனில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தில் நிகழ்ந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து விட்டு புறப்பட துவங்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அதில் முதல் கட்டமாக விசா கிடைத்த ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், தினேஷ் கார்த்திக், சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஏற்கனவே அமெரிக்காவை சென்றடைந்த விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: இந்திய டி20 அணியில் நிலவும் 3 பிரச்சினைகளுக்கு தீர்வாகக்கூடிய வாஷிங்டன் சுந்தர் – ஒரு அலசல்

அவர்களுடன் எஞ்சிய அணியினர் வியாழக்கிழமை இரவுக்குள் இணைந்து கொள்வார்கள் என்றும் தெரிய வருகிறது. இதை தொடர்ந்து இந்த தொடரின் கடைசி 2 போட்டிகளில் திட்டமிட்டபடி ப்ளோரிடாவில் இருக்கும் லடார்ஹில் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு அடுத்தடுத்த நாட்களில் நடைபெறுகிறது. இதற்கான வலை பயிற்சியை ஆகஸ்ட் 5-ஆம் தேதியன்று இரு அணி வீரர்களும் துவக்க உள்ளனர்.

Advertisement