IND vs RSA : இவர் சரிப்பட்டு வரமாட்டார், தேவைக்கேற்ப கிடைத்த வாய்ப்பை வீணடித்த இளம் வீரர் – ரசிகர்கள் அதிருப்தி

Ruturaj
- Advertisement -

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஜூன் 12-ஆம் தேதியான நேற்று நடைபெற்ற 2-வது போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வென்றது. ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் இரவு 7 மணிக்கு நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா 20 ஓவர்களில் சுமாராக பேட்டிங் செய்து 148/6 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்தியாவுக்கு தொடக்க வீரர் இஷான் கிசான் 2 பவுண்டரி 3 சிக்சருடன் 34 (21) ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் கொடுத்த போதிலும் மிடில் ஆர்டரில் ரிஷப் பண்ட் 5 (7) ஹர்திக் பாண்டியா 9 (12) என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தனர்.

அந்த நிலைமையில் போராடிய ஸ்ரேயாஸ் அய்யர் 40 (35) ரன்களில் அவுட்டாகி செல்ல அடுத்து வந்த அக்சர் படேல் 10 (11) ரன்களில் அவுட்டாகி மேலும் பின்னடைவை கொடுத்தார். அதனால் 130 ரன்களை கூட தாண்டாது என கருதப்பட்ட இந்தியாவை நல்ல வேளையாக தமிழகத்தின் தினேஷ் கார்த்திக் அதிரடியான 30* (21) ரன்களை சேர்த்து ஓரளவு காப்பாற்றினார்.

- Advertisement -

இந்தியா பரிதாபம்:
அதை தொடர்ந்து 149 என்ற இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்காவை பவர்ப்ளே ஓவர்களில் அற்புதமாக பந்து வீசிய புவனேஸ்வர் குமார் ஹென்றிக்ஸ் 4 (3) பிரிட்டோரியஸ் 4 (5) வேன் டெர் டுஷன் 1 (7) என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை ஒற்றை இலக்க ரன்களில் அவுட் செய்து இந்தியாவுக்கு அபார தொடக்கம் கொடுத்தார். அதனால் 29/3 என்ற மிகப்பெரிய சரிவை சந்தித்த தென் ஆப்பிரிக்காவை அடுத்து களமிறங்கிய ஹென்றிச் க்ளாஸென் மற்றொரு தொடக்க வீரர் கேப்டன் பவுமாவுடன் இணைந்து 4-வது விக்கெட்டுக்கு முக்கியமான 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மீட்டெடுத்தார்.

அதில் பவுமா 35 (30) ரன்களில் ஆட்டமிழந்தாலும் மறுபுறம் இந்தியாவை சரமாரியாக அடித்த க்ளாஸென் 7 பவுண்டரி 5 சிக்சருடன் 81 (46) ரன்கள் குவித்து வெற்றியை உறுதிசெய்து அவுட்டானார். இறுதியில் டேவிட் மில்லர் 20* (15) ரன்கள் எடுத்து பினிஷிங் கொடுத்ததால் 18.2 ஓவரிலேயே 149/6 ரன்கள் எடுத்த தென்னாபிரிக்கா 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 2 – 0* (5) என்ற கணக்கில் வலுவான முன்னிலை பெற்றுள்ளது.

- Advertisement -

ஏமாற்றும் ரூட்டு:
மறுபுறம் பேட்டிங் பவுலிங் என இரண்டிலுமே சுமாராக செயல்பட்டு சொந்த மண்ணில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளனர். தற்போதைய நிலைமையில் அடுத்த போட்டியில் வென்றால் மட்டுமே கோப்பையை வெல்ல முடியும் என்ற பரிதாப நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக இப்போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய ருதுராஜ் வெறும் 1 (4) ரன்னில் அவுட்டாகி மீண்டும் ஏமாற்றத்தை கொடுத்தார். கடந்த 2021 ஐபிஎல் தொடரில் பட்டையை கிளப்பும் வகையில் பேட்டிங் செய்த அவர் 635 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்றது சென்னை 4-வது கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார்.

அதனால் அதன்பின் இலங்கையில் நடைபெற்ற டி20 தொடரில் ஒருசில போட்டிகளில் வாய்ப்பு பெற்ற அவர் பெரிய ரன்களை எடுக்காத நிலைமையில் காயத்தால் வெளியேறினார். அதேபோல் கடந்த ஜனவரியில் தென் ஆப்பிரிக்காவில் நடந்த ஒருநாள் தொடரிலும் காயம் காரணமாக அவரின் இந்திய வாய்ப்பு பறிபோனது. அந்த நிலைமையில் இந்த வருடம் ஐபிஎல் தொடரில் சென்னைக்காக சுமாராக செயல்பட்ட அவர் 14 போட்டிகளில் 368 ரன்களை மட்டுமே எடுத்தார். இருப்பினும் ரோஹித் – ராகுல் போன்ற முக்கிய ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் இல்லாததால் அவரை நம்பி இந்திய நிர்வாகம் வாய்ப்பு கொடுத்து வருகிறது.

- Advertisement -

சரிப்பட்டு வரமாட்டார்:
அதில் முதல் போட்டியில் 23 (15) ரன்களை மட்டுமே எடுத்து அவர் நேற்று 1 (4) ரன்னில் மட்டுமே அவுட்டாகி கிடைத்த வாய்ப்பை பொன்னாக மாற்ற தவறி வருகிறார். மேலும் இதுவரை இந்தியாவுக்காக அவர் விளையாடிய 5 போட்டிகளில் 21 (18), 14 (10), 4 (8), 23 (15), 1 (4) என ஒரு அரைசதம் கூட அடிக்காமல் தனது இடத்தை நிலைப் படுத்தும் வகையில் செயல்படவில்லை. ஆனால் இந்தியா போன்ற கடும் போட்டி நிறைந்த அணியில் 5 போட்டியில் குறைந்தது ஒரு அரை சதமாவது அடித்தால் தான் அடுத்ததாக தேர்வாக முடியும்.

அதை செய்ய தவறி வரும் இவருக்கு தற்சமயத்தில் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் வாய்ப்பு பறிபோயுள்ளது என்றே கூறலாம். அதனால் இவர் மீது அதிருப்தி அடைந்துள்ள ரசிகர்கள் இவர் சர்வதேச கிரிக்கெட்டுக்கு சரிப்பட்டு வரமாட்டார் என்று விமர்சிக்கின்றனர்.

இதையும் படிங்க : IND vs RSA : தினேஷ் கார்த்திக்கு மீண்டும் நிகழ்ந்த அவமானம் ! கேப்டன் பண்ட்டை சரமாரியாக விளாசும் முன்னாள் வீரர் – நடந்தது இதோ

இருப்பினும் இந்த தொடரில் ருதுராஜ் – இஷான் தவிர வேறு நல்ல ஓப்பனிங் ஜோடி இல்லாததால் மீண்டும் இவருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிலாவது அவர் பெரிய ஸ்கோர் அடித்து வாய்ப்பை தக்க வைப்பாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement