ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 19ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற்ற மாபெரும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள். மோதின அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் மட்டுமே எடுத்தது.
குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மா வழக்கம் போல அதிரடியாக விளையாடி 47 (32) ரன்கள் குவித்து நல்ல துவக்கத்தை கொடுத்தார். ஆனால் கில் 4, ஸ்ரேயாஸ் 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்ததால் ஏற்பட்ட சரிவை சரி செய்வதற்காக மிடில் ஓவர்களில் நிதானமாக விளையாடிய விராட் கோலி 54 ரன்களிலும் கேஎல் ராகுல் 66 ரன்களிலும் போராடி ஆட்டமிழந்தனர்.
ரசிகர்கள் கோபம்:
அந்த நிலைமையில் வந்த ரவீந்திர ஜடேஜா 9 ரன்களில் அவுட்டான போது எதிர்புறம் நிதானமாக விளையாடிய சூரியகுமார் யாதவ் இம்முறை தம்முடைய தரத்தை காட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் டி20 கிரிக்கெட்டில் எப்படி போட்டாலும் அடித்த நொறுக்கும் அவர் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார்.
இருப்பினும் ஒருநாள் கிரிக்கெட்டில் ஆரம்பம் முதலே சுமாராக செயல்பட்டு வரும் அவர் இத்தொடரில் டி20 கிரிக்கெட்டில் அசத்துகிறார் என்ற ஒரே காரணத்திற்காக தேர்வு செய்யப்பட்டு பெரும்பாலான போட்டிகளில் பேட்டிங் செய்வதற்கு வாய்ப்பில்லாமல் இருந்து வந்தார். அந்த சூழ்நிலையில் இப்போட்டியில் முக்கியமான நேரத்தில் வாய்ப்பு பெற்ற அவர் ஜடேஜா அவுட்டானதும் வந்த ஷமியுடன் சேர்ந்து விளையாடினார்.
அப்போது அவர் பெரும்பாலான ஓவர்களை எதிர்கொண்டு கடைசி பந்தில் சிங்கிள் மாற்றி எதிர்புறம் பேட்டிங் தெரியாத ஷமியை காப்பாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதை செய்யாத அவர் ஓவரின் 2, 3வது பந்துகளிலேயே ஸ்ட்ரைக்கை மாற்றி எஞ்சிய பந்துகளை ஷமியிடம் கொடுத்தார். அதில் ஷமி முடிந்தளவுக்கு போராடி 6 (10) ரன்களில் அவுட்டாக மீண்டும் அதே வேலையை சூரியகுமார் செய்ததால் பும்ராவும் 1 (3) ரன்னில் அவுட்டானார்.
இதையும் படிங்க: சங்ககாராவை மிஞ்சி ஐசிசி ஃபைனல்களில் விராட் கோலி உலக சாதனை.. இந்தியாவ பவுலர்கள் காப்பாற்றுவார்களா?
பொதுவாக டெயில் எண்டர்களுக்கு பேட்டிங் தெரியாது என்பதால் தோனி, லக்ஷ்மன் போன்றவர்கள் எப்படியாவது ஓவரின் கடைசி பந்தில் சிங்கிள் எடுத்து அடுத்த ஓவரையும் தாங்களே எதிர்கொண்டு முடிந்தளவுக்கு இந்தியாவை காப்பாற்ற போராடுவார்கள். ஆனால் அதை செய்ய தவறிய சூரியகுமார் கடைசியில் தாமும் பேட்டிங்கில் அசத்தாமல் வெறும் 18 (28) ரன்களில் அவுட்டாகி பெரிய ஏமாற்றத்தை கொடுத்தார். அதனால் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு நீங்கள் சரிப்பட்டு வர மாட்டீர்கள் என்று மீண்டும் ரசிகர்கள் அவர் மீது கோபத்தை வெளிப்படுத்துகின்றனர். அதனால் நீங்க ரன்கள் எடுக்காதது கூட பரவாயில்லை இப்படி செய்ததை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று ரசிகர்கள் அவர் மீது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்